குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன்

By எஸ்.ராஜா செல்லம்

குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தமிழக அரசால் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என, தருமபுரியில் நடந்த அரசு விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

தருமபுரியில் சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இலவசத் தையல் இயந்திரம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று (ஜூலை 06) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி விழாவுக்குத் தலைமை வகித்தார். தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:

"தமிழகத்தில் பெண்கள் கல்வியில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக, 1989-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருமண நிதி உதவித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடக்கத்தில், ரூ.5,000 நிதியுதவி அளிக்கப்பட்டு வந்த இந்த திட்டத்தில், பின்னர் 2009-ல் ரூ.25,000 என உயர்த்தி வழங்கப்பட்டது.

இதனால் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்த திட்டத்தில் தாலிக்குத் தங்கமும் சேர்த்து கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 4 கிராம் தங்கம் வழங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் 8 கிராமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், அதற்கான நிதி உதவி அளிக்கப்படவில்லை. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக திருமண உதவித் திட்டம் பயனாளிகளைச் சென்றடையவில்லை. இவ்வாறு 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் தமிழகத்தில் நிலுவையில் உள்ளன.

திருமணம் செய்வோருக்கு உடனடியாக உதவிடும் வகையில், செயல்படுத்தப்பட்டு வந்த இந்த உதவித் திட்டம் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதன் அடிப்படையில், நிலுவை விண்ணப்பங்களின் மீது உடனடி நவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்பேரில், தற்போது திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, 2 பெண் குழந்தைகள் பெற்ற குடும்பத்தில் உள்ள அக்குழந்தைகளின் நலன் காக்க வைப்புத் தொகை அவர்களின் பெயரில் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. 23 ஆயிரம் பயனாளிகளுக்கான இந்தத் தொகை முதிர்வடைந்த நிலையில் வழங்கப்படாமல் உள்ளது. இதனையும் விரைந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைத் திருமணங்கள் செய்வதால் பெண்களின் கல்வி, எதிர்காலம், உடல் நலன் பாதிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, குழந்தைத் திருமணங்களைத் தடுக்க அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது.

தொடர்ந்து குழந்தைத் திருமணங்களைத் தடுக்க திருமணம் செய்துகொள்வோர், அதில் பங்கேற்போர் என அனைவர் மீதும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிராம அளவில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் ஜூன் வரை 35 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழக அரசால் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் இட வசதியின்மை காரணமாக, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு தொண்டு நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், விரைந்து இந்த மையம் அரசு கட்டிடத்தில் இயங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கரோனா ஊரடங்கின்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4,000 நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்து வழங்கியது. இந்த நிதியுதவி கேட்டு திருநங்கைகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு அந்த நிவாரணத் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதற்காக திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குக் காப்பீடு மற்றும் பராமரிப்புத் தொகை வழங்கும் திட்டமும் தமிழக அரசால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது".

இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல, நல்லம்பள்ளி வட்டம் கோயிலூரில் தனியார் காப்பகத்தில் செயல்படும் தொட்டில் குழந்தை மையத்தையும் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்