பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் விடுதி வார்டன்கள்: மீண்டும் ஆசிரியர் பணிக்கு அனுப்ப கோரிக்கை

By கி.மகாராஜன்

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் பல ஆண்டுகளாக வார்டன்களாக பணிபுரிபவர்களை ஆசிரியர் பணிக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் 58 அரசு பள்ளி, கல்லூரி, தொழில் பயிற்சி நிலையம் மற்றும் முதுநிலை கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளின் வார்டனாக (காப்பாளர்) அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு படியாக பள்ளி மாணவர்களுக்கு ரூ.950, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1100 வழங்கப்படுகிறது. இப்பணத்தில் மாதத்தில் 2 வாரம் கோழி இறைச்சி, 2 வாரம் ஆட்டு இறைச்சி, தினமும் முட்டையும் வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான விடுதிகளில் இப்பட்டியல் படி உணவு வழங்கப்படுவதில்லை.

விதிப்படி விடுதி வார்டன்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் விடுதியில் தங்கியிருக்க வேண்டும், பகுதி நேரமாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டும், 3 ஆண்டுக்கு பின் மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும். ஆனால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வார்டன்கள் பலர் 15 ஆண்டுக்கு மேலாக ஒரே விடுதியில் பணிபுரிகின்றனர்.

தமிழகத்தில் ஆதிதிராவிட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதியில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஆதிதிராவிட நலத்துறை விடுதி வார்டன்கள் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிவதால் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் விடுதியில் தங்கி பயிலும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

எனவே, 3 ஆண்டுக்கு மேல் ஒரே விடுதியில் பணிபுரியும் வார்டன்களை மீண்டும் ஆசிரியர் பணிக்கு அனுப்பவும், வேறு ஆசிரியர்களை வார்டன்களாக நியமித்து மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE