குற்றப்பத்திரிகைகளுக்கு 7 நாளில் ஒப்புதல் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By கி.மகாராஜன்

குற்றப்பத்திரிகைகளுக்கு 7 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு குற்ற வழக்குகள் இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சிந்துபட்டியை சேர்ந்த மச்சக்காளை மகன் ரகுவரன் என்ற அன்பு (32). இவரை கஞ்சா வழக்கில் சிந்துபட்டி போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் ரகுவரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை ரத்து செய்து, ரகுவரனை விடுதலை செய்யக்கோரி மச்சக்காளை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் மனுதாரின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் பெற வேண்டியதில்லை. இருப்பினும் அரசு வழக்கறிஞரிம் ஒப்புதல் பெற வேண்டும் என விசாரணை அதிகாரிகள் நினைக்கின்றனர்.

இதனால் குற்றப்பத்திரிகைகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் அல்லது குற்ற வழக்கு இயக்குனராக அதிகாரிகள் அதிபட்சம் 7 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என சென்னை குற்ற வழக்கு இயக்குனர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

குண்டர் சட்ட மனுக்கள் மீது தாமதம் இல்லாமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு பல வழக்குகளில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு வந்தால், அது தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேக்ஸ், இ-மெயில், வாட்ஸ்அப்பில் பெற்று தாமதம் இல்லாமல் முடிவெடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க அரசு விடுமுறைகளை கழித்து 25 நாள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாமதத்துக்கான காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை. இதனால் மனுதாரரின் மனு ஏற்கப்படுகிறது. வேறு வழக்கு இல்லாத நிலையில் மனுதாரரின் மகனை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE