உடுமலை அரசு மருத்துவரின் முயற்சியால் தடுப்பூசி போட்டுக்கொண்ட மலைவாழ் மக்கள் 

By எம்.நாகராஜன்

உடுமலை அருகே கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயக்கம் காட்டிய மலைவாழ் மக்கள், அரசு மருத்துவரின் முயற்சியால் தடுப்பூசி போட்டுக் கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டு 17 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. அங்கு சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வனப்பகுதியில் விவசாயம் செய்தும், கூலி வேலைக்குச் சென்றும் தங்களின் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றனர். கரோனா பரவல் தொடங்கியது முதலே எரிசினம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலைவாழ் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

எனினும் தொடக்கத்தில் அவர்கள் தடுப்பூசி போட சம்மதிக்கவில்லை. பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பின்பற்றிக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

இதற்கிடையே சமூக ஆர்வலர்கள் சிலர் மலைவாழ் மக்களுக்குத் தேவையான மளிகை சாமான்களை இலவசமாக விநியோகித்து வந்தனர். ஆனால் கருமுட்டி மலைவாழ் கிராம மக்களுக்கு இந்த உதவி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையறிந்த அரசு மருத்துவர் உமாராணி, தன் சொந்த முயற்சியில் 57 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய நிவாரண பொருட்களுடன் கருமுட்டிக்குச் சென்றார்.

அங்கு நேற்று மளிகைப் பொருள்களை இலவசமாகக் கொடுத்ததுடன் அனைவருக்கும் கரோனா முதல் தவணை தடுப்பூசியும் போட்டு வெற்றி கண்டுள்ளார். தடுப்பூசி போட்டுக் கொண்ட மலைவாழ் மக்கள் ‘நாங்களும் தடுப்பூசி போட்டு கொண்டோம்’ எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை உயர்த்திக் காட்டி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் செயல்பட்டனர்.

இதுகுறித்து அரசு மருத்துவர் உமாராணி கூறும்போது, ‘’தமிழக முதல்வர் அறிவிப்புக்கு இணங்க எனது மாத ஊதியத்தில் ஒரு நாள் சம்பளத்தை இதுபோன்ற சேவைக்காக ஒதுக்கி வைத்து வருகிறேன். மலைவாழ் மக்களுக்கான மருத்துவ முகாம்களுக்குப் பலமுறை சென்று வருவதில், அவர்களில் பலர் எனக்கு அறிமுகமாகினர். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் உள்ளபடியே அவர்களுக்கு அச்சமும், தயக்கமும் இருந்தது.

இந்நிலையில் அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களைக் கொடுத்து உதவியதன் மூலம், ஒரு கிராமத்தில் வசிக்கும் 40 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை வெற்றிகரமாகப் போடப்பட்டுள்ளது. இதுகுறித்துச் சக மருத்துவர்களிடம் பகிர்ந்து கொண்டதில் 3 பெண் மருத்துவர்கள் உட்பட 4 பேர் ஒரு நாள் ஊதியத்தை இப்பணிக்காக அளித்தனர். இது தவிர சத்தியம் சோஷியல் சர்வீஸ் சார்பாக அனைவருக்கும் குளியல் சோப்பு அளிக்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

இதே மருத்துவர் தனது சொந்த கிராமமான கரட்டு மடத்தில், ஏழை எளியவர்களுக்கு உணவு விநியோகிப்பதற்காக தனது 2 மாத ஊதியம் முழுவதையும் ஊராட்சிக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE