மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு டெல்லி, குஜராத் போல் தமிழகத்திலும் மானியம் வழங்கப்படுமா?- அச்சமூட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

By கி.ஜெயப்பிரகாஷ்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு டெல்லி, குஜராத் மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய அரசின் கலால் வரி உயர்வு, மாநிலஅரசின் மதிப்புக் கூட்டு வரி அதிகரிப்பு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை மேலும் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறுமாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. டீசல் லிட்டர் ரூ.93.72-க்குவிற்பனை செய்யப்படுகிறது. இது, வாகனஓட்டிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் பொது மக்களும் அவதிப்படுகின்றனர்.

மாற்றுத் தீர்வை நோக்கி

நாட்டில் அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல்வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, மின்சார வாகனங்களின் திட்டங்களைக் குறைந்த செலவில் உருவாக்குவது, தரமானசார்ஜர் மையங்கள் அமைப்பது, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க புதிய சலுகைகள் வழங்குவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. மேலும், மின்சார வாகனம் வாங்குவோருக்கு, வாகனத்தின் மொத்தவிலையில் 40 சதவீதம் வரை கணக்கிட்டு ஒரு கிலோவாட் பேட்டரிக்கு ரூ.15 ஆயிரம் என மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

மாநில அரசுகளும் மானியம்

இதுதவிர டெல்லி, குஜராத் மாநில அரசுகள்சார்பிலும் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. டெல்லியில் ஒரு கிலோவாட் பேட்டரி கொண்ட மின்சார வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரமும், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களுக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரமும், கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் ஒரு கிலோவாட் பேட்டரி கொண்ட மின்சார வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம், ஆட்டோவுக்கு ரூ.50 ஆயிரம், கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதனால், இந்த 2 மாநிலங்களிலும் மின்சார வாகனங்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்திலும் மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு இதேபோல் மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பொது போக்குவரத்து மேம்பாடு

இந்தப் பிரச்சினை தொடர்பாக சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை என்பது சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இருப்பினும், மத்திய, மாநில அரசின் வரியால் இதன் விலை மேலும் அதிகரிக்கிறது. ஆசிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் மீதான வரி அதிகம். ஆனால், ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டால், இந்தியாவில் வரி குறைவுதான்.

இருப்பினும், இதற்கு மாற்று என்பது இந்தியாவுக்கு அவசியமாகும். எனவே, மின்சாரவாகனங்களை அதிகரிக்க போதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். 2 யூனிட்மின்சாரத்தைக் கொண்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான தூரத்துக்கு பயணம் செய்யலாம்.

எரிபொருள் மீது வசூலிக்கும் வரியில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு எடுத்து கொண்டு,மீதமுள்ளதை ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தமத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். குறைந்த கட்டணத்தில் வசதியானபொது போக்குவரத்து இருந்தால், மக்கள்சொந்த வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாகன விற்பனையாளர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘பெட்ரோல் வாகனங்களை ஒப்பிடுகையில், மின்சார வாகனங்களின் விலை 40 சதவீதம் வரை அதிகம். ஆனால், பெட்ரோல் செலவைக் கணக்கிடும்போது மின்சார வாகனங்கள்தான் சிறந்தது. இதனால்,மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மத்திய அரசைப்போல், மாநில அரசுகளும் மானியம் வழங்கினால் மின்சார வாகனம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என்றனர்.

தமிழக அரசின் நிலைப்பாடு

தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் இதுதொடர்பாக கேட்டபோது, ‘‘எரிபொருளை குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள்பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், மின்சார வாகனங்களுக்கு தமிழக அரசு வரிச் சலுகை அளித்துள்ளது. இதனால் பேட்டரி வாகனங்கள் வாங்குவது சற்று அதிகரித்துள்ளது.

மற்றொருபுறம் பேட்டரி, சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு மானியம் வழங்குவது குறித்து தமிழக அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்