பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின் பணி போற்றுதலுக்குரியது: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாராட்டு

பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணி போற்றுதலுக்குரியது என உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.

மதுரை ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆதரவற்றோர்களுக்கு ஆயத்த ஆடைகள் வழங்கும் விழா, தன்னலமின்றி பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டு விழா மதுரை நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் பவுண்டேஷன் சார்பில் ஆஸ்டின்பட்டியில் நடைபெற்றது.

விழாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமை வகித்தார். டாக்டர் காந்திமதிநாதன் வரவேற்றார். ஆதரவற்றோர்களுக்கு ஆடைகள் மற்றும் பழங்களை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கினார். மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் நீதிபதி பேசியதாவது:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப்பானர்ஜி, தலைமை நீதிபதியாக பதவியேற்க மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னைக்கு காரில் வந்தார். தமிழகத்தில் நுழைந்த போது நீதித்துறை அலுவலர்கள் அவரை தேநீர் அருந்த ஒரு ஓட்டலுக்கு அழைத்த போது செல்ல மறுத்துவிட்டார். அவர் பொது நிகழ்வில் பங்கேற்க விரும்பாதவர். அவரைப் போல் நானும் பொது நிகழ்வில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என நினைத்திருந்தேன்.

ஆஸ்டின்பட்டி மருத்துவமனையை பார்வையிட்ட போது இங்கு பணிபுரியும் அனைவரும் எத்தனை ஈடுபாடுடன் பணிபுரிகிறார்கள் என்பதை அறிந்து நெகிழ்ந்து போனேன். குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற பணி போற்றுதலுக்குரியது.

இவ்வாறு நீதிபதி பேசினார்.

நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் பவுண்டேஷன் மேலாண் அறங்காவலர் தசெல்வ கோமதி, சோகோ அறக்கட்டளை மேலாண் அறங்காவலர் அ.மகபூப் பாட்ஷா, தொழிற்சங்க நிர்வாகி எஸ்.சம்பத் உள்ளிட்டோர் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE