பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கென தனி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்: நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் திருவளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலை, துறைமங்கலத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையம் ஆகியவற்றை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பால் உற்பத்தியாளர்கள், ஆவின் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன், பால் விற்பனையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது பாடாலூர் பால் பண்ணையில் வெண்ணெய், நெய் மட்டும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பால் பவுடரும் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திலிருந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை பிரித்து தனி ஒன்றியமாக அமைக்க முதல்வர், பால்வளத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர்  வெங்கட பிரியா, எம்எல்ஏக்கள் பிரபாகரன், சின்னப்பா, க.சொ.க.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE