வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை, தமிழர்களுக்கு மட்டுமே அரசு வேலை; பாமக பொது நிழல் நிதிநிலை அறிக்கையின் 126 சிறப்பு அம்சங்கள்

By செய்திப்பிரிவு

பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசுக்கான 2021 - 2022 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று (ஜூலை 05) காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

"வரவு - செலவு

1. 2021-22ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் வரவுகள் ரூ.4,98,585 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவைவிட ரூ.2,22,125 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களைச் சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,09,945 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,05,786 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,27,426 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாகச் செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும்.

3. 2021-22ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.71,159 கோடி உபரியாக இருக்கும். நிதிப் பற்றாக்குறை ரூ.7,201 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.

தமிழக பொருளாதாரம் - ஓர் ஆய்வு!

4. கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் தமிழகத்தின் பொருளாதாரம் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதுதான் இன்றைய நிலையில் உடனடித் தேவை என்பதால், அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

5. தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு 2021-22ஆம் ஆண்டில் ரூ.23 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால், ரூ.20 லட்சம் கோடி என்ற இலக்கை அடைய போராட வேண்டியிருக்கும்.

6. 2020-21ஆம் ஆண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் இலக்கைவிட 17.64% வீழ்ச்சி அடைந்து, ரூ.1,09,968 கோடியாகக் குறைந்துள்ளது. மொத்த வருவாய் 17.63% வீழ்ச்சியடைந்து ரூ.1,80,700 கோடியாகக் குறைந்துள்ளது.

7. 2020-21 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.21,617.61 கோடி என்ற இலக்கைவிட 3 மடங்கு அதிகரித்து, ரூ.65,994.06 கோடி என்ற உச்சத்தை அடைந்துள்ளது. அதேபோல், நிதிப் பற்றாக்குறையும் ரூ.59,346.29 கோடி என்ற இலக்கைக் கடந்து, ரூ.96,889.97 கோடியாக அதிகரித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை தொடரும்

8. 2021-22 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,35,641.78 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.2,18,991.96 கோடியாகவும் இருக்க வேண்டும். ஆனால், இந்த இலக்கை எட்ட முடியாது.

9. நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.84,202.39 கோடியாகவும் இருக்க வேண்டும். ஆனால், இவை இன்னும் கூடுதலாக அதிகரிக்கும்.

ஓராண்டில் ரூ.1 லட்சம் கோடி கடன்

10. 2021-22 ஆம் ஆண்டில் தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்க நேரிடும்.

11. 2021 - 22 ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.6 லட்சம் கோடியாகவும், பொதுத்துறை நிறுவனக் கடன் ரூ.4 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும். மொத்த கடன் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும்.

12. நடப்பாண்டின் முடிவில் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1,27,388.54 கடன் இருக்கும். 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5,09,554 கடனை அரசு வாங்கியிருக்கும்.

வட்டி மட்டும் ரூ.85,000 கோடி

13. 2021-22 ஆம் ஆண்டில் வட்டியாக மட்டும் ரூ.85,000 கோடி செலுத்த வேண்டியிருக்கும். இதில், நேரடிக் கடனுக்கான வட்டி ரூ.51,000 கோடி; பொதுத்துறை நிறுவன கடன்களுக்கான வட்டி ரூ.34,000 கோடி; ஒவ்வொரு நாளும் ரூ.232 கோடி கடன் செலுத்த வேண்டியிருக்கும்.

பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை

14. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக 10 விழுக்காடுகளுக்கும் கூடுதலான ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.

15. மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

16. மத்திய அரசு வசூலிக்கும் மேல்வரி, கூடுதல் தீர்வை போன்றவை அடிப்படை வரியோடு இணைக்கப்பட வேண்டும். அதன் மூலம், அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்தும் மாநில அரசுகளுக்கு பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் சிறப்பாண்டு

17. 2021-22 ஆம் ஆண்டை விரைவான நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் சிறப்பாண்டாக கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

18. தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2025-26 ஆம் ஆண்டில் 32 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

19. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி என்ற அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்படும்.

20. 5 இடங்களில் ஆயத்த ஆடை பூங்காக்கள் அமைக்கப்படும். ஆயத்த ஆடை ஏற்றுமதி அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.

21. நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பும் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும்.

வரியில்லா வருவாய் ரூ.2.09 லட்சம் கோடி

22. 2021-22 ஆம் ஆண்டில் வரியில்லா வருவாய் ரூ.2.09 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

23. கிரானைட், தாதுமணல் விற்பனை மூலம் ரூ.1 லட்சம் கோடியும், மணல் இறக்குமதி, செயற்கை மணல் விற்பனை ஆகியவற்றின் மூலம் ரூ.25,000 கோடியும் ஈட்டப்படும்.

24. பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் ரூ.25,000 கோடி கிடைக்கும்.

25. பிற ஆதாரங்களில் இருந்து வரியில்லா வருவாயை கணிசமாக பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

26. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.

கரோனா ஈகியர் நினைவுக் கோட்டம்

27. கரோனாவுக்கு எதிரான போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உயிர்த் தியாகம் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், சென்னைப் புறநகரில் 10 ஏக்கர் பரப்பளவில் நினைவுக் கோட்டம் அமைக்கப்படும்.

28. கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி.

29-. செங்கல்பட்டு தடுப்பூசி வாளகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தும். அங்கு கரோனா தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும்.

புதிய உயர்கல்வி நிறுவனங்கள்

30. தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். அவற்றின் விவரம் வருமாறு:

1. அண்ணா பல்கலைக்கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக (Anna University Institute of Eminence (IoE)) மாற்றப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.

2. பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பல்கலைக் கழகம் - இணைப்பு (Anna University Affiliation) என்ற புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

3. சென்னை பல்கலைக்கழகம் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.

4. தமிழகத்தில் 5 இடங்களில் ஐஐடி-க்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) ஏற்படுத்தப்படும்.

5. ஐந்து புதிய சட்டக் கல்லூரிகள், 5 புதிய வேளாண் கல்லூரிகள் தொடங்கப்படும்.

தமிழகத்தை உயர்கல்வி மையமாக்குதல்

31. வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து உயர்கல்வி கற்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தை உயர்கல்வி மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

32. தமிழகத்தை உயர்கல்வி மையமாக்க இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தவிர, புதிய திட்டங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

வேலைவாய்ப்பைப் பெருக்க திட்டம்

33. புதிய உயர் கல்வி நிறுவனங்கள் தொடக்கப்படுவதால், அதில் படித்து கல்விபெறுவோருக்கும். ஏற்கெனவே படித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வசதியாக வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

34. தமிழகத்தில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்பபு ஏற்படுத்தித் தரப்படும்.

35. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை

36. படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. உதவித்தொகை விவரம்:

1. பத்தாம் வகுப்பில் தோல்வி ரூ.1,000

2. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி ரூ.2,000

3. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.3,000

4. பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரூ.4,000

5. பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் ரூ.5,000

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000

37. தமிழகத்தில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக வறுமை ஒழிப்பு ஆணையம் அமைக்கப்படும். இதன் தலைவராக பொருளாதார வல்லுநர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

38. வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களை வறுமையிலிருந்து மீட்கும் நோக்குடன் அடிப்படை வருமானத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

39. ஆதரவற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்காமலேயே மாத உதவித் தொகை ரூ.1,500 வழங்கப்படும். பயனாளிகளின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்த்தப்படும்.

மது விலக்கு

40. தமிழகத்தில் ஆகஸ்ட் 15 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

ரூ.25 லட்சம் கோடியில் உட்கட்டமைப்பு

41. தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.25 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்படும்.

42. தமிழகத்திற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பணிகளை விரைவுபடுத்த முதல்வர் தலைமையில் தனி அமைச்சரவைக் குழு அமைக்கப்படும்.

நேர்முகத் தேர்வுகள் ரத்து

43. கடைநிலை ஊழியர் தொடங்கி முதல் தொகுதி பணியாளர்கள் வரை அனைத்துப் பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. போட்டித் தேர்வு மதிப்பெண் மூலமே இனி பணி நியமனம் நடைபெறும்.

44. மருத்துவப் படிப்புகளில் ஈழத் தமிழர்களுக்கு 10 இடங்கள் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும்.

45. ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்.

46. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மதிய உணவில் சிறு தானிய உணவுகள் வழங்கப்படும்.

தமிழர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு

47. தமிழகத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 100% அரசு வேலைவாய்ப்புகளும் தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்க தேவையான சட்டத்திருத்தம் மற்றும் விதி மாற்றங்கள் செய்யப்படும்.

48. தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் தமிழக இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கிப் புதிய சட்டம் இயற்றப்படும்.

வலிமையான லோக் ஆயுக்தா

49. தமிழகத்தில் தற்போது முடக்கப்பட்டிருக்கும் லோக் ஆயுக்தா-வுக்கு புத்துயிரூட்டப்படுவதுடன், கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படும்.

50. முதல்வர், அமைச்சர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் லோக் ஆயுக்தா-வின் அதிகார வரம்புக்கு கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

பொதுச் சேவை உரிமைச் சட்டம்

51. தமிழகத்தில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

52. தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படாது.

மின் கட்டணம் குறைப்பு

53. தமிழகத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 56% குறையும்.

புதிய மின் திட்டங்கள்

54. அடுத்த 5 ஆண்டுகளில் 17,340 மெகாவாட் அனல்மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

55. அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

56. மின்வாரியத்தை லாபத்தில் இயக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

57. ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.

உள்ளாட்சித் தேர்தல்

58. தமிழகத்தில் இதுவரை நடத்தப்படாத 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் மாதமும், மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் ஜனவரி மாதமும் நடத்தப்படும்.

59. சென்னையில் அனைத்து நகரப் பேருந்துகளிலும் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம். மற்ற 37 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளில் பெண்கள், குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்.

புதிய கல்விக் கொள்கை

60. புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதகமான அம்சங்கள் மட்டும் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் நமது கல்வி முறைக்கும், பண்பாட்டுக்கும் ஒத்துவராத அம்சங்கள் செயல்படுத்தப்படாது.

61. தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை அறிமுகப்படுத்தப்படாது. அதனால் இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் எதுவும் மாணவர்கள் மீது திணிக்கப்படாது.

பள்ளிக் கல்விக்கு ரூ.70,000 கோடி

62. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 1,000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இருக்கும்.

63. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட சிறப்பானதாக தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் வலுப்படுத்தப்படும்.

64. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்க ஆண்டுக்கு ரூ.35,000 செலவிடப்படும்.

65. அருகமைப் பள்ளி முறை நடைமுறைப்படுத்தப்படும். மாநிலப் பாடத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்தால், அவர்களுக்கு அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பள்ளியில் தானாக இடம் ஒதுக்கப்படும்.

66. பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பள்ளி கல்விக்கு தனி நிதியம்

67. பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதிதிரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியைப் போன்று, தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

உயர்கல்வி

68. தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் 55 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

69. உயர்கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

70. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் ஆராய்ச்சிக்கான இருக்கைகள் ஏற்படுத்தப்படும்.

கல்விக் கடன்கள் தள்ளுபடி

71. தமிழகத்தில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று படித்து வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழக மாணவர்களுக்கு ரூ.18,000 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், வாராக்கடனின் அளவு ரூ.2,000 கோடி ஆகும். இந்தக் கடன் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு தமிழக அரசே செலுத்தும்.

மருத்துவ ஸ்மார்ட் அட்டை

72. தமிழக மக்கள் அனைவருக்கும் முழு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அது குறித்த விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும். அது குறித்த விவரங்களை பதிவு செய்ய மருத்துவ தகவல் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் தமிழக மக்கள் எந்த ஊரிலும், எந்த மருத்துவமனையிலும் சென்று சிகிச்சை பெற முடியும்.

73. அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, எவருக்கேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

74. 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 1,303-லிருந்து, 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.

எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை

75. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்.

76. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ நிறுவனத்தில் நடப்பாண்டில் 150 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்புக்கு சேர்க்கப்படுவார்கள்.

77. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு 2021-2022 ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

78. மயிலாடுதுறை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடப்பாண்டில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

79. விழுப்புரத்தில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.

புதிய மாவட்டங்கள் சீரமைப்பு தொடரும்

80. 2019-2021 ஆம் ஆண்டுகளில் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

81. 2021 - 22 ஆம் ஆண்டில் தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்படும்.

82. 12 லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும். இந்த மறுசீரமைப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 60 மாவட்டங்கள் இருக்கும்.

சட்டம் - ஒழுங்கு

83. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.

84. காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.

85. காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும்.

86. காவல்துறையினரின் நலன்களைக் காக்க 4 ஆவது காவல் ஆணையம் ஏற்படுத்தப்படும்.

அனைத்து சாதியினருக்கும் உள்ஒதுக்கீடு

87. வன்னியர் உள்இடஒதுக்கீட்டுச் சட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

88. விஸ்வகர்மாக்கள், யாதவர்கள், முத்தரையர்கள், ஆகியோருக்கு மக்கள்தொகை அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்கப்படும்.

89. நாவிதர், வண்ணார், பருவதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குரும்பர், குயவர், வேட்டுவக்கவுண்டர், ஊராளி கவுண்டர் ஆகிய 10 சமுதாயங்களும் ஒரு பிரிவாக உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

90. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள மற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு / தொகுப்பு ஒதுக்கீடு வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு கார்ப்பரேஷன்

91. தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் எந்த அளவுக்கு கிடைத்துள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

92. ஆந்திராவில் உள்ளதைப் போன்று, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளில் 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட அனைத்து சாதிகளின் முன்னேற்றத்திற்கும் தனித்தனியாக கார்ப்பரேஷன்கள் அமைக்கப்படும்.

93. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த கார்ப்பரேஷன்கள் மூலமாக ரூ.3 லட்சம் கோடி செலவிடப்படும்.

கரும்பு சாகுபடிக்கு புத்துயிரூட்டும் திட்டம்

94. தமிழகத்தில் கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் கடந்த 11 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. 2020 - 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி 6.52 லட்சம் டன்னுக்கும் குறைவு ஆகும். இந்த நிலையை மாற்றி, அடுத்த 3 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி பரப்பை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

95. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய ரூ.1,500 கோடி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடியை வட்டியில்லாக் கடனாக வழங்கும்.

96. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் 10% பிழிதிறன் கொண்ட கரும்புக்கு, கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் நிதிநிலை மேம்பட, மேம்பட கரும்புக்கான கொள்முதல் விலையும் உயர்த்தப்படும். இதை அரசு கண்காணிக்கும்.

6% வேளாண் வளர்ச்சி

97. வேளாண் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன், ஆண்டுக்கு 6% வேளாண் வளர்ச்சியை எட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குழு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

98. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதன் மூலம், கோடைக்காலங்களிலும் விவசாயம் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் புரட்சிகரமான நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

சிறுதானிய சாகுபடி

99. கம்பு, வரகு, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களின் சாகுபடி மானாவாரி நிலங்களில் ஊக்குவிக்கப்படும். அதற்காக சிறப்பு மானியம் வழங்கப்படும்.

100. நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம்

101. தமிழகத்தின் நீர்ப்பாசன கட்டமைப்பு வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய காவிரி - கோதாவரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

102. காவிரி - கோதாவரி இணைப்புக்குத் தேவையான பிற அனுமதிகள் பெறப்பட்டு, 2022 ஆம் ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

103. மேட்டூர் உபரிநீர்த் திட்டம் செயல்படுத்தி முடிக்கப்பட்டுவிட்டாலும் கூட, அதனால் போதிய பயன் கிடைக்காது. அதனால், மேட்டூர் உபரிநீர்த் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டமாக செயல்படுத்தப்படும்.

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை ரத்து

104. சென்னை- சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ஆனாலும் விதிமுறைகளை பின்பற்றி புதிதாக நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாலும், அதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு தான் உள்ளது என்பதாலும், தமிழக அரசு உழவர்களின் நிலங்களை கையகப் படுத்தித் தராது. இதன் மூலம் சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் ரத்தாகிவிடும்.

105. தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் உடனடியாக மூடப்படும்.

சந்தைகளுக்கு இலவச பேருந்து

106. காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களை சந்தைப் படுத்துவதற்கு வசதியாக, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மிகப்பெரிய அளவில் சந்தை ஏற்படுத்தப்படும்.

107. கிராமப்புற விவசாயிகள் தங்களின் விளைப்பொருட்களை இரவு 8 மணிக்குமேல் அரசுப் பேருந்துகளில் சந்தைகளுக்கு இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

108. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளுக்கு சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படும்.

சுங்கக் கட்டணம்

109. முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை ரத்து செய்யவும், பராமரிப்பில்லாத சாலைகளில் 40% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கவும் மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும்.

110. மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

111. சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்.

மெட்ரோ ரயில்

112. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்ன மாதவரம் - சிறுசேரி சிப்காட், சென்னை மாதவரம் - சோழிங்கநல்லூர், சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களை அமைக்கும் பணிகள் விரிவுபடுத்தப்படும். 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும்.

113. சென்னை விமானம் நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடப்பாண்டில் தொடங்கப்படும்.

ரயில் திட்டங்கள்

114. தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள 10 புதிய ரயில் பாதைத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

115. சென்னை - கடலூர் பாதை, காரைக்குடி - கன்னியாகுமரி பாதை ஆகியவை அமைக்கப்பட்டு, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

கீழடி அருங்காட்சியகம் விரிவாக்கம்

116. கீழடியில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகம் விரிவாக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.13 கோடியிலிருந்து ரூ.25 கோடியாக அதிகரிக்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி

117. பெண் குழந்தைகளை சுமையாக பெற்றோர் நினைக்கும் நிலையை மாற்றும் வகையில், 2021 - 22 நிதியாண்டு முதல் சிறப்பு ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

118. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் 18 ஆவது வயதில் ரூ.5 லட்சம் கிடைக்கும் வகையில் அவர்கள் பெயரில் வங்கிகளில் குறிப்பிட்ட தொகை வைப்பீடு செய்யப்படும். அதற்கான சான்றிதழ் அவர்களின் பெற்றோரிடம் வழங்கப்படும்.

அரசு ஊழியர் நலன்

119. புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.

120. தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். இதன் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

121. 01.06.2006 அன்று பணிநிலைப்பு செய்யப்பட்ட 45,000 ஆசிரியர்கள் அதற்குமுன் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய 23 மாதங்கள் அவர்களின் பணிக்காலமாக சேர்க்கப்படும். இக்காலத்திற்கான ஊதிய நிலுவையும் வழங்கப்படும்.

122. தமிழக அரசுப் பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12,483 பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படும்.

123. அரசு மருத்துவர்களின் ஊதிய முரண்பாடுகள் கலையப்படும். அவர்களுக்கு 05, 09, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கப்படும்.

124. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களில் நிலவும் முரண்பாடுகள் கலையப்படும்.

125. கொரோனா தொற்றுப் பரவலை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவை மீண்டும் வழங்கப்படும்.

காலநிலை செயல்திட்டம்

126. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தமிழக நகரங்களுக்கான காலநிலை செயல்திட்டம் (TN Urban Areas Climate Action Plan) உடனடியாக உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்