நெல் கொள்முதல் நிலையங்களில் திமுகவினர் தலையீடு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

நெல் கொள்முதல் நிலையங்களில் திமுகவினர் இடைத்தரகர்களாகச் செயல்படுகிறார்கள். இடைத்தரகர்கள் குறுக்கீடின்றிக் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை திருவாரூர் செல்லும் வழியில், மன்னார்குடி அருகே செருமங்கலம் என்ற நேரடி கொள்முதல் நிலையத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். அங்கு நெல் விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடமும், சுமை தூக்கும் தொழிலாளர்களிடமும் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததாகச் செய்திகள் வந்தன.

அதே நேரம் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், ஆளும் கட்சியினர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும்தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டுவதாகச் செய்திகள் வருகின்றன. மேலும், தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே டோக்கன்களை வழங்குவதாகவும் விவசாயிகள், அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

குறிப்பாக, திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் பகுதிகளில், 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த நெல்லைக் கொள்முதல் செய்ய தங்க நகர், பி. மேட்டூர், வைரிசெட்டிபாளையம், எரகுடி வடக்கு மற்றும் ஆலத்துடையான்பட்டி ஆகிய ஐந்து இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது.

இங்கு பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டுவந்துள்ள நிலையில், ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக பாதிக்கப்படும் விவசாயிகள் கூறுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையால் விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்துள்ள நெல் மூட்டைகளுடன் நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

இதற்கிடையில், சமீபத்திய மழையால் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளதாகவும், குறிப்பாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 நெல் கொள்முதல் நிலையங்களில், சமீபத்திய மழையால் கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் பாழடைந்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதுபோல், பல விவசாயிகள் 20 நாட்கள் காத்திருந்தும், ஆளும் கட்சியினரின் கருணைப் பார்வை இல்லாததால், நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். கொள்முதலுக்கான டோக்கன் வழங்குவது சரிவர நடப்பதில்லை என்றும், பணம் பெற்றுக்கொண்டு ஆளும் கட்சியினர் சிபாரிசு செய்பவர்களிடம் இருந்து மட்டுமே நெல்லை அளக்க முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுவதாக அப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆளும் கட்சியினரின் இதுபோன்ற அடாவடிச் செயல்களால் மக்களின் வயிற்றுப் பசி போக்கும் விவசாயிகள் தங்கள் வயிற்றுப் பசியைப் போக்க வழி தெரியாமல் தவிக்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளைக் கசக்கிப் பிழியும் இடைத்தரகர்களை (தனது கட்சிக்காரர்களை) முதல்வர் உடனடியாகக் கட்டுப்படுத்தி, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதலை விரைவுபடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்