திருவாரூர் மாவட்டத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்காக விண்ணப்பித்த விவசாயிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாததால், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், விவசாயிகளுக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுவதுடன், இலவச மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது.
மனுதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ அரசுப் பணியில் இருக்கக் கூடாது. மனுதாரருக்கு அல்லது மனுதாரர் குடும்பத்தில் உள்ள எவருக்கும் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு இருக்கக் கூடாது. மனுதாரர் சிறு, குறு விவசாயியாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 வகையான சான்றுகளை பெற்றுக்கொண்ட பின்னரே, இத்திட்டத்தின் கீழ் பயனாளி தேர்வு செய்யப்படுகிறார். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு ரூ.50,000 மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கிராம கூட்டுறவு வங்கி மூலமாக கடனாக வழங்கப்படும். ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டவுடன், இலவச மின்சாரம் வழங்கப்படும்.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை. புதிதாக விண்ணப்பிக்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கும் கடன் தொகை மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயி சிவா தியாகராஜன் கூறியது:
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் மீது கடந்த 8 ஆண்டுகளாகவே முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வங்கிக் கடன் பெற்று, ஆழ்குழாய் கிணறு அமைத்துவிட்டு காத்திருக்கிறோம். இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை. வாங்கிய கடனுக்கு எவ்வித பயன்பாடுமின்றி வட்டி கட்டி வருகிறோம். இதனால், கிராமப்புறங்களில் திறந்தவெளியில் ஆழ்குழாய் கிணறுகளை மூடி வைத்திருக்க வேண்டியுள்ளது. அப்பகுதிகளில் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்துக்கு விரைவில் வரவுள்ள தமிழக முதல்வரிடமும் இதுகுறித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார்.
இதுகுறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் கூறியது: புதிதாக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டிய ஆழத்தைப் பொறுத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகை வேறுபடும். ஆனால், ஒரே சீராக ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இலவச மின்சாரத்தை பொறுத்தவரை, தமிழக அரசுக்கு தகுதியுள்ள விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. மின்வாரியத்துக்கு அரசின் உத்தரவு கிடைத்தவுடன் இலவச மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது, “இலவச மின்சாரம் என்பது அரசின் கொள்கை முடிவு. இதுவரை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது. இனிவரும் விண்ணப்பங்களுக்கும் அரசின் உத்தரவு கிடைத்தவுடன் இலவச மின் இணைப்பு வழங்கப்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago