தமிழகத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகள் பெற நடவடிக்கை: மா.சுப்பிரமணியன் தகவல்  

தமிழகத்துக்கு ஜுலை மாதத்துக்கான மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 71 லட்சம் தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 05) ஆய்வு செய்தார்.

அப்போது, ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் சேமிப்பு வங்கியை திறந்து வைத்தார். பின்னர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தலா ரூ.18 லட்சம் மதிப்பில் 2 மருத்துவ பல்நோக்கு வாகனங்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்து, ரூ.6.79 லட்சம் மதிப்பில் 116 பேருக்கு நலத்திட்ட உதவிகளை இரண்டு அமைச்சர்களும் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர், அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறும்போது, "திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் மற்றும் பெண்களுக்கு என, 2 நல வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்களை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3-வது அலை, குழந்தைகளை தாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

30 தீவிர சிகிச்சை படுக்கைகள்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்காக 30 தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் 150 படுக்கைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பழைய அரசு மருத்துவமனையில் 350 படுக்கைகளுக்கு (பொது) ஆக்சிஜன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தன்னிறைவு பெற்ற மருத்துவமனையாக மாற்றப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை, ஆட்சி பொறுப்பு ஏற்கும்போது இருந்ததைவிட, 9 மடங்கு குறைந்துள்ளது. மாவட்டத்தில் 4,000 பேருக்கு தினசரி கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 1.70 லட்சம் பரிசோதனைகள் தினசரி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தொற்று குறைந்து வந்தாலும், தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதே அளவில் நிடிக்கிறது.

முதல் நகராட்சியாக தி.மலை

தமிழகத்தில் 1.57 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜுலை மாதத்துக்கான, மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 71 லட்சம் தடுப்பூசி வர வேண்டும். 10 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. எஞ்சிய தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஊராட்சி, தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தன்னிறைவு பெற்றுள்ளது. பழங்குடியினர் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டமாக நீலகிரி உள்ளது.

அதேபோல், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மிக தலமாக உள்ள திருவண்ணாமலை நகராட்சியில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதில், நாட்டில் முதல் நகராட்சியாக மாற்ற ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜுலை இறுதிக்குள், நகராட்சி மக்கள் அனைவருக்கும் முழுமையான அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

இதய நோய் சிகிச்சை

முதல் அலையில் இருந்த வீரியத்தை விட, 2-வது அலையில் கரோனா தொற்றின் வீரியம் கூடுதலாக இருந்தது. 3-வது அலையை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். 1 லட்சம் புதிய படுக்கைகளில் 90 சதவீதம் ஆக்சிஜன் வசதி கொண்டது. சித்தா, ஆயுர்வேதா, யூனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைக்காக 75 இடங்களில் 100 முதல் 150 படுக்கைகள் உள்ளன. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்காக வேலூருக்கு பரிந்துரை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதய நோய் சிகிச்சைக்காக பிரத்யேக கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்க துறை ரீதியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்திய மக்கள் இயக்கத்தின் மூலமாக 2-வது அலை தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 95 சதவீத மக்கள், முதல்வரின் அறிவுரைகளை கடைப்பிடித்து வருகின்றனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார். அதனால், தடுப்பூசி செலுத்த வேண்டும் என, மக்கள் போராடும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

அப்போது, ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவத் துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE