ஏ.கே.ராஜன் கமிட்டி கண்துடைப்பு நாடகம்: இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? இல்லையா?-எடப்பாடி பழனிசாமி கேள்வி

By செய்திப்பிரிவு

''நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக்கு வந்தபின்னர் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்து ஆய்வு செய்கிறேன் என்கிறார்கள். இது கண்துடைப்பு நாடகம். நீட் தேர்வு, உண்டா இல்லையா என முதல்வர் அறிவிக்க வேண்டும்'' என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

''நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் கமிட்டியை எதிர்த்து பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் மூலம் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது. இதில் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லப் போகிறார்'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

''நீட் தேர்வைப் பொறுத்தவரை நான் சட்டப்பேரவையில் முதல்வரை நேரடியாகக் கேட்டேன். இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? ஏனென்றால் மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர். மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று நேரடியாகக் கேட்டேன். ஆனால், முழுமையான பதில் இல்லை.

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி என்ன? திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் அப்போது வந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஆட்சிக்கு வந்தபின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளார்கள். அவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு மக்களிடத்தில் நீட் தேர்வு எந்த அளவுக்கு பாதிப்பு என்பதைக் கேட்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் பாஜக அதை எதிர்த்து வழக்குப் போட்டுள்ளதை செய்தித்தாள் வாயிலாக அறிந்தேன். உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நீட் தேர்வு நடத்தப்படும் என்கிற தீர்ப்பை அளித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நாமும் அதை ஒட்டியே நடத்தவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முயற்சி செய்தோம், முடியவில்லை. நீட் தேர்வை நடத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம். ஆனால், இதெல்லாம் தெரிந்து தேர்தல் நேரத்தில் வாக்கைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் முதல்வரும், அவருடன் இருந்த தலைவர்களும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்கிற பொய்யான வாக்குறுதியை அளித்தனர்.

இதை எல்லாம் செய்ய முடியாது என்று தெரிந்தும், எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகப் பொய்யைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் நீதிபதி தலைமையில் குழு அமைத்து கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இன்றைக்கு இந்தக் குழு அமைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி பெறப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

வழக்கு நிலுவையில் உள்ளதால் வேறு எதையும் பேச முடியாது. நிச்சயம் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களைப் பொறுத்தவரை மாணவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். பெற்றோர் குழப்பத்தில் உள்ளார்கள். அரசு தெளிவுபடுத்த வேண்டும். நீட் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? நடக்காதா? அந்த விவரத்தை அரசு வெளியிட்டால்தான் மாணவர்களுக்குத் தெளிவு வரும். தயாராவார்கள். ஆகவே அரசு அறிவிக்க வேண்டும்”.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE