மேகதாது திட்டத்தை நியாயப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஸ்டாலின், அவர் கூறிய காரணங்களை மறுத்து மேகதாது அணை திட்டத்தைக் கைவிடக் கோரியுள்ளார்.
மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், ''மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது. இதனால் தமிழகம், கர்நாடகா என இரு மாநிலங்களுக்கும் பயன் உண்டு. மேகதாது அணை குறித்து இரு மாநிலப் பிரதிநிதிகளும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம்'' என எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று எழுதிய கடிதம்:
''உங்கள் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி மற்றும் நல்வாழ்த்துகளுக்கு நன்றி. மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் உங்கள் நோக்கத்தையும் பாராட்டுகிறேன்.
மேகதாது சமநிலை நீர்த்தேக்கப் பிரச்சினையில், 67.16 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கும் நோக்கம் கொண்டதாக இத்திட்டம் உள்ளது. தமிழ்நாட்டின் இரண்டு நீர்மின் திட்டங்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று கூற விரும்புகிறேன். இந்த இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர் பயன்பாடு இல்லை என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்துகிறேன். கிடைக்கக்கூடிய நீர் உச்ச மின் தேவையை பூர்த்தி செய்ய உந்தப்பட்டு மீண்டும் புழக்கத்தில் விடப்படுகிறது.
கூடுதல் பயன்பாடு எதுவும் உருவாக்கப்படவில்லை. இரண்டு திட்டங்களும் தமிழகத்தில் நீர்ப்பாசனம் அல்லது குடிநீர் பயன்பாட்டிற்கான நீர் கிடைப்பதை பாதிக்காது. எனவே, இத்தகைய வேறுபட்ட திட்டங்களை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
உச்ச நீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்ட காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவில், கர்நாடக மாநிலத்தால், மாநிலங்களுக்கு இடையேயான வழங்கப்பட வேண்டிய வருடாந்திர அளவு நீர் குறித்து மூன்று விஷயங்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவது தமிழ்நாட்டின் விவசாய சமூகத்தின் நலன்களை பாதிக்காது என்ற உங்கள் கருத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
பெங்களூரு பெருநகரத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆற்றில் இருந்து தண்ணீர் இழுக்கப்படுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், மேகதாதுவில் இதுபோன்ற ஒரு பெரிய நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கான காரணம் இது என மேற்கோள் காட்டியுள்ளீர்கள்.
பெங்களூரு நகரப் பகுதியின் தேவையைப் பூர்த்தி செய்ய கர்நாடகாவில் ஏற்கெனவே போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும்போது, 4.75 டி.எம்.சியைக் குடிநீர் தேவைக்காக 67.16 டி.எம்.சி சேமிப்புத் திறன் கொண்ட ஒரு நீர்த்தேக்கத்தின் தேவை என மேகதாது அணை கட்டப்படுவதாக நியாயப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. இது கட்டாயம் தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைப்பதை பாதிக்கும்.
இப்போது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் பங்கு நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தமிழகத்தில் காவிரி நீர்ப்பாசனத்தின் செயல்திறனை அதிக அளவில் மேம்படுத்த முடியவில்லை. நீர் பயன்பாட்டுச் செயல்திறனை அதிகரிக்க பல பழைய கட்டமைப்புகளை நவீனமயமாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும் என்பது தற்போதைய தேவை. இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், நீதிமன்றத்தின் உத்தரவில் நிர்ணயிக்கப்பட்ட விநியோக விகிதத்தில் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது.
மேற்கண்ட உண்மைகளையும் இந்தச் சிக்கல்களின் உண்மைத் தன்மையையும் பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று வலியுறுத்துகிறேன். எனது நல்வாழ்த்துகளைக் கர்நாடக மாநில மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் இரு மாநிலங்களுக்கிடையில் நல்ல ஒத்துழைப்பும் உறவும் மேலோங்கும் என்று ஆவலுடன் நம்புகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago