ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021-ஐத் திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில் மத்திய அரசு, 1952ஆம் ஆண்டு ஒளிப்பதிவுச் சட்டத்தில் சில முக்கியத் திருத்தங்களை, ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 என வெளியிட்டது. இந்த வரைவுச் சட்டத்தில் உள்ள திருத்தங்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் உள்ளதாக நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் குரல் எழுப்பி வந்தனர். இதனைச் சுட்டிக்காட்டி நேற்று (ஜூலை 05) முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்து கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
இந்நிலையில், இந்த ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவைத் திரும்பப் பெறுமாறும், இது தொடர்பான முயற்சிகளைக் கைவிடுமாறும் கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு இன்று (ஜூலை 06) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
» இருப்பைவிட அதிகமாகத் தடுப்பூசி செலுத்தியது எப்படி?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
» மேட்டூர் அணை நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாகக் குறைப்பு: விவசாயிகள் கவலை
"ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த திரைத்துறையினர் என் கவனத்திற்குக் கொண்டுவந்த அச்சங்கள் குறித்து இக்கடிதத்தை எழுதுகிறேன்.
இந்த வரைவு மசோதா, திரைத்துறைக்கு மட்டுமல்லாமல் கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள சமூகத்தின் பல தரப்பினரிடமும் தீவிர அச்சத்தை உருவாக்கியுள்ளது. எழுச்சிமிக்க ஒரு ஜனநாயக சமூகம், படைப்புச் சிந்தனை மற்றும் கலை சுதந்திரத்திற்கான தேவையான வெளியை அளிக்க வேண்டும். ஆனால், இந்தத் திருத்த மசோதா, 20 ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் மத்திய அரசிடமிருந்து நீக்கப்பட்ட திருத்த அதிகாரங்களை மீண்டும் தக்கவைப்பதன் மூலம், அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி) பிரிவு 5(ஏ)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்களுக்குச் சான்றளிக்கிறது. சில குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில், சான்றளிக்காமல் அத்திரைப்படத்தை நிராகரிக்கவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. மேலும், இச்சட்டத்தின் பிரிவு 5(பி)-ன் கீழ், திரைப்பட உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் உள்ளன. இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு படைப்பைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் சட்டப்பிரிவுகளைச் சேர்ப்பது 21-ம் நூற்றாண்டில் அதிகப்படியானதாகத் தோன்றுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி, ஒரு திரைப்படம் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் பொதுமக்கள் பார்வைக்குச் சான்றளிக்கப்பட்டால், அது முதலில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருகிறது. ஏனெனில், சட்டம் மற்றும் ஒழுங்கு மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இப்போது, மத்திய அரசு, முன்மொழிந்துள்ள மசோதாவின் மூலம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, மாநில அரசு மற்றும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் அதிகாரங்களை மத்திய அரசு மீற முயல்கிறது. தற்செயலாக, இந்தத் திருத்தத்தின் முன்னோடியாக, சிபிஎஃப்சிக்கு எதிராக மேல்முறையீட்டு அமைப்பாகச் செயல்பட்டு வந்த திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு வாரியம் அகற்றப்பட்டது.
சிபிஎஃப்சி சான்றளித்த பின்னர், மறுசீரமைப்பு அதிகாரத்தை மீட்டெடுக்கும் வரைவு திருத்தம் இந்திய அரசியலமைப்பின் 19 (2)-வது பிரிவின் கீழ் 'நியாயமான கட்டுப்பாடு' பிரிவின் தவறான பயன்பாடு என்றும், இந்தத் திருத்த மசோதா பொதுச் சமூகத்தில் சரியான சிந்தனையை ஊக்குவிப்பதற்கு எதிராகவும் உள்ளது என்றும் கூற விரும்புகிறேன். இது, திரைத்துறையின் படைப்புச் சிந்தனையை முடக்குவதாகும். மேலும், எப்படித் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானதாகும். கருத்துச் சுதந்திர உரிமையைத் திருப்பி எடுப்பது ஜனநாயகத்தை பலவீனமடையச் செய்யும்.
மேலும், மூன்று பிரிவுகளின் கீழ் சான்றிதழின் வயது வாரியாகத் தொகுத்தல் மற்றும் சில நடைமுறைச் சிக்கல்கள் இதில் உள்ளன என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சி.பி.எஃப்.சி சான்றளித்த பின்னர் ஒரு திரைப்படத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது, திரைப்பட உருவாக்கத்தை மிகவும் ஆபத்தான மற்றும் நிச்சயமற்ற ஒரு தொழிலாக மாற்றிவிடும்.
இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021-ஐத் திரும்பப் பெற வேண்டும் எனவும், சிபிஎஃப்சி சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம், முற்போக்கான தேசம், கலை, கலாச்சாரம் மற்றும் திரைப்படத் தயாரிப்பை உள்ளடக்கிய படைப்புச் சிந்தனை, பயமின்றி மலரும்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago