மதுரையில் காப்பக குழந்தைகளை லட்சக்கணக்கான விலைக்கு விற்ற சம்பவத்தில் 2 தம்பதியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர், சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில், சுற்றித்திரியும் முதியவர்கள், குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு உதவி செய்வதோடு, காப்பகங்களிலும் தங்க வைக்க முயற்சி செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பழைய மருத்துவமனை கட்டிடத்தில் 'இதயம் டிரஸ்ட்' என்ற பெயரில் காப்பகம் தொடங்கினார்.
இதன்மூலம், மதுரையில் சாலையோரமாக சுற்றித்திரியும் முதியோர், நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் கணவரை இழந்து, பிரிந்து குழந்தைகளுடன் ஆதரவற்ற நிலையிலுள்ள பெண்களை இக்காப்பகத்தில் தங்க வைத்து இருந்தார்.
இதன்படி,35 ஆண்களும், 38 பெண்களும், தாய்மார்களுடன் கூடிய 11 குழந்தைகளும் அங்கு தங்கியிருந்தனர். இவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவம் போன்ற உதவிகளை நன்கொடையாளர்கள் மூலமும் செய்தார். இந்த காப்பகத்தில் சிவக்குமாருடன், மதர்சா, கலைவாணி உள்ளிட்ட ஊழியர்கள் பணிபுரிந்தனர்.
இந்நிலையில்தான் மேலூர் அருகிலுள்ள சேக்கிப்பட்டியைச் சேர்ந்த கணவரை இழந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை அவரது மூன்று குழந்தைகளுடன் சில மாதத்திற்கு முன்பு, 'இதயம் டிரஸ்ட்' காப்பகத்திற்கு வந்தார்.
சிவக்குமாரின் நண்பரான மேலூரைச் சேர்ந்த அசாருதீன் என்பவரின் சிபாரிசில் தங்கியிருந்தார். ஐஸ்வர்யாவின் ஒரு வயது ஆண் குழந்தை திடீரென கடந்த இரு நாட்களுக்கு முன்பு கரோனாவால் உயிரிழந்ததாக டிரஸ்ட் நிர்வாகம் அசாருதீனுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அசாருதீன் அரசு மருத்துவமனையில் விசாரித்தபோது, ஒரு வயது குழந்தை தொற்று பாதிப்பில் இறக்கவில்லை என தெரியவந்தது. இது குறித்து, தகவல் அறிந்த மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர், இச்சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
தத்தனேரி மயானத்தில் குழந்தை புதைக்கப்பட்டதாக கொடுத்த மாநகராட்சி முத்திரை கொண்ட ரசீது அடிப்படையில், டிரஸ்ட் ஊழியர் கலைவாணியிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது, குழந்தை இறக்கவில்லை என்பது தெரிந்தது.
குழந்தை இல்லாத மதுரை இஸ்மாயில்புரம் 4-வது தெருவைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் கண்ணன் - பவானி தம்பதிக்கு ராஜா என்ற புரோக்கர் மூலமும் ரூ. 2 லட்சத்துக்கு விற்றது கண்டறியப்பட்டது.
மேலும், அங்கு தங்கியிருந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவரின் 2 வயது பெண் குழந்தையை புரோக்கர் மூலம் மதுரை சக்கிமங்கலம் கல்மேடு பகுதியைச் சேர்ந்த அனீஸ்ராணி - சகுபர் சாதிக் தம்பதிக்கு விற்கப்பட்டதும், புரோக்கர்களான ராஜா, செல்வி-க்கு தலா ரூ. 50 ஆயிரம் வரை டிரஸ்ட் நிர்வாகம் கமிஷன் கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.
மதுரை நகர் துணை ஆணையர் பி. தங்கதுரை தலைமையில் கூடுதல் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வாளர்கள் ஹேமமாலா, செல்வக்குமார் அடங்கிய தனிப்படையினர், சட்டத்திற்கு புறம்பாக பணம் கொடுத்து குழந்தைகளை வாங்கிய கண்ணன் - பவானி, சகுபர் சாதிக் - அனீஸ்ராணி தம்பதியர்களை 12 மணிநேரத்திற்குள் பிடித்து, குழந்தைகளை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, கண்ணன், அவரது மனைவி பவானி, சகுபர்சாதிக் அவரது மனைவி அனீஸ்ராணி மற்றும் 'இதயம் டிரஸ்ட்' ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, புரோக்கர்கள் ராஜா, செல்வி ஆகியோரை போலீஸார் இன்று (ஜூலை 01) கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமான டிரஸ்ட் நிர்வாகி சிவக்குமார், ஊழியர் மதர்சாவை தனிப்படையினர் மதுரை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடுகின்றனர்.
இது தொடர்பாக, துணை ஆணையர் கூறும்போது, "சிவக்குமார் தொடக்கத்தில் சில பொது நல சேவையில் ஈடுபட்டதன் மூலம் டிரஸ்ட் நடத்த அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது காப்பகத்தில் முதியோர்கள் உள்பட 11 குழந்தைகள் தங்கியிருக்கும் நிலையில், டிரஸ்ட்-டுக்கு அரிசி, காய்கறி சப்ளை செய்யும் ராஜா என்பவர் மூலமே ஐஸ்வர்யாவின் ஆண் குழந்தை விற்கப்பட்டு இருக்கிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீதேவியின் பெண் குழந்தையும் புரோக்கர் மூலமே விற்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மொழி பிரச்சினையால் ஸ்ரீதேவி அவரது குழந்தை பற்றி விசாரிக்க முடியவில்லை. குழந்தைகளை தத்தெடுக்க, அரசின் பல்வேறு வழிகாட்டுதல் இருக்கும்போது, தெரிந்தும் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார் சிவக்குமார்.
இச்சம்பவம் தொடர்பாக, அங்கே தங்கியிருக்கும் பெண் குழந்தையின் விற்பனையை கண்டித்திருந்தும் அவர்கள் தைரியமாக குழந்தைகளை விற்று இருப்பது தெரிகிறது. 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சிவக்குமார், தனது செயல்பாட்டால் அதிகாரிகள், நன்கொடையாளர்களை கவர்ந்து இருக்கிறார்.
குழந்தைகளை வாங்கிய தம்பதியர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பேரம் பேசியே விற்றுள்ளனர். இது போன்ற குற்றச் செயலில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளாரா என, விசாரிக்கிறோம். மாட்டுத்தாவணி உள்ளிட்ட மேலும் இரு இடங்களில் அவருக்கு அலுவலகம் இருப்பதாக தெரிகிறது. அவை மூடப்படும்.
மேலும், மதுரையிலுள்ள 15-க்கும் மேற்பட்ட காப்பகங்களில் தங்கியிருக்கும் குழந்தைகள், முதியோர்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். முறையான அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கிடையில், சிவக்குமார் மேலும் சில குழந்தைகளை விற்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தலைமறைவான அவரையும் அவரது ஊழியர் மதர்சாவையும் பிடித்தால் சில உண்மைகள் தெரிய வாய்ப்புள்ளது. தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளோம். ஓரிரு நாளில் பிடித்துவிடுவோம்" என்றார்.
குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டிராஜா கூறுகையில், "குழந்தைகள் தத்தெடுப்பு, வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்து குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
குழந்தையில்லாத தம்பதிகளிடம் அதிக பணம் பறிக்கும் நோக்கில் சட்டத்துக்கு புறம்பாக இச்சம்பவம் நடந்திருக்கிறது. குழந்தை இல்லாத நபர்கள் சிவக்குமார் போன்ற தனி நபரை நம்பி ஏமாற வேண்டாம். அரசு சார்ந்த துறைகளை அணுகினால் முறையாக குழந்தை தத்தெடுப்பு, குழந்தை வளர்ப்புக்கு உதவி செய்வோம், மதுரையிலுள்ள காப்பகங்களை எங்களது குழு மூலம் ஆய்வு செய்வோம்" என்றார்.
ஆட்சியர் அனீஷ்சேகர் கூறுகையில், "மதுரையில் ஒரு வயது ஆண் குழந்தை மறைவு குறித்து முரண்பட்ட தகவலால் காப்பக பெண் ஊழியரிடம் விசாரித்தபோது, அந்த குழந்தை விற்கப்பட்டதும், மேலும், 2-வது பெண் குழந்தை ஒன்றும் விற்கப்பட்டது தெரிந்து மீட்கப்பட்டுள்ளது.
காப்பகத்தில் தங்கியிருந்த 100 பேரை பாதுகாப்பான காப்பகங்களில் மாற்றி பராமரிக்கப்பட்டு வருகின்றனர். காப்பகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. காப்பக உரிமையாளர் சிவக்குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையிலுள்ள அனைத்து காப்பகங்களிலும் குழந்தைகள் நலக்குழு அடங்கிய சிறப்புக் குழு மூலம் ஆய்வு செய்யப்படும்.
2 குழந்தைகள் தவிர, மேலும் குழந்தைகள் விற்கப்பட்டதா என, தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தில் போலி ஆவணம் தயாரிப்பில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமறைவான சிவக்குமாரை பிடித்தால் மேலும் சில தகவல்கள் தெரியலாம்.
குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர், அதற்கான மையங்கள், அதிகாரிகளை அணுக வேண்டும். இது போன்ற விலைக்கு விற்கும் நபர்களை அணுகினால் விற்பவர்களுடன் வாங்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
விருதுகள் பெற்ற காப்பக உரிமையாளர் சிவக்குமார்
மதுரையில் தனது சமூக செயல்பாடுகள் மூலம் காவல்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்த சிவக்குமார், சில விருதுகளை வாங்கியுள்ளனர். இந்த விருதுகள் மூலம் அவர் நன்கொடையாளர்களை அணுகி சேவை என்ற பெயரில் லட்சக்கணக்கான பணமும் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் குழந்தைகளின் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விற்று கோடிக் கணக்கில் சம்பாதித்திருக்லாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு டிரஸ்ட் நடத்த அரசு கட்டிடமும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஒரு அறையும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இருப்பினும், சட்டத்திற்கு எதிரான இவரது நடவடிக்கையால் காப்பகம் நடத்தும் சிலர் அச்சத்தில் உள்ளனர். தங்களது காப்பக உரிமம் போன்ற நடவடிக்கை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago