முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை ஆய்வுக் கூட்டம்

By செய்திப்பிரிவு

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூலை 02) நடைபெற்றது.

இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"சுற்றுலாத் துறை

தமிழகம் பல ஆண்டுகளாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருந்து வருகிறது எனினும், கடந்த பதினெட்டு மாதங்களாக கோவிட் - 19 பெருந்தொற்றினால் சுற்றுலாத் துறை பெரும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்துள்ள தொழில்களை மீட்டெடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இவ்வாய்வுக் கூட்டத்தில் முக்கிய அம்சங்களாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுலா பெருந்திட்டம் செயல்படுத்துவதற்கும் சுற்றுலாக்களை வகைப்படுத்திச் சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்துவதற்கும், அவர்களது தங்கும் கால அளவினை உயர்த்த சுற்றுலா ஈர்ப்புகளை உருவாக்கி அவர்களின் தங்கும் கால அளவினை அதிகரிப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டது.

சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் எளிதில் சென்றுவர சாலைகளை மேம்படுத்துதல், ஆன்மீகம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, இயற்கை சுற்றுலா, வனம் மற்றும் சுற்றுசூழல் சுற்றுலா, சாகச விளையாட்டுக்கள், கடற்கரை சுற்றுலா மற்றும் கேளிக்கைப் பூங்காக்களை அமைக்க சர்வதேச நிறுவனங்களை ஊக்குவிப்பது குறித்த வழிவகைகள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையைப் புதிய தொழில் நுட்பத்தில் வண்ண ஒளியூட்டுதல் மற்றும் பூம்புகார் சுற்றுலா வளாகத்தைச் சீரமைத்து மேம்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழகத்தில் சுற்றுலா உட்கட்டமைப்பினைச் சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்துதல், சர்வதேசச் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல், வணிக சின்னத்தினைப் பிரபலப்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கொள்கை, அரசு நிதியுதவியுடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் திட்டம், புதிய சுற்றுலாத் தலங்கள் உருவாக்குதல், மேம்படுத்திடுதல் மற்றும் பராமரித்தல், தனியார் முதலீடு மூலம் ஹோட்டல், ரிசார்ட் மற்றும் கன்வென்சன் சென்டர் உருவாக்குதல், சுற்றுலாத் துறையில் பொது - தனியர் பங்களிப்பு ஆகியவை பற்றியும் முடிவெடுக்கப்பட்டது.

கலை பண்பாடு, தொல்லியல், அருங்காட்சியகங்கள் துறை

கலை பண்பாட்டுத் துறையின்கீழ் கலைஞர்களுக்கு 2021-ம் ஆண்டுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குதல், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் புதிய கலைஞர்களை உறுப்பினராகச் சேர்க்க சிறப்பு முகாம்களை நடத்தவும், நலவாரியத்தில் பதிவுபெற்று 60 வயது நிறைவடைந்த தகுதியுள்ள கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்தார்கள்.

அருங்காட்சியகங்கள் துறையின்கீழ் இயங்கும் சென்னை அரசு அருங்காட்சியகம், 23 இடங்களில் செயல்படும் மாவட்ட அரசு அருங்காட்சியகங்களின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கலையரங்குத் தொகுப்பை ரூ.24.56 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல் குறித்தும் பாந்தியன் கட்டடம் மீட்டுருவாக்கம் மொத்தம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொல்லியல் துறையின்கீழ் உலகத்தரம் வாய்ந்த புதிய அகழ்வைப்பகங்களை ஏற்படுத்துதல், சங்ககால துறைமுகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆழ்கடல் கள ஆய்வு மற்றும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளுதல், பழங்காலக் கோட்டைகளையும் அரண்மனைகளையும் பழமை மாறாமல் புனரமைத்து வண்ண விளக்கு வசதிகள் மேற்கொள்ளுதல், வரலாற்றுச் சின்னங்களில் முகப்பு விளக்குகள் ஏற்படுத்துதல் புதுப்பித்தல், 7 இடங்களில் நடைபெற்றுவரும் தொல்லியல் அகழ்வாய்வுகள் குறித்தும், கீழடியில் அமையவுள்ள உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் தொடர்பாகவும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அருங்காட்சியகங்களில் இருக்கும் அரும்பொருட்களை மெய்நிகர் அருங்காட்சியகமாக ஆவணப்படுத்துதல், சேகரிப்புகளில் உள்ள அனைத்து அரும்பொருட்களையும் காட்சிப்படுத்திட புதியதாக இருபெரும் கட்டடங்கள் ஏற்படுத்துதல் குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்து சமய அறநிலையத் துறை

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்படும் கோயில்களின் பராமரிப்பு, பக்தர்களுக்கான வசதி, சுற்றுப்புறத் தூய்மை மற்றும் துறையின் பணியாளர் நலன் குறித்து ஆய்வு செய்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நிர்வகிக்கப்படும் 100 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்துதல், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி ஆகிய திருக்கோயில்களைத் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இணையாக மேம்படுத்துதல், மலைத் திருக்கோயில்களில் கம்பிவட ஊர்தி அமைக்கும் பணி ஆகியன குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

ஓதுவார் பயிற்சிப் பள்ளி மேம்படுத்தப்பட்டுச் செயல்படுத்துதல், மேலும் 100 திருக்கோயில்கள், 100 தெப்பக்குளங்கள் சீரமைத்தல், 100 திருக்கோயில்களில் நந்தவனங்கள் அமைத்தல், மானசரோவர் மற்றும் முக்திநாத் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு நிதி உதவி அளித்தல் ஆகியவை குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

திருக்கோயில்களில் உள்ள 2,547 காலிப்பணியிடங்களில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவது, 110 ஓதுவார்கள் நியமிக்கப்படுவது, கிராமக்கோயில்களில் பணிபுரியும் பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு, பூசாரிகளுக்கான நலவாரிய உறுப்பினர்களை நியமித்தல் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆலயங்களைத் தூய்மையாகவும், வருகைபுரியும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் முறையாக ஏற்படுத்தி பராமரிக்க முதல்வர் அறிவுரை வழங்கினார்.

மேலும், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பனை ஓலைச்சுவடிகள் அனைத்தும் கணினிமயமாக்கும் செயல்பாடு, திருக்கோயில் சொத்துக்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றி அதனை மீட்டுப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்