சென்னையில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இல்லாத 8,000 தெருக்களுக்கு குழாய் இணைப்புகள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னையில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இல்லாத 8,000 தெருக்களுக்கு குழாய் இணைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இன்று (ஜூன் 29) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று எம்.ஆர்.சி. நகர், நகர நிர்வாக அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் நாள்தோறும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் அளவு, சென்னைக்கு வழங்கப்பட்டு வரும் நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் மற்றும் பழைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் புனரமைத்தல் ஆகிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அமைச்சர், சென்னையில் தற்பொழுது நாளொன்றுக்கு சுமார் 850 மி.லி. குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை நாள்தோறும் 1,146 மி.லி. அளவுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும், சென்னையில் உள்ள 35,000 தெருக்களில் குடிநீர் குழாய் அமைப்பு இல்லாத சுமார் 8,600 தெருக்களுக்குக் குடிநீர் குழாய் அமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், குடிநீர் குழாய் இணைப்புக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு 15 நாட்களில் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், சென்னையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தையும் புனரமைத்து குடிநீர் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினை விரைவுபடுத்தி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளான மாத்தூர், ஜல்லடம்பேட்டை, மடிப்பாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அமைச்சர் உத்தரவிட்டார்.

கொடுங்கையூர் மற்றும் கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படும் நீரைத் தொழிற்சாலைகளுக்கு விநியோகிப்பதை அதிகரிக்கவும், கழிவுநீர் கட்டமைப்புகளைத் தூர்வாரி பராமரிக்கும் பணிகளைப் பருவமழைக்கு முன்பாக விரைந்து முடிக்கவும், கழிவுநீர் கட்டமைப்புகளில் ஏற்படும் பழுதுகளைப் பொதுமக்களுக்கு சிரமமின்றி உடனுக்குடன் சீர்செய்யவும், கழிவுநீர் கட்டமைப்பு தூர்வாரும் பணிகளில் பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி இயந்திரங்களைப் பயன்படுத்தி தூர்வாரவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளைத் துரிதப்படுத்தவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

சென்னை மாநகரில் அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், மாம்பலம் கால்வாய், ஓட்டேரி நல்லா, வீராங்கல் ஓடை மற்றும் கேப்டன் காட்டன் கால்வாய் ஆகிய ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து அவற்றைச் சுத்திகரிப்பு செய்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை மேற்குறிப்பிட்ட ஆறுகளில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மேட்டூர் அணையில் மழைக்காலங்களில் உபரியாக வெளியேறும் நீரினை சென்னைக்குக் கொண்டுவர புதிய திட்டம் செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர், நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், அம்ரூத் திட்டப்பணிகள், பாதாளச் சாக்கடை திட்டம், மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீரைக் குடியிருப்புகளுக்குப் பகிர்மானம் செய்வதற்கான திட்டம், 2021-22இல் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்கவும், ஒப்பந்த நிலையில் உள்ள திட்டங்களை விரைவில் தொடங்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்