“படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கிட செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் விரைவுப்படுத்தப்பட வேண்டும்” என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
“நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (5.7.2021) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கரோனா பெருந்தொற்றினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் இந்த நிதியாண்டில் வரவு செலவு திட்ட முதலீட்டு மானிய ஒதுக்கீட்டில் 60 விழுக்காடான ரூ. 168.00 கோடி, 1975 தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் உடனடியாக விடுவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவாலான முறைசார்ந்த கடன் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்க செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு 2021-22 ஆம் நிதியாண்டில் முன்னுரிமை அளித்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தவறாமல் எய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சுயவேலைவாய்ப்புத் திட்டங்களில் ஆதிதிராவிடர்/ பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகிய பயனாளிகளின் விகிதாசார பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டை, இந்தியாவின் மிகவும் துடிப்பான புத்தாக்கத்திற்கு உகந்த மாநிலமாக்க வேண்டுமென்று முதல்வர் கேட்டுக்கொண்டார். மேலும், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும், இறக்குமதி தொழிலுக்குத் தேவையான உதவிகளையும் செய்ய ஏதுவாகச் சிறப்புத் திட்டங்களைக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை உருவாக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
நீண்ட காலமாக சிட்கோவில் நிலுவையிலுள்ள, மனை ஒதுக்கீடுதாரர்களுக்குப் பட்டா வழங்குதல் மற்றும் தொழில் மனைக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகமான விலையைக் குறைத்திட தீர்வுகாண வேண்டும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், விண்வெளி வானூர்திகள், ரோபாடிக்ஸ் மற்றும் துல்லியமான கருவிகள் உற்பத்தி (Aerospace, Robotics & Precision Manufacturing) ஆகிய உயர் தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட ஏதுவாக திட்டங்களை உருவாக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை உருவாக்கிட ஏதுவாக, தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி, தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் விபு நய்யர், டான்சி மேலாண்மை இயக்குநர் எஸ். விஜயகுமார், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் அருண் ராய், தொழில் வணிக ஆணையரகத் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், சிட்கோ நிறுவன மேலாண்மை இயக்குநர் இரா. கஜலெட்சுமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்”.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago