முன்னாள் முதல்வர் அண்ணாவின் பெயரில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் அண்ணாவின்பெயரில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் முதல் முறையாக, நேற்று காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லம் வந்தார்.அங்குள்ள அண்ணாவின் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான படங்களைப் பார்வையிட்டார்.

அண்ணா நினைவு இல்லத்தில் குறிப்பேடு ஒன்று இருக்கும். அந்த நினைவு இல்லத்துக்கு வருபவர்கள் அந்த குறிப்பேட்டில் தங்கள் கருத்துகளை பதிந்துவிட்டுச் செல்வர். அந்தப் பதிவேட்டில் முதல்வர் ஸ்டாலின், "மக்களிடம் செல்,அவர்களுடன் வாழ அவர்களிடமிருந்து கற்றுக் கொள், அவர்களைநேசி, அவர்களுக்கு சேவை செய். இது அண்ணாவின் அறிவுரை. அவர் வகுத்துத் தந்த பாதையில் கழக ஆட்சி பீடு நடைபோடும் என்று உறுதி அளிக்கிறேன். நன்றி” என்று எழுதி கையெழுத்திட்டார்.

பின்னர் வெளியில் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அண்ணாவின் பெயரில் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும். வரும் பட்ஜெட் திட்டங்களின்போது அதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தமிழக மக்களுக்காக இந்தஅரசு எப்போதும் பாடுபடும் என்றார்.

முதல்வர் ஸ்டாலின் அண்ணா நினைவு இல்லம் வந்தபோது அவருடன் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மக்களவை உறுப்பினர் கா.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் உட்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் தலைமையில் சுமார்500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் ரங்கசாமி குளம் முதல் அண்ணாநினைவு இல்லம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அருகாமையில் உள்ள சிறிய பாதைகளில் வாகனங்களை திருப்பி அனுப்பினர். இதனால் நகரின் பல்வேறு இடங்களில்கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE