ராஜன் கமிட்டிக்கு எதிராக பாஜக வழக்கு: அரசுக்கு ஆதரவாக வழக்கில் தனித்தனியாக இணைய முடிவு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

'நீட்' தேர்வின் தாக்கம் பற்றி ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கும் உரிமை, மாநில அரசின் மறுக்கப்பட முடியாத உரிமை அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள கடமையும், பொறுப்பும் ஆகிறது. பாஜக போட்டுள்ள வழக்குக்கு எதிராக அனைத்துக்கட்சிகள்,அமைப்புகள் தனித்தனியே வழக்கில் இணைய உள்ளதாக தி.க.கூட்டிய அனைத்துக்கட்சிகள், அமைப்புகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

'நீட்'டை ஆதரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்துள்ள நிலையில், அதனை எதிர் கொள்ளும் வகையில் தி.க. சார்பில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் கூட்டம் கூட்டப்பட்டு பாஜகவின் செயல்பாட்டுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராஜன் கமிட்டியை எதிர்த்து பாஜக வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யும் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் கூட்டத்தை தி.க தலைவர் வீரமணி இன்று கூட்டினார். அரசியல் கட்சிகள், அமைப்புகள் கலந்துக்கொண்ட கூட்டத்தில் அதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து திராவிடர் கழகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“நீட்'டை ஆதரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் வகையில் தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் (1.7.2021).

தீர்மானம் 1:

'நீட்' தேர்வு என்பதனால் பயன்பெற்ற மக்களைவிட, பாதிக்கப்பட்ட மக்களே அதிகம்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மாவட்டந்தோறும் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருந்த நுழைவுத் தேர்வை 2007 தனிச் சட்டத்தின்மூலம் ஒழித்ததின் காரணமாக, பலன் அடைந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின், ஏழை, எளிய, அடித்தட்டு மாணவர்களின் டாக்டர்களாகும் மருத்துவக் கனவு நிறைவேறி, பலரும் இன்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரபல டாக்டர்களாக சிறப்பாக விளங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், மீண்டும் இந்த நுழைவுத் தேர்வு - 'நீட்' என்ற பெயரால் திணிக்கப்பட்டதன் காரணமாக, தமிழ்நாட்டு மக்களின் - ஆட்சியின் - எதிர்ப்பின் நியாயத்தை ஏற்று, ஓராண்டு விதிவிலக்கும்கூட மத்திய அரசால் தரப்பட்டதுண்டு. 'நீட்' தேர்வு தேவை என்பதற்குக் கூறப்பட்ட காரணங்களுக்கு மாறாக, ஊழல், ஆள் மாறாட்டங்கள், கேள்வித்தாள் குளறுபடிகளும் காணப்பட்டன.

பயிற்சி மய்யங்களில் (கோச்சிங் சென்டர்களில்) ஏராள பணம் செலவழித்துப் படித்த, வாய்ப்பும் வசதியும் உள்ளோர்தான் 'நீட்'டில் பெரும் அளவு வெற்றி பெற்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு (CMET) பொது மருத்துவ நுழைவுத் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வை பரிந்துரைத்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92-ஆவது அறிக்கை கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதை கணக்கில் கொண்டு, CMET தேர்வுக்கு ''விலக்கு'' கேட்கும் மாநிலங்களுக்கு ''விலக்கு'' அளிக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.

கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதை கணக்கில் கொண்டு, 'நீட்' தேர்வுக்கு ''விலக்கு'' கேட்கும் மாநிலங்களுக்கு ''விலக்கு'' அளிக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும் கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, மார்டன் டெண்டல் கல்லூரி வழக்கில் 2016 இல் வழங்கிய தீர்ப்பில், மருத்துவ பட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கைபற்றி மாநில அரசு சட்டம் இயற்றலாம் என்றும், குடியரசுத் தலைவரின் (ஒன்றிய அமைச்சரவை) ஒப்புதல் பெற்றதும் அச்சட்டம் அமுலுக்கு வரும் என்றும் கூறியது.

மேற்சொன்ன நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் தமிழ்நாட்டிற்கு 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்பதற்கு, தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. இந்த உரிமையை மத்திய அரசு ஏற்பதுதான் ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் உகந்தது.
தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கு இந்த 'நீட்' தேர்வு பாதகமானதால், பல மாணவ, மாணவியர்களும் தற்கொலை செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டது. இந்த நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பது, பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காகத்தான்.

கிராமப்புற மக்களை கரை சேர்க்க ஒரே வழி - 'நீட்' தேர்வை ரத்து செய்வதே என்ற அடிப்படையில் நடந்து முடிந்த தேர்தலிலும் பெரும்பாலான மக்கள் ஆதரவு (Mandate) தந்துள்ளனர்.

ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில், திமுக அரசு அதை ஒரு கொள்கை முடிவாக (Policy Decision) ஆளுநர் உரையிலேயே அறிவித்துள்ளது. (ஆளுநர் உரையின் அனைத்து அம்சங்களும் அமைச்சரவையில் விவாதித்து அறிவிக்கப்பட்டவையே!).

மக்கள் தீர்ப்பே ஜனநாயகத்தில் இறுதியானது என்பதால், அதனை செயல்படுத்த உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து கருத்து உரைக்குமாறு, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. அக்குழு இன்னமும் அறிக்கை தராத நிலையில், பாஜகவின் சார்பில் அப்படி ஒரு குழு அமைத்தது சட்டப்படி செல்லாது என வழக்காட முன்வந்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

காரணம், இறையாண்மை (Sovereign) அதிகாரம் என்பது மக்களிடமிருந்து பெறப்படுகிறது என்பதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் குறிப்பிடப்பட்டு இருப்பதோடு, அதில் வழங்கப்பட்டுள்ள மூன்று நீதிகளில் சமூகநீதியே முதலிடம், முன்னுரிமை பெற்றுள்ள நிலையில், 'நீட்' தேர்வு ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதியைப் பாதிக்கும் காரணத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் தேடி, பாதுகாக்க வேண்டிய மகத்தான கடமை தமிழக அரசுக்கு உண்டு.

அதன் காரணமாக, 'நீட்' தேர்வின் தாக்கம்பற்றி ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கும் உரிமை - மாநில அரசின் மறுக்கப்பட முடியாத உரிமை அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள கடமையும், பொறுப்பும் ஆகிறது. எனவே, பாஜக போட்டுள்ள வழக்கு நியாயமற்றது மட்டுமல்ல, சட்ட விரோதமும், மக்கள் விரோதமும் ஆகும் என்று இக்கூட்டம் கருதுவதால், மக்கள் குறைதீர்க்கும் வகையில் 'நீட்' தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இக்கூட்டம் ஆதரவு தெரிவிக்கிறது.

தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக ஒவ்வொரு கட்சியும், இயக்கமும் தனித்தனியாக அதனை ஆதரிக்கும் வகையில், அவ்வழக்கில் தங்களை இணைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதியைப் பாதுகாக்க தக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் ஒருமனதாய் இக்கூட்டம் முடிவு செய்கிறது. மக்களாட்சியின் மாண்பு காப்பாற்றப்பட, இத்தகைய நடவடிக்கைகள் இன்றியமையாதவை என்று கருதியே இந்த முடிவினை இக்கூட்டம் மேற்கொள்கிறது.

தமிழக மக்களின் ஒட்டுமொத்தமான 'நீட்'டுக்கு எதிரான சமூகநீதி உணர்வின் அடிப்படையில், தமிழக முதல்வர் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியதையும் முக்கியமாகப் பரிசீலித்து - ஏற்கெனவே ஓராண்டு தமிழகத்திற்கு 'நீட்'டிலிருந்து விலக்கு அளித்ததை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழகத்துக்கு 'நீட்'டிலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்கும் வகையில் முடிவெடுத்து அறிவிக்குமாறு மத்திய அரசின் பிரதமரை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்த முடிவின் அடிப்படையில் சமூகநீதிக்கு ஏற்பட்டு இருக்கும் அச்சுறுத்தல் குறித்தும், சமூகநீதிக்கு எதிரான பாஜகவின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் வகையிலும் மக்கள் மத்தியில் பிரச்சார இயக்கத்தைத் தீவிரமாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'நீட்' தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காகத் தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு செயல்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி, பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், ''சாதாரண, அதற்கும் குறைவான அறிவுடையவர்கள்கூட 'நீட்' தேர்வு இல்லையெனில், மருத்துவர்கள் ஆகிவிடக் கூடும்'' என்று தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர், இக்குறிப்பு, வெகுமக்களை இழிவுபடுத்துவதாகவும், ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே கல்வி உரியதென்று மறைமுகமாகக் குறிப்பிடுவதாகவும் உள்ளது. இதற்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றோர் விவரம் வருமாறு:

1. கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
2. நீதிபதி (ஓய்வு) அரிபரந்தாமன்
3. ஆர்.எஸ். பாரதி (தி.மு.க.)
4. என்.ஆர். இளங்கோ (தி.மு.க.)
5. கே.எஸ். அழகிரி (காங்கிரஸ்)
6. திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
7. மல்லை சத்யா (மதிமுக)
8. வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
9. க.பீம்ராவ் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்)
10. கே.எம்.காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி)
11. எம்.எச். ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)
12. சுப. வீரபாண்டியன் (திராவிட இயக்க தமிழர் பேரவை)
13. சத்ரியன் து.பெ. வேணுகோபால் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி)
14. எஸ்றா சற்குணம் (இந்திய சமூகநீதி இயக்கம்)
15. பிரின்ஸ் கஜேந்திரபாபு (கல்வி - பொதுப் பள்ளிக்கான மாநில மேடை)
16. புதுமடம் அனிஸ் (மனிதநேய ஜனநாயகக் கட்சி)
17. கோவை. ரவிக்குமார் (ஆதித் தமிழர் பேரவை)
18. கருணாநிதி (அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு)
19. டி.எம்.என். தீபக் (டிசம்பர் 3 இயக்கம்)
20. வீ.குமரேசன் (திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
21. எஸ்.ஜாகிர் உசேன் (தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம்)
22. ப.முருகையன் (இந்திய ஒன்றிய மக்கள் மன்றம்)
23. கோபண்ணா (காங்கிரஸ்)
24. வன்னிஅரசு (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
25. பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
26. பத்ரி சி.பி.ஐ.(எம்)
27. வந்தியத்தேவன் (மதிமுக)
28. ஜீவகிரிதரன் (ஐ.யூ.எம்.எல்)
29. அப்துல் சமது (ம.ம.க)
30. பா. கார்த்தி (தி.இ.த.பே.)
31. விடுதலைச் செல்வன் (ஆதித் தமிழர் பேரவை)
32. எஸ்.அண்ணாமலை (டிசம்பர் 3 இயக்கம்)

என இந்தக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஒருமனதாக 2 தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்