10 ஆண்டுகளாக பராமரிக்காமல் சேதமடைந்த வள்ளுவர் கோட்டம்; மீண்டும் புனரமைக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

By செய்திப்பிரிவு

வள்ளுவர் கோட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, 10 ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டுவிட்டதால் மோசமான நிலையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்க உள்ளதாக தெரிவித்தார். சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்படும், நூலகம் மற்றும் ஆய்வரங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (2.07.2021) வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து பகுதிகளையும் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா,முதன்மை தலைமைப் பொறியாளர் விஸ்வநாத் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

"தமிழர்களின் அடையாள சின்னமாக விளங்கும் வள்ளுவர் கோட்டம் 1974 -ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. 40 ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழனின் பண்பாட்டு அடையாளமாக திகழும் வள்ளுவர் கோட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள்.

மாணவர்களின் நலனுக்காக சமச்சீர் கல்வி கொண்டு வந்தபொழுது பாடப்புத்தகத்திலிருந்த திருவள்ளுவரின் படத்தை கூட எடுத்து விட்டார்கள். சாதி பேதமற்ற மதச்சார்பற்ற ஒரு பொதுவான மனிதர் தான் திருவள்ளுவர். இன்று உலகமே இவருடைய திருக்குறளை பல மொழிகளில் மாற்றம் செய்து பயன்படுத்தி பாராட்டிக் கொண்டுள்ளது.

3500 பேர் அமரக்கூடிய மிகப் பெரிய அரங்கத்தை கூட பராமரிக்காமல் தரைதளம், மேல்தளம், படிக்கட்டுகள் அனைத்தும் உடைந்து சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. 5.5 ஏக்கர் பரப்பளவுள்ள இவ்வளாகத்தில் 68,275 சதுர அடியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தேர் திருவாரூர் தேர் மாதிரியை வைத்து 106 அடி உயரத்திலும், தேரின் சக்கரங்கள் 14 அடி உயரத்திலும் திருவண்ணாமலையிலிருந்து வரவழைக்கப்பட்ட வைரக்கல் என்ற கல்லால் வடிவமைக்கப்பட்டது.

இங்கு கழிவறை மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட வருகை தரும் மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இல்லை. இதை சீர்ப்படுத்தி புனரமைப்பு செய்திட இன்று பொதுப்பணித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மை தலைமைப் பொறியாளர், தோட்டக்கலை வல்லுநர்கள் ஆகியோருடன் ஆய்வு செய்துள்ளேன். பளிங்குக் கல்லில் பதிக்கப்பட்ட அனைத்து திருக்குறளும் படிக்க முடியாத நிலையில் சேதமடைந்துள்ளது.

அடிப்படை வசதிகள், மின்வசதி, கழிவறை மற்றும் தண்ணீர் வசதி வர்ணம் பூசுதல் மற்றும் பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து புனரமைப்பு செய்ய மதிப்பீடு தயார் செய்யுமாறு உத்திரவிட்டுள்ளேன். இங்குள்ள அரங்கம் புதுப்பிக்கப்படும் பொழுது நூலகம் மற்றும் ஆய்வரங்கம் தனியாக அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு புதுப்பிக்கப்படும் கூட்ட அரங்கு பொது நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

இதுகுறித்த ஆய்வறிக்கை விரைவில் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி பெற்று வள்ளுவர் கோட்டத்தை மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்