நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற 3 உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இன்று (ஜூன் 30) சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய வளாகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, தேசிய நெடுஞ்சாலை, நபார்டு மற்றும் கிராம சாலைகள், திட்டங்கள், பெருநகரம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் - 2, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டம், சாலை மேம்பாட்டு நிறுவனம், சென்னை எல்லைச் சாலை போன்ற பணிகளுக்கான மாநில அளவிலான ஒப்பந்ததாரர்களுடன் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள் மற்றும் பாலங்கள் பணிகள் தொடர்பாகவும், சாலைகள் தரமானதாகவும், விரைந்து முடித்திட அறிவுறுத்தியும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் முன்னிலை வகித்தார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
"கி.மு.4-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மௌரியப் பேரரசு காலத்தில்தான் சாலைகளை 'ராஜபாட்டை' என்றும் 'பஞ்சபாதை' என்றும் பிரித்து அழைத்துள்ளார்கள். இமயம் முதல் குமரி வரை உள்ள வழிபாட்டுத் தலங்கள் இணைக்கத்தான் அந்தக் காலத்தில் அரசர்கள் பாதையை அமைந்துள்ளனர்.
தென்னகத்தைப் பொறுத்தமட்டில், உஜ்ஜெயினியிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற ஆன்மிக நகரங்களை இணைத்துப் பாதைகள் அமைத்துள்ளனர். அதற்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சியில்தான் 1785-ம் ஆண்டுதான் இம்பீரியல் சாலைகள் என்றும் டிரங்ரோடு என்றும் பிரதான சாலைகளை அமைக்கத் தொடங்கினார்கள். 1927-ம் ஆண்டு நியமித்த எம்.ஆர்.ஜெய்கர் கமிட்டி பரிந்துரையில் ஐ.ஆர்.சி இந்திய சாலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
1933-ம் ஆண்டு ஏ.விப்பன் கமிட்டி பரிந்துரைகளைப் பெற்று சாலைகளின் வகைப்பாடுகள் உருவாக்கப்பட்டன. 1943-ஹெச்.ஆர்.டோக்ரா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரை பெற்று இன்றைய நெடுஞ்சாலைத் துறை உருவாக்கப்பட்டது. 1845-ல் சென்னை ராஜதானியில், சென்னை - விழுப்புரம் - திருச்சி - திண்டுக்கல் சாலையும், சென்னை - வேலூர் - தருமபுரி - சேலம் - கொச்சின் சாலையும் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் நிலத்தின் தரமும் தட்பவெட்ப நிலையும் மாறுபாடாக உள்ளதால், அந்தந்தப் பகுதிக்குத் தக்கவாறு ஆய்வகம் அமைக்கப்பட்டது. 1954-ம் ஆண்டு சென்னையில் பி.ராமசாமி ரெட்டியார் எடுத்துக்கொண்ட முயற்சியில் 'நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம்' தொடங்கப்பட்டது. அதனால்தான் தற்பொழுது தரமான சாலைகள் அமைக்கப்படுகின்றன.
சாலைகள்: மனித நாகரிகத்தின் முக்கியப் பங்கு
1752-ம் ஆண்டில் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயிண்ட் தாமஸ் மலை வரை உள்ள மவுண்ட் ரோடு அமைக்கப்பட்டது. முதன் முதலாக கருங்கல் ஜல்லியுடன் கிராவல் சேர்த்து கப்பி சாலையாக அமைக்கப்பட்டது.
அரசாங்கத்தாலேயே துறை மூலமாகவே செய்யப்பட்டு வந்த வேலைகளை ஒப்பந்தக்காரர் மூலம் செயலாக்கலாம் என்ற அடிப்படையில் முதன் முதலாக 1860-ம் ஆண்டு நெல்லையில் நம்பி ஆற்றின் மீது தளபதி சமுத்திரம் அருகில் பாலம் ஒன்று ஒப்பந்தக்காரர் மூலம் கட்டப்பட்டது. 1882-ல் எல்பின்ஸ்டன் என்ற கவர்னர் கோட்டையிலிருந்து அடையாறு வரை சாலை அமைத்து அடையாற்றின் குறுக்கே பாலம் கட்டினார். அது அவர் பெயரிலேயே எல்பின்ஸ்டன் பாலம் என்று அழைக்கப்பட்டது. 1918-ல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு மைல் தூரத்திற்கு தென்னகத்திலேயே முதன்முதலாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறை உருவாக்கம்
01.04.1946-ல் நெடுஞ்சாலைத்துறை உருவாக்கப்பட்டது. அண்ணா மேம்பாலம் 01.07.1973-ல் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. 1973-ல் நெல்லையில் ரூ.47 லட்சத்தில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. கோவையில் 10.01.1974-ல் மூன்றடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. பாம்பன் கடல் மீது ரூ.18 கோடி மதிப்பில் பாம்பன் மேம்பாலத்தை கட்டியது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்.
உலகத் தரம் வாய்ந்த சாலைகளை அடித்தளம் இட்டவர் கருணாநிதி. 09.05.1997-ல் கருணாநிதி, மத்திய சுடுகலவை இயந்திரம், அதிர்வு உருளை, மற்றும் பேவர் போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்தி உலகத்தரம் வாய்ந்த சாலைகளை அமைக்கும் பணிகளைத் தமிழகத்தில் செயல்படுத்திட ஆணை பிறப்பித்தார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அதி நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி சாலைகளை அமைக்கும் ஒப்பந்தக்காரர்களையும், மற்றும் அனைத்து ஒப்பந்தக்காரர்களையும் இங்கு சந்தித்து கலந்துரையாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் 'தரமே நிரந்தரம் - இதுவே தாரக மந்திரம்' என்பதை நினைவில் வைத்துப் பணிகளைச் செய்திட வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், "நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நெடுஞ்சாலைத்துறையின் பங்கு மிகவும் அதிகம். சாலை மற்றும் பாலங்களைக் கட்டும்பொழுது சில இடங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன? பணி செய்யும் பொழுது ஏற்படும் சங்கடங்கள் என்ன? என்பதை ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.
மணல் கிடைப்பதில்லை, எம்.சாண்ட் பயன்படுத்த வேண்டும் என்றால் திட்ட மதிப்பீட்டைத் திருத்த வேண்டும், சென்னையில் நெடுஞ்சாலைப் பணிகளைச் செய்திட காவல்துறையின் அனுமதி பெற வேண்டும், காலதாமதத்தைத் தவிர்க்க துறையே அனுமதி பெற்றுத் தர வேண்டும், ஒப்பந்ததாரர் உரிமம் புதுப்பித்தலில் உள்ள சில பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டும், தார் மற்றும் சிமென்ட் விலையேற்றம், பணி தொடங்கும் பொழுது ஒரு விலை, முடிக்கும் பொழுது ஒரு விலை, இடையில் உள்ள வித்தியாசத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
மேலும், டெல்டா மாவட்டங்களில் கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில்லை. கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வருவதால் போக்குவரத்துச் செலவு கூடுகிறது. டெல்டா மாவட்டத்தில் பணிக்கு மதிப்பீடு தயார் செய்யும் முன்பு கண்காணிப்புப் பொறியாளர் நிலையில் கள ஆய்வு செய்து பின்னர் மதிப்பீடு தயாரிக்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்துவதில் காலதாமத்தைப் போக்க நெடுஞ்சாலைத் துறைக்குத் தனியாக மாவட்ட வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். தெரிவிக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுசென்று நிறைவேற்றுவோம். ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 3 உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்.
நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பொழுது வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரக் கன்றுகள் நட்டு அதைப் பராமரிக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடி குறித்து துறை அலுவலர்கள் அறிக்கை தயார் செய்து தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் முதல்வரிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
கிராமப் பகுதிகளில் சாலைகளை செம்மைப்படுத்திடும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள 10,000 கி.மீ. ஊரகச் சாலைகளை ஒப்படைக்கக் கோரியுள்ளோம். சாலைகளை ஒப்படைத்ததும் அதற்கு மதிப்பீடுகள் தயார் செய்து தரமான சாலைகள் போடப்படும். மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை 5 முக்கியச் சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைத்திட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது" என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago