சாலைகள் அடிக்கடி தோண்டப்படுவதால் மதுரையில் தகவல் தொடர்பு சேவை பாதிப்பு: மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் 

By கி.மகாராஜன்

மதுரையில் விரிவாக்கப்பணிக்காக சாலை அடிக்கடி தோண்டப்படுவதால் தொலை தொடர்பு வயர்கள் சேதமடைந்து ஆன்லைன் கல்வி கற்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மதுரையில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. அவனியாபுரத்தில் புறவழிச் சாலை விரிவாக்கப்பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையில் 9 சிறிய பாலங்கள் கட்டப்படுகின்றன. சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையில் அடிக்கடி பள்ளம் தோண்டப்படுவதால் பூமிக்கடியில் செல்லும் தொலை தொடர்பு சேவைக்கான வயர்கள் அறுக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி தொலை தொடர்பு சேவை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கரோனா பெருந்தொற்று பரவல் ஊரடங்கால் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. மாணவ, மாணவிகள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் வழியாக கல்வி கற்கின்றனர். பல நிறுவனங்களில் பணியாளர்கள் வீடுகளிலிருந்து ஆன்லைனில் பணி மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் அவனியாபுரம் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிக்கு தோண்டப்படும் பள்ளங்களால் அடிக்கடி தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு வருவதால் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.சம்பத் கூறியதாவது:

மதுரை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட போக்குவரத்து நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வில்லாபுரம் பிஎஸ்என்எல் இணைப்பகத்திலிருந்து இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் புறவழிச்சாலை அகலப்படுத்தும் பணியால் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்படுகிறது.

சாலை விரிவாக்கப்பணியின் போது பிஎஸ்என்எல் உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவன பொறியாளர்களும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே ஆலோசனை நடத்தி எந்தெந்த இடங்களில் தகவல் தொடர்பு வயர்கள் செல்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் விரிவாக்கப்பணியை மேற்கொண்டால் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.

தற்போதைய கரோனா சூழலில் இணைய தொடர்பு மற்றம் தகவல் தொடர்பு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. மக்கள் அனைத்து பணிகளையும் இணையம் வழியாக மேற்கொண்டு வரும் சூழலில், இணைய பயன்பாடு அடிக்கடி தடைபட்டால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

எனவே, தொலைதொடர்பு சேவை பாதிக்கப்படாமல் சாலைப் பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையும், தகவல் தொடர்பு நிறுவன பொறியாளர்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
\இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE