14 இடங்களில் ஐ.டி பூங்காக்கள்: தமிழகத்தை ஐ.டி துறையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக மாற்றிட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் 

By செய்திப்பிரிவு

“தமிழகத்தில் 14 இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும், தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டினை நாட்டிலேயே சிறந்த மாநிலமாக மாற்றிட வேண்டும்” என தகவல் தொழில்நுட்பவியல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“தகவல் தொழில்நுட்பவியல் துறை மூலம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள், மின்னாளுமைத் திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (5.7.2021), தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மறைந்த முதல்வர் கருணாநிதியால் இதற்கெனத் தனியாக “தகவல் தொழில்நுட்பவியல் துறை” என்ற துறை 1998-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பெறப்பட்ட மனுக்களின் மீது “முதலமைச்சர் உதவி மையம்” வாயிலாக விரைந்து தீர்வு காண்பது, பல்வேறு அரசுத் துறைகளின் மின்னணு சேவைகளை மக்கள் எந்நேரமும், எங்கிருந்தும் பெற்றிடச் செய்வது, இ-சேவை மையங்கள் மற்றும் மின்மாவட்டத் திட்டத்தின் வாயிலாகக் கூடுதலாக அரசின் சேவைகளை அளித்தல்.

ஆழ்நிலை மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தரவுசார் முடிவு ஆதார அமைப்பு, மாநிலக் குடும்பத் தரவுத்தளம் மற்றும் நம்பிக்கை இணையக் கட்டமைப்பு ஆகியவை உருவாக்கம் மற்றும் அரசுத் துறைகளில் காகிதப்பயன்பாட்டைக் குறைத்திட மின்னணு அலுவலக மென்பொருளைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், எல்காட் நிறுவனம் அமைத்துள்ள 8 தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் (எல்கோசெஸ்களில்) செயல்படும் நிறுவனங்களின் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி, பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தமிழகத்தில் அமைத்திடச் செய்வதன் மூலம் மாநிலத்தில் முதலீடுகளைப் பெருக்குதல்.

அரசுத் துறைகளுக்கான வன்பொருள்/மென்பொருள் கொள்முதலை மேம்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புகளான மாநில தரவு மையம், தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்பு, பேரிடர் மீட்பு மையம், மேகக் கணினிய சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்திட முதல்வர் அறிவுறுத்தினார்.

அரசுத் துறைகளில் தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு, கணினித் தமிழ் வளர்ச்சி, மாநிலத்தின் அனைத்துக் கிராமங்களையும் கண்ணாடி இழை வலையமைப்பு மூலம் இணைத்து அதிவேக இணைய வசதிகளை ஏற்படுத்த உதவும் ‘பாரத்நெட்’ மற்றும் ‘தமிழ்நெட்’ திட்டங்களைச் செயல்படுத்திடவும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான கேபிள் டிவி சேவைகள் அளிக்கவும், அரசுத்துறை அலுவலர்களுக்கு உயர் தொழில்நுட்பங்களில் பயிற்சியளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மாநிலத்தில் மின்னாளுமையை மேம்படுத்துதல் குறித்து விவாதித்த முதல்வர், திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டினை நாட்டிலேயே சிறந்த மாநிலமாக மாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தகவல் தொழில்நுட்பவியல் துறையின்கீழ் ஆழ்நிலைத் தொழில்நுட்பத்திற்கென ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், தமிழகத்தில் 14 இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தைக் கருத்தில் கொண்டு, அவற்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 4 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து வெளிவரும் சூழலில், அவர்களின் செயல்திறன்களைத் திறம்படப் பயன்படுத்திடவும், தகுந்த வேலைவாய்ப்பினை அவர்கள் பெற்றிடும் வகையிலும் அமைந்த தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்கச் சூழலை ஏற்படுத்துவதன் மூலம் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும். இந்த இலக்கினை அடையும் நோக்கில் உரிய முயற்சிகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அரசுத் துறைகளின் சேவைகளை மக்கள் எங்கேயும், எந்த நேரத்திலும் பெறுவதை உறுதி செய்திடும் வகையில் அவர்கள் தமது இல்லத்திலிருந்தே அவற்றைக் கைபேசி மற்றும் இணைய வழியில், குறிப்பாக தமிழ் மொழிவழியாகப் பெற்றிட வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும், உலகத் தமிழர்கள் தம் இருப்பிடத்திலிருந்தே இணைய வழித் தமிழ் மொழியைக் கற்றிடவும், தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகம், தமிழர் வரலாறு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளவும் உரிய நடவடிக்கைகளைத் தமிழ் இணையக் கல்விக்கழத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல், தகவல் தொழில்நுட்பவியல் துறை சிறப்புப் பணி அலுவலரும், காவல்துறை கூடுதல் இயக்குநருமான ஜி. வெங்கட்ராமன், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் மின்னாளுமை ஆணையர் & தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமைச் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) அஜய் யாதவ்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) வீ.ப. ஜெயசீலன், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ.கே. கமல் கிஷோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்