கிண்டி கிங்ஸ் நிலையத்தில் கரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

கிண்டி கிங்ஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இம்மையம் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு சிகிச்சையும், பயிற்சியும் அளிக்கும் மையமாகும்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“கிங்ஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மருத்துவர் தின விழாவில் கரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னை, கிண்டி, கிங்ஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள அரசு கரோனா மருத்துவமனையில், சட்டமன்றப்பேரவையில் ஆளுநர் உரைக்கு அளித்த பதிலுரையில் அறிவித்தவாறு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தை (Post Covid Care Clinic) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (1.7.2021) திறந்து வைத்தார்.

இம்மையத்தில் கரோனா தொற்றுலிருந்து மீண்டவர்களுக்கு இதயம், நரம்பியல், சிறுநீரகம், வயிறு மற்றும் குடல், கண், நீரிழிவு, உளவியல் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றிற்கான வசதிகளும் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, வெளிநாடு செல்பவர்களுக்கான மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டார். இம்மையம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இம்மையத்தில், சர்வதேச பயணிகளுக்கு பன்னாட்டு சுகாதார ஒழுங்குமுறை சட்டத்தின்படி ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு 1948-ல் இருந்து மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்தும் செலுத்தப்பட்டு, உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தென் இந்திய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரே தடுப்பூசி மையமாக இந்நிலையம் விளங்குகிறது. மேலும், ஹஜ் பயணம் மேற்கொள்வோர்க்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும் இம்மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர், சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மருத்துவர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று, அரசு மருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (ESI), இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் ஆகியோருக்கும், தனியார் மருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சங்கங்களுக்கும் வழங்கி கௌரவித்தார்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி இன மக்களுக்கும், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் 100 சதவிகித தடுப்பூசி போடப்பட்டு, இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை விளங்கிட செய்த நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யாவுக்கு, முதல்வர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அவர்களிடம் 55,000 Pulse Oxymeter கருவிகளை சுகாதாரத் துறை பணியாளர்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் வழங்கி, மாநில தலைநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்ட கரோனா கட்டுப்பாட்டு அறை (War Room) செயல்பாடுகளை விளக்கும் குறும்பட தகட்டினையும் வெளியிட்டார்.

கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் ஒருநாள் சம்பளத் தொகையான 7 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வரிடம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷைய்யன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மருத்துவர் தின விழாவில் பேசியதாவது:

“இன்று மருத்துவர் தினம். இந்த அரசைப் பொறுத்தவரையில் மக்கள் நலனுக்கான அரசு மட்டுமல்ல, மருத்துவர்கள் நலனுக்கான அரசாக உங்களுக்கு என்றும் துணை நிற்கும் என்பதை எடுத்துச் சொல்லி, மருத்துவ தின விழாவில் உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு பெற்றதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி, உங்களுடைய தியாகத்திற்கும் தொடர்ந்து ஆற்றக்கூடிய பணிகளுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி”. எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, டி.கே.ரங்கராஜன், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை சிறப்புப் பணி அலுவலர் செந்தில் குமார், தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் கணேஷ்.

மருத்துவம் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் நடராஜன், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக இணை இயக்குநர் தீபக் ஜேக்கப், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் டி.என். ஹரிஹரன், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் எஸ்.உமா, சுகி சிவம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்