இந்தியாவிலேயே முதன்முதலாக கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடும் பணி பென்னாடம் பகுதியில்தான் தொடங்கியுள்ளது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழகத்தில் முதலாவதாக கடலூர் மாவட்டம், பென்னாடம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்திடும் பணியை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 03) தொடங்கி வைத்தார்
அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையின்படி தடுப்பூசி செலுத்திடும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு நிலவரப்படி 1.50 கோடிக்கு மேல் தமிழகத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு இதுவரை வரப்பெற்ற தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,57,76,550. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1,52,00,785. கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6,41,220 ஆகும்.
மத்திய அரசிடமிருந்து ஜூலை மாதத்திற்குரிய தொகுப்பான 71 லட்சம் தடுப்பூசிகள் படிப்படியாக வரப்பெற்று தடுப்பூசி செலுத்திடும் பணிகள் நடைமுறைக்கு வருகின்றன. நேற்றிரவு ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மத்திய அரசிடமிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு இன்று தமிழகத்திலேயே முதல் முறையாக கடலூர் மாவட்டம், பென்னாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்திடும் பணியை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
அநேகமாக இந்தியாவிலேயே முதன்முதலாக கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடும் பணி பென்னாடம் பகுதியில்தான் தொடங்கியுள்ளது. இந்தத் தடுப்பூசி போடும் பணியை முதன்முதலில் தொடங்கிவைத்த பெருமை உதயநிதி ஸ்டாலினையே சாரும்.
18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்திடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தொற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,230 ஆகும். மற்றொரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இத்தொற்றிலிருந்து மீண்டு, நலமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை 4,952 ஆகும்.
முதல்வரின் அறிவிப்பின்படி, தொற்றின் அளவு குறைந்துகொண்டே சென்றாலும், ஆர்டி.-பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நேற்று 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஏனென்றால், 1.50 கோடி பேருக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழக அரசின் சார்பில் தடுப்பூசி செலுத்துவது குறித்து மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் தடுப்பூசிகள் செலுத்துவதில் மிகப் பெரிய அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி முகாம், கட்டிடத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம், விளையாட்டு வீரர்களுக்குத் தடுப்பூசி முகாம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் என்று தாமே முன்னின்று தொடங்கி வைத்திருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் தமது சட்டப்பேரவைத் தொகுதியில் 90 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியைத் துரிதப்படுத்தி முடித்துள்ளார். அதேபோல், 97 ஆயிரத்திற்கும் மேல் உள்ள தமிழக வழக்கறிஞர்களுக்கான தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்திருக்கிறார்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago