கரோனா பணியில் உயிரிழந்த அரசு மருத்துவர்களுக்கு எப்போது நிவாரணம்?தவிக்கும் குடும்பங்கள்; கண்டுகொள்ளுமா அரசு?

By என்.சுவாமிநாதன்

கரோனா ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப் போட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. நெருக்கத்திற்குரிய பலரின் உயிரிழப்புகளும் இதில் ஏற்பட்டன. ஆனால், இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் மருத்துவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்துக் களமாடினர். கரோனா வார்டுகளில் பணியில் இருந்த 5 அரசு மருத்துவர்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகினர். இவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் அரசு மருத்துவர்கள்.

இதுகுறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள்பிள்ளை 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியதாவது:

''தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும், முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி அன்று கரோனா பாதிப்பால் உயிரிழந்த மரு.விவேகானந்தன் குடும்பத்தினருக்குத் தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில், மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்த டாக்டர் விவேகானந்தன் கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பால் (massive Pulmonary embolism) உயிரிழந்தார். 31 வயதான அவரது மனைவியும், 10 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

மருத்துவர் விவேகானந்தனின் தந்தை, எங்கள் சங்கத்தின் சட்டப் போராட்டக் குழுவின் பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு உதவும்படி கேட்டார். அப்போது நிவாரணம் கிடைப்பதோடு, பொறியியல் பட்டதாரியான அவரது மனைவிக்கு, அரசு வேலை கிடைத்தால் ஊன்றுகோலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளதாகத் தெரிவித்தார். மருத்துவர்கள் தினத்தையொட்டி வாழ்த்துச் செய்தி வெளியிட்ட முதல்வர், வெள்ளை உடை உடுத்திய ராணுவ வீரர் போல் அரசு மருத்துவர்கள் பணியாற்றுவதாகப் பெருமையாகத் தெரிவித்தார்.

ஆனால், இங்கு வெள்ளை உடை வீரர், சமூகத்திற்காக உயிரைவிட்ட பின்பும், அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பது முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை என்பது தெரிகிறது. மருத்துவர் விவேகானந்தன் உள்படத் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்கள் 5 பேரின் குடும்பத்திற்கும் அரசு அறிவித்த நிவாரணம் முழுமையாகக் கிடைப்பதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டியது சுகாதாரத் துறைச் செயலரின் பொறுப்பும், கடமையும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

மதுராந்தகம் அரசு மருத்துவமனை மருத்துவர் சுகுமார், தூத்துக்குடி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கல்யாணராமன், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் விவேகானந்தன், மதுரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரும், எட்டு மாத கர்ப்பிணியுமான டாக்டர் சண்முகப்பிரியா, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் மணிமாறன் உள்பட 5 அரசு மருத்துவர்கள் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துக்குத் தலா 50 லட்சம் ரூபாயை அரசு நிவாரணமாக அறிவித்தது.

ஆனால், மருத்துவர்கள் சுகுமார், கல்யாணராமன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் மட்டுமே இதுவரை நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. அதுவும் முந்தைய ஆட்சியில்தான் வழங்கினார்கள். முதல்வர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி அரசு மருத்துவக் குடும்பத்தினரின் துயர் துடைக்க வேண்டும். இவ்வளவு நெருக்கடியான காலத்திலும் களமாடும் மருத்துவர்களுக்கு அதுதான் அரசு செய்யும் மரியாதை''.

இவ்வாறு மருத்துவர் எஸ்.பெருமாள்பிள்ளை தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்