30-வது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவி ஏற்றார்: பொறுப்பை ஒப்படைத்தார் திரிபாதி

By செய்திப்பிரிவு

தமிழக காவல்துறையின் 30-வது டிஜிபியாக டிஜிபி சைலேந்திர பாபு பொறுப்பேற்றுக் கொண்டார். ஓய்வுபெறும் டிஜிபி திரிபாதி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். பின்னர் அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர் சைலேந்திர பாபு. குழித்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்த அவர் மதுரை விவசாயப் பல்கலைக்கழகத்தில், விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இவர் 1987ஆம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானார். முதன்முதலில் தருமபுரி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராகக் காவல் பணியைத் தொடங்கினார். பின்னர் கோபிச்செட்டிப்பாளையம், சேலம், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் அடையாறு துணை ஆணையராகப் பணியாற்றினார்.

2001ஆம் ஆண்டு டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்றார். 2006ஆம் ஆண்டு ஐஜியாகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர் 2008ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப் படை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு கோவை நகரக் காவல் ஆணையராகச் செயல்பட்டார்.

2012ஆம் ஆண்டு ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்ற நிலையில், கடலோரக் காவல் குழும ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். பின்னர் ரயில்வே ஏடிஜிபியாக மாற்றப்பட்டார். 2019ஆம் ஆண்டு டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றார். ரயில்வே டிஜிபியாகத் தொடர்ந்தார்.

இந்நிலையில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து, 7 டிஜிபிக்கள் போட்டியில் இருந்த நிலையில், இறுதியாக யூபிஎஸ்சி அனுப்பிய பட்டியலில் முதலிடத்தில் இருந்த சைலேந்திர பாபுவை அடுத்த சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்து அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று காலை 11.30 மணி அளவில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் முறைப்படி அடுத்த சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் டிஜிபி திரிபாதி பொறுப்பை ஒப்படைத்தார். பின்னர் புதிய டிஜிபிக்குக் காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். புதிய சட்டம்- ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE