பெட்ரோல், டீசல் விலை உயர்வை மோடி அரசு குறைக்காவிட்டால் தொடர் போராட்டம்: சைக்கிளில் வந்த நாராயணசாமி எச்சரிக்கை  

By அ.முன்னடியான்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியின் அனைத்து பெட்ரோல் நிலையங்கள் முன்பும் திரண்டுவந்த காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக 10 நாட்களுக்குத் தொடர்ந்து, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரியில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கண்டித்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க் முன்பும் கையெழுத்து இயக்கம் 7-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு இன்று (ஜூலை 7) காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி சைக்கிள் ஓட்டிவந்து பங்கேற்று தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து பெட்ரோல் பங்க்கில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி பொதுமக்களிடம், மத்திய அரசுக்கு எதிராகக் கையெழுத்து பெற்றனர்.

பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து விண்ணைத் தொட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.35, டீசல் விலை ரூ.93. சமையல் எரிவாயு விலை ரூ.850 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65, டீசல் விலை ரூ.53, சமையல் எரிவாயு ரூ.350க்கு கொடுக்கப்பட்டது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 130 டாலர் இருந்தது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் உலக சந்தையில் 70 டாலராக உள்ளது.

ஆனாலும், மோடி தலைமையிலான அரசில் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டிவிட்டது. தேர்தல் சமயத்தில் சதம் அடிக்கும் என்று நாங்கள் கூறினோம். அது தற்போது நடந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியின்போது 17 பைசா பெட்ரோல் கட்டணம் உயர்ந்தபோது, கண்டனம் தெரிவித்து பாஜக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போராட்டம் நடத்தினார்.

ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் 93 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 16 முறை விலை உயர்வு நடைபெற்றுள்ளது. கரோனா காலத்தில் கடைகள் மூடல், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள இந்நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப்பெரிய அளவில் மக்களை பாதித்துள்ளது. இல்லத்தரசிகளையும் பாதித்துள்ளது.

இந்த விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை தொடர் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசைக் குறை கூறுகின்றனர். மத்திய அரசு தவறான கொள்கையில் இருக்கின்றனர் என்கின்றனர்.

எனவே மோடி அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர் போராட்டமாக இருக்கும். தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல், டீசல், சமையல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

தற்போது, பெட்ரோல் விலை உயர்வுக்கு அவர் என்ன பதில் கூறுவார் எனத் தெரியவில்லை. புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்களில் யாருக்கு எந்த இலாகா என்பது தெரியாமல் உள்ளனர். அலுவலகம் வந்து கண்ணைக் கட்டிவிட்டது போல் அமர்ந்திருக்கின்றனர். பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நம்பிக்கை கிடையாது. இலாகாவை ஒரே நாளில் பிரித்துக்கொடுக்கலாம்.

பாஜக முக்கிய இலாகாவைக் கேட்பதால் காலதாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர். அது அவர்களின் உட்கட்சி விவகாரம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. ஒரு பக்கம் ஆளுநர் ஆளுகிறார். முதல்வர் அலுவலகம் வந்து செல்கிறார். அவரால் ஒன்றும் செய்ய முடியுவில்லை.

கரோனா நிவாரணம் ரூ.3,000 அறிவிக்கப்பட்டு, ரூ.1,500க்கு மேல் கொடுக்க முடியவில்லை. நிதிப் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், புதுச்சேரியில் ஒரு பணியும் நடைபெறவில்லை. எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அமைச்சர்கள் சட்டப்பேரவைக்கு வந்து உட்கார்ந்துவிட்டுச் செல்வது மட்டுமே நடக்கிறது.

அமைச்சரவை அமைத்து 2 மாதங்கள் ஆகும் நிலையில் இலாகாக்கள் பிரிக்காதது கூட்டணிக்கே மிகப்பெரிய அவப்பெயர். ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய கேள்விக்குறி. ஆகவே, உடனே அமைச்சர்களுக்கு இலாகாக்களை அறிவித்து போர்க்கால அடிப்படையில் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.’’

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE