“முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவசியமான பொருள்களைக் கூட வாங்குவதில் சிரமம் இருக்கிறது. அதேபோல் மாநிலத்தில் பொருளாதாரமும் சுணக்கம் அடைகிறது ஆகிய மூன்று காரணங்களால்தான் பல்வேறு தளர்வுகளை அறிவித்தோம். கரோனா இன்னும் முழுமையாக ஒழியவில்லை. ஆகவே, பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கரோனா தொற்றுப் பரவல் குறையாத நிலையில், பொதுமக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியம் குறித்துக் காணொலியில் பேசியதாவது:
“அன்பார்ந்த மக்கள் அனைவருக்கும் வணக்கம்!
கரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம். கரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. இந்தப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
» டெங்கு கொசு பரவல்; தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றவும்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
» மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைப்பதா? தமிழகம் திசைமாறி செல்கிறது: ஓபிஎஸ் திடீர் எதிர்ப்பு
இந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை, தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்தைத் தொட்ட தொற்று பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவருகிறது.
முழு ஊரடங்கு - மருத்துவர்களின் அர்ப்பணிப்பு - மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு - துடிப்பான நிர்வாகம் ஆகிய நான்கின் காரணமாகவும்தான் இந்த அளவுக்கு நாம் வெற்றியைப் பெற முடிந்தது. இன்றைய தகவல்களின் அடிப்படையில் ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. ஆக்சிஜன் படுக்கைகளாக இருந்தாலும் - தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளாக இருந்தாலும் ஏராளமாக உள்ளன.
எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு என்பதை நானும் அறிவேன். நான் இப்போது நாட்டு மக்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். கரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
தளர்வுகள் அறிவித்துவிட்டார்கள் - அதனால் நாம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும் நினைக்கக் கூடாது. இன்னமும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அரசியல் மற்றும் சமுதாய விழாக்கள் அனுமதிக்கப்படவில்லை. திரையரங்குகளைத் திறக்கவில்லை. பூங்காக்கள் திறக்கவில்லை. ஏனென்றால் இவை எல்லாம் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள்.
இப்படித் திறக்காமல் இருக்கிறோம் என்றால், ஏன் என்ற காரணத்தை உணர்ந்து மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். உணவகம், கடைகள் மற்ற முக்கிய சேவைகள், பொதுப் போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அனுமதி தருவதற்குக் காரணம், மக்களின் வாழ்வாதாரத்தின் மீது உள்ள அக்கறையால்தான்.
முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, அவசியமான பொருள்களைக் கூட வாங்குவதில் சிரமம் இருக்கிறது, அதேபோல் மாநிலத்தில் பொருளாதாரமும் சுணக்கம் அடைகிறது ஆகிய மூன்று காரணங்களால்தான் பல்வேறு தளர்வுகளை அறிவித்தோம்.
இந்தத் தளர்வுகளுக்கு உள்ளார்ந்த பொருள் இதுதான். அதனைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். கரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமும் கேடயமும் ஆகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக நாம் இன்னும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. மத்திய அரசால் நமக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுள்ளோம். அவர்களும் முழுமையாக நமக்கு வழங்கவில்லை.
பள்ளிப் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுதல் குறித்து இன்னும் மருத்துவ வல்லுநர்கள் முடிவுகள் எடுக்கவில்லை. குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆலோசனைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இப்படி எல்லாத் தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும். அப்படிச் செலுத்துவதை மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு அரசு தயாராக இருக்கிறது.
முழுமையான அளவுக்குத் தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்தாகவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை. மக்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களே சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு, அவசியத்தின் காரணமாக மட்டுமே வெளியில் வாருங்கள். அப்படி வரும்போதும் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
* வீட்டை விட்டு வெளியில் வரும் எல்லோரும் முகக்கவசம் அணியுங்கள்.
* கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்துவிடுங்கள்.
* வரிசையில் நின்று வாங்குங்கள்.
* வரிசையில் நிற்கும்போதும் போதிய தனிமனித இடைவெளியைப் பின்பற்றுங்கள்.
* பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போதும் - அதிகமான கூட்டம் இருக்கும் இடத்திலும் இரண்டு முகக்கவசங்களைக் கூட பயன்படுத்தலாம்.
* கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
* கடைகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் பயன்படுத்துங்கள்.
* அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பணியாற்றுங்கள்.
* கடைகளின் நுழைவாயில்களில் கை சுத்திகரிப்பானை வையுங்கள். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் கொண்டு பரிசோதனை செய்யுங்கள்.
* கடைகளுக்குள் ஒரே நேரத்தில் அதிகப்படியான ஆட்களை அனுமதிக்க வேண்டாம்.
* நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். நீங்களாகவே தெரிந்த சிகிச்சை முறைகளைச் செய்துகொள்ள வேண்டாம்.
- இவை எல்லாமே மிகமிகச் சாதாரணக் கட்டுப்பாடுகள்தான். இதனைப் பின்பற்றி நடந்து கொண்டாலே கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லை. மக்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக்கொள்ளக் கூடிய சுயகட்டுப்பாடுகளாக மாற வேண்டும்.
அந்த அடிப்படையில் ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குத் தாங்களே காவல் அரணாக இருக்க வேண்டும்.
தளர்வுகளின்போது கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால்தான் மூன்றாவது அலை வரக் கூடிய சூழல் எழும் என்கிறார்கள் மருத்துவர்கள். கட்டுப்பாடுகளை நாம் ஒழுங்காகக் கடைப்பிடித்தால் எந்த அலையும் உள்ளே வரமுடியாது.
எனவே மக்கள் எல்லாரையும் நான் கேட்டுக்கொள்வது -
தளர்வுகள் தரப்பட்டுவிட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்கவேண்டாம்.
விதிக்கப்பட்ட விதிமுறைகள் அமலில்தான் உள்ளன.
விதிமுறைகளைப் பின்பற்றி நம்முடைய மதியால் கரோனாவை வெல்வோம்.
நம்மையும் காப்போம்! நாட்டையும் காப்போம்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago