தமிழகம்

கோட்டூர்புரம் குடியிருப்பை இடித்து மறுகட்டுமானம்; குடியிருப்போரிடம் கருத்துக் கேட்புக்கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு 

செய்திப்பிரிவு

ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னை - சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர்புரம் சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்வது தொடர்பாக திட்டப்பகுதி மக்கள் மற்றும் சங்க நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்புக்கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கோட்டூர்புரம் திட்டப் பகுதியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமானம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோட்டூர்புரம் மற்றும் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம், பல்லடுக்கு குடியிருப்புகளைக் கட்டுவதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்காத நிலையில், இத்திட்டத்தினைச் செயலாக்குவது தொடர்பாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து இன்று (04.07.2021) திட்டப்பகுதி மக்கள் மற்றும் சங்க நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்புக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

“மறைந்த முதல்வர் கருணாநிதியால் 1970-74 வரையிலான காலத்தில் 82 தொகுப்புகளில் மொத்தம் 1656 அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்குகளில் 213 சதுர அடியில் கட்டப்பட்டன.

2009 முதல் 2015 வரையிலான காலத்தில் 8 தொகுப்புகளை இடித்துவிட்டு மறுகட்டுமானம் திட்டத்தின் கீழ் 180 அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்குகளில் 319 மற்றும் 385 சதுர அடியில் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

மீதமுள்ள 74 தொகுப்புகளில் உள்ள 1476 சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி, வாகன நிறுத்த வசதி கொண்ட தாங்கு தளத்துடன் கூடிய ஐந்து அடுக்குகளில் ஒவ்வொரு குடியிருப்பும் 420 சதுர அடி பரப்பளவில் வரவேற்பறை, உறங்கும் அறை, சமையலறை தனித்தனியே குளியலறை மற்றும் கழிப்பறை, மின்தூக்கி (லிஃப்ட்), ஜெனரேட்டர் உள்ளடக்கிய நவீன வசதிகளுடன் கூடிய 20 தொகுப்புகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட இருப்பதால், குடியிருப்புதாரர்களின் முழு ஒத்துழைப்புடன் பழைய குடியிருப்புகளை மூன்று மாத காலத்திற்குள் காலி செய்யும் பட்சத்தில், அக்குடியிருப்புகளை அகற்றிவிட்டு 18 மாத காலத்திற்குள் புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும்”.

இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது வாரிய மேலாண்மை இயக்குநர், கோவிந்த ராவ், தலைமைப் பொறியாளர் இராம.சேதுபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT