ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு திரைக் கலைஞர்களின் பிரச்சினை மட்டுமல்ல, எப்படிப்பட்ட கருத்துகள் கொண்ட படங்களைப் பார்ப்பது என்று தேர்வு செய்கிற உரிமையும் பறிக்கப்படுவதால் மசோதாவை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்கவேண்டும் என தமுஎகச தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நேற்று மாலை இணையவழியில் நடத்திய திரைப்படமாக்கல் திருத்தச் சட்ட வரைவு எதிர்ப்புக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
“இந்தியாவில் எத்தனையோ சவால்களைக் கடந்துதான் திரைப்படக் கலை முன்னேறி வந்திருக்கிறது. சந்தை சார்ந்த பொருளாதார நிர்பந்தங்கள் ஒருபுறம், படங்களின் உள்ளடக்கங்களுக்கு எதிரான கெடுபிடிகள் மறுபுறம் என பற்பல முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டுதான் ஒரு திரைப்படம் வெளியாக வேண்டியிருக்கிறது.
குறிப்பாக சமூக, அரசியல் பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் நிலைநிறுத்தப்பட்ட மதிப்பீடுகளை விமர்சித்து மாற்றத்தைக் கோருகிற முற்போக்கான உள்ளடக்கம் கொண்ட படங்களை மதவாத, சாதிய மேலாதிக்கவாதிகளும் பழமைவாதிகளும் நீதிமன்ற வழக்குகள் மூலமாகவும் திரையரங்குகளில் நேரடி வன்முறைகள் மூலமாகவும் முடக்க முயன்றிருக்கிறார்கள். பல படங்கள் படப்பிடிப்புக் கட்டத்திலேயே கூட தாக்குதல்களைச் சந்தித்திருக்கின்றன.
அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் வழிநின்று எடுக்கப்படும் திரைப்படங்கள் மீதான இப்படிப்பட்ட தாக்குதல்களுக்குச் சட்ட வடிவம் கொடுப்பது போல ஒன்றிய அரசானது நடப்பிலுள்ள 1952ஆம் வருடத்திய திரைப்படமாக்கல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வரைவை 2021 ஜூன் 18 அன்று வெளியிட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திருத்தங்கள் மீது பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு மிகக்குறுகிய கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட்ட விதமே அரசின் நோக்கத்தைச் சந்தேகப்பட வைக்கிறது. சமூகத்தில் ஒரு பொது விவாதம் உருவாகும் முன்பாகவே கருத்து கேட்கப்பட்டுவிட்டதாக கணக்குக் காட்டும் இந்த உத்தி அப்பட்டமான ஜனநாயக மீறல் என இந்த எதிர்ப்பரங்கம் கருதுகிறது.
நீதிபதி முகுல் முட்கல் குழு, ஷியாம் பெனகல் குழு ஆகியற்றின் பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்படுவதாகச் சொல்லிக்கொண்டாலும் அது முழு உண்மையல்ல. அனைவரும் காணத்தக்கது, குறிப்பிட்ட வயதுப் பிரிவுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களுடன் சேர்ந்து காணத்தக்கது, வயது வந்தவர்கள் மட்டுமே காணத்தக்கது என வகைப்படுத்துவதில் கூட இக்குழுக்களின் பரிந்துரை முழுமையாக ஏற்கப்படவில்லை. இன்ன வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே காணக்கூடியது என்று முன்கூட்டியே பொறுப்புத் துறப்பு எச்சரிக்கை வாசகத்துடன் வெளியிடுவது சரியாக இருக்குமென இக்கருத்தரங்கம் கருதுகிறது.
அடுத்து திரைப்படங்களைப் போலியாக நகலெடுப்பதைத் தடுப்பது தொடர்பான சட்டத் திருத்தத்தைப் பொறுத்தவரை, அது இந்தத் தொழிலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், போலியாக நகலெடுப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் கொள்வதற்கு பதிலாக தண்டனையை அதிகப்படுத்துவது பற்றியதாக உள்ளது.
ஏற்கெனவே உள்ள சட்டத்தில் போதுமான தண்டனைப் பிரிவுகள் இருக்கும் நிலையில், மேற்கொண்டும் தண்டனையை அதிகரிப்பதனால் மட்டுமே குற்றங்கள் குறைந்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நகலெடுக்க முடியாதபடி நவீன தொழில்நுட்பங்கள் மூலமாகக் கண்காணிக்கும் பொறுப்பினை அரசே ஏற்பதுதான் சரியாகுமெனவும் இவ்வரங்கு கருதுகிறது.
ஏற்கத்தக்க தோற்றத்துடன் இரண்டு திருத்தங்களை முன்வைத்துள்ள ஒன்றிய அரசு தந்திரமாக இவற்றுடன் ஏற்கவே முடியாத கடுமையாக எதிர்த்து தடுக்கவேண்டிய ஒரு திருத்தத்தையும் சேர்த்து முன்மொழிந்துள்ளது. இந்தத் திருத்தத்தைத் திணிப்பதற்காகத்தான் மேற்சொன்ன இரண்டு திருத்தங்களும் சேர்க்கப்பட்டனவோ என்று ஐயுற வேண்டியுள்ளது.
திரைப்படச் சான்றளிப்பு வாரியத்தின் முறையான சான்றளிப்புடன் வெளியாகிவிட்ட ஒரு படத்தின் மீது யாரோ ஒரு தனிமனிதர் அல்லது அமைப்பிடமிருந்து புகார் வருமானால், அந்தப் படத்தைத் திரும்பப் பெற்று சான்றிதழை மறுபரிசீலனை செய்யுமாறு திரைப்படச் சான்றளிப்பு வாரியத்திற்கு ஆணையிடும் அதிகாரத்தை செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தனக்குத்தானே வழங்கிக்கொள்கிற இத்திருத்தம் சங்கரப்பா எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிரானது என இவ்வரங்கு சுட்டிக்காட்டுகிறது. திரைப்படச் சான்றளிப்பு வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட பிறகு அதில் தலையிட அரசுக்குச் சட்டத்தில் இடமில்லை என கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சொல்லப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சிதைத்து கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும்விதமான இந்தத் திருத்தத்தை அரசு முன்மொழிந்துள்ளது.
வாரியம் தவறான சான்றளிக்கிறது அல்லது சான்றளிக்க மறுக்கிறது என்றால் மேல்முறையீடு செய்வதற்கு என இருந்து வந்த, முற்போக்கான பல படங்கள் மக்களிடம் வருவதற்கு உதவியாக இருந்த தீர்ப்பாயத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு தன்னிச்சையாகக் கலைத்துவிட்டது. சான்றிதழ் தொடர்பான முறையீடுகளை மட்டுமே கவனித்துவந்த இந்தத் தீர்ப்பாயத்தைக் கலைத்ததன் மூலம் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும், ஏற்கெனவே லட்சக்கணக்கான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் தேங்கியிருக்கும் நீதிமன்றங்களைத்தான் பெரும் பணச் செலவோடு நாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இப்போது, மேலுமொரு பலத்த அடியாக திரைப்படமாக்கல் சட்டத்தில் இந்த விதி திணிக்கப்படுகிறது. இது, இனிமேல் சான்றிதழ் பெறப்போகிற புதிய படங்களுக்கு மட்டுமல்ல, கடந்த காலங்களில் சான்றிதழ் பெற்று மக்களிடையே மாற்றுச் சிந்தனைகளைக் கொண்டுசென்ற பழைய படங்களுக்கும் பொருந்தும் என்று திரைத்துறையின் நலனில் அக்கறையுள்ளவர்கள் வெளிப்படுத்தும் கவலையை இவ்வரங்கம் பகிர்ந்துகொள்கிறது.
சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கிற பிற்போக்குத்தனங்களுக்கும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும், பாலினப் பாகுபாடுகளுக்கும் எதிரான முற்போக்குச் சிந்தனைகளையும், ஊட்டப்படும் மதவெறிக்கு எதிரான நல்லிணக்கக் கருத்துகளையும் வலுவாகச் சொல்கிற படங்களை ஒடுக்குவதற்கே தனிமனிதர்களின் பெயராலும் அமைப்புகளின் பெயராலும் இந்த விதி கையாளப்படும் என்பது வெளிப்படை. இது திரைக்கலைஞர்களின் பிரச்சினை மட்டுமல்ல, எப்படிப்பட்ட கருத்துகள் கொண்ட படங்களைப் பார்ப்பது என்று தேர்வு செய்கிற உரிமையும் பறிக்கப்படுவதால் மக்களின் பிரச்சினையுமாகும்.
உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத சர்வாதிகாரத்தனமான இந்த விதியை விலக்கிக்கொள்ள வலியுறுத்தும் திரையுலகப் படைப்பாளிகள், கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்போர், ஜனநாயகச் சக்திகள் ஆகியோரோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்துகிற இந்தக் கருத்தரங்கம் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. மத்திய அரசு இவர்களது எதிர்ப்புக்கும், படைப்புச் சுதந்திரத்திற்கும் மக்களின் பன்முகக் கருத்துகளை அறியும் உரிமைக்கும் மதிப்பளித்து, இந்தச் சட்டவிதியைக் கைவிட வேண்டும் என்று இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
திரைப்படச் சான்றிதழுக்கான மத்திய வாரியம், அதன் பெயர் சரியாகச் சுட்டுவதைப் போல திரைப்படங்களை அவற்றின் உள்ளடக்கம், காட்சியாக்கம் சார்ந்து வகைப்படுத்தி அதற்கேற்ற சான்றிதழை வழங்கும் பணியை மட்டுமே செய்வதற்கான தன்னதிகாரமுள்ள அமைப்பாகும். ஆனால், நடைமுறையில் அது வரம்புமீறி குறுகிய அரசியல் சாய்மானங்களுடன் திரைப்படங்களைத் தணிக்கை செய்யும் அமைப்பாக மாறி படங்களின் கருத்துச்செறிவையும் படைப்பழகையும் சிதைத்துவருகிறது.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் படியான எந்தவொரு வடிவமும் முன்தணிக்கைக்கு ஆளாக வேண்டியதில்லை என்கிற நிலையை எட்டியுள்ள நாட்டில் திரைப்படங்கள் மட்டும் தணிக்கையை எதிர்கொள்ளும் அவலத்தை சட்டரீதியாகத் தடுக்கும் விதி இத்திருத்த வரைவில் சேர்க்கப்பட வேண்டும்.
அதேபோல சான்றளிப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை ஒன்றிய அரசு மீண்டும் உருவாக்க வேண்டும். மேற்சொன்ன இக்கோரிக்கைகளுக்காகத் திரைத்துறையினர் மட்டுமன்றி கருத்துரிமையிலும் அரசியல் சாசன மாண்புகளிலும் நம்பிக்கையுமுள்ள அனைவரும் குரல் கொடுக்க முன்வருமாறு இவ்வரங்கம் கேட்டுக்கொள்கிறது”.
இவ்வாறு தமுஎகச தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago