வந்தவாசி அருகேயுள்ள தேசூர் பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்த கல்வெட்டுகளும் புடைப்புச் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினர் சமீபத்தில் வந்தவாசி அடுத்துள்ள தேசூர் பகுதியில் உள்ள தொல்லியல் தடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தேசூர் ஏரியின் மதகின் அருகே ஒரு கல்வெட்டு, கெங்கம்பூண்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு, மகமாயி திருமணி கிராமத்தில் ஒரு கல்வெட்டு என மூன்று கல்வெட்டுகளைக் கண்டெடுத்தனர்.
இந்தக் கல்வெட்டுகள் தொடர்பாக வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், வரலாற்று ஆய்வாளர்கள் பழனிச்சாமி, வெங்கடேஷ், முனைவர் எ.சுதாகர், மின் வாரிய அலுவலர் பழனி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், கல்வெட்டுகள் அனைத்தும் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நீர் மேலாண்மை தொடர்பானவை எனத் தெரியவந்தது.
தமிழ்நாட்டின் பல இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் ஏரி வெட்டுதல், மதகு அமைத்தல், பாசன வசதி செய்தல், நீர்ப் பங்கீடு, பராமரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை விவரங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏரி அமைத்தலும் அதனைப் பாதுகாத்தலும் முக்கிய அறச்செயலாக அக்காலத்தில் இருந்துள்ளதை இக்கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது.
» சரியும் மேட்டூர் நீர்மட்டம்; கர்நாடகத்திடம் காவிரி நீரைக் கேட்டுப் பெற வேண்டும்: ராமதாஸ்
அந்த வரிசையில் வந்தவாசி வட்டத்துக்கு உட்பட்ட தேசூர் பகுதியில் கிடைத்த கல்வெட்டுகள் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. இதில், கெங்கம்பூண்டி கிராமத்தின் நடுவே தற்போது கடவுள் வழிபாடாக உள்ள கல்வெட்டுக் கற்பலகையைக் கல்வெட்டியல் அறிஞர் சு.இராஜகோபால் படித்ததில் இந்தக் கல்வெட்டு 10ஆம் நூற்றாண்டில், பராந்தக சோழனின் 30-வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. சிங்கபுர நாட்டைச் சேர்ந்த கங்கபூண்டி என்ற ஊரில் உள்ள மனங்காடுளங்கிடாசானை காலமுக்தி என்பவர் பெரிய மடை ஒன்று செய்வித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் மடையின் கோட்டுருவமும் வரையப்பட்டுள்ளது.
கல்வெட்டுடன் கோட்டுருவம் அமைந்த அரிய கல்வெட்டு இதுவாகும். அதேபோல், தேசூர் பெரிய ஏரி மதகின் அருகில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கன்னரதேவனின் 22-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும். இந்தக் கல்வெட்டில் ஏழு வரிகள் உள்ளன. இந்த கல்வெட்டு முழுமை பெறாமல் இருந்தாலும் ஏரி மதகு சீர் செய்யும்போது பூமியின் அடியில் கிடைத்தது. கல்வெட்டு இருந்த இடத்தில் பழைய அகமடை மதகின் இரண்டு புறம் உள்ள கற்பலகையில் அழகான வேலைப்பாடுகளும் அமைந்துள்ளன.
ஏரியில் இருந்து மதகு வழியாக நீர் வெளியேறும் தொழில்நுட்பத்தினை விளக்குவது போன்று புடைப்புச் சிற்பமும் காணப்படுவது இதன் சிறப்பாகும். இங்கு கிடைத்த கல்வெட்டின் மூலம் இந்த மதகு கன்னரதேவன் காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஏரியின் வெளிப்பகுதியில் தாமரைப்பதக்கம் போன்ற தூண் பலகை காணப்படுகிறது. இதில், அசோகச் சக்கரத்தில் உள்ளது போன்று 24 இதழ்கள் அமைந்துள்ளன. இதுவும் இவ்வூரில் கிடைக்கப்பெறும் அரிதான சிற்ப வகையாகும்.
மகமாயி திருமணி கிராமத்தின் மாந்தாங்கல் பகுதியில் உள்ள ஏரியில் உள்ள பாறையில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு எழுத்தமைப்பின்படி 9 அல்லது 10-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தக் கல்வெட்டு, ஏரிக்கு ஐநூற்றுவர் சபை தூம்பு அமைத்துக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
இதன் மூலம் தேசூர் பகுதியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் மதகில் புடைப்புச் சிற்பமும், தாமரைப்பதக்கம் உள்ள தூணும் அப்பகுதியின் அரிய கலைப் பொக்கிஷமாகும். இவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதன் மூலமும் பண்டைய கால நீர் மேலாண்மைத் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள முடியும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago