கற்றுக்கொள்ள நினைப்பவர் எந்த சூழ்நிலையிலும் கற்றுக்கொள்வார் என்பது பழைய மொழி. அதேபோல கற்றுக்கொடுக்க நினைப்பவர் எந்த சூழ்நிலையிலும் கற்றுக்கொடுக்கலாம் என்னும் புது மொழியை கரோனா காலம் சாத்தியமாக்கி உள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு அரசு, தனியார் என அனைத்துப் பள்ளி மாணவர்களுமே ஆன்லைன் மூலம் படிக்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாகி விட்டனர். இதில் இணைய வசதி இல்லாத விளிம்புநிலை மாணவர்கள், தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களின் நிலை தொடக்கம் முதலே கேள்விக்குறியாக இருந்து வந்தது. நகரங்களில் இணைய வசதி எளிதில் கிடைத்தாலும் அதைப் பெறத் தேவையான செல்போன், டேப் அல்லது கணினி உள்ளிட்ட உபகரணங்களை வாங்க முடியாமல் ஏராளமான மாணவர்கள் அவதிப்பட்டனர்.
ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்த மாணவர்களில் சிலரும், செல்போன், கணினித் திரையை நீண்ட நேரம் கவனிப்பதால் சில பிரச்சினைகளுக்கு ஆளாகினர்.
இந்தச் சூழலில், சாதாரண போனில் மிகக்குறைந்த இணைய அலைவரிசை கிடைத்தால்கூட இயங்கும் வகையில் ஆன்லைன் கல்வி ரேடியோவைத் தொடங்கி அதன் மூலம் மாநிலம் முழுவதும் கற்பித்தலை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார் கடலூர் மாவட்டம், கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா. இந்த ரேடியோவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் தினந்தோறும் சுழற்சி முறையில் ஒலிபரப்பாகின்றன.
» கரோனா நிதிக்காக முதல்வர் ஓவியம் ஏலம்: 15 வயது படைப்பாளியின் புது முயற்சி
» கரோனா நிவாரணம்: ஓர் அரசுப் பள்ளியே சேர்ந்து கொடுத்த உண்டியல் நிதி
எப்படி இந்த யோசனை வந்தது என்று அவரிடம் கேட்டபோது, ''கல்வித் தொலைக்காட்சி வந்தபோதே இதை ரேடியோ மூலமும் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், அப்போது இதற்கான தேவை இருக்கிறதா என்ற சந்தேகத்தில் பெரிதாக மெனக்கெடவில்லை. ஆனால், கரோனா ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் கல்வி ரேடியோவுக்கான தேவை இருப்பது புரிந்தது.
ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கேட்கலாம்
எங்கள் பள்ளி மாணவர்களுக்காக நான் இதைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கினேன். அப்போது பெரிய அளவில் எதையும் செய்யவில்லை. ஒரு பரிசோதனை முயற்சியாக ஒரே நேரத்தில் 10- 15 பேர் மட்டுமே கேட்கும் வகையில் கல்வி ரேடியோவைத் தொடங்கினேன். காரணம் ஆன்லைன் ரேடியோ பற்றி எனக்கும் அப்போது தெரியாது. டிவி, ரேடியோ என்பதெல்லாம் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால், ஆன்லைனிலேயே ரேடியோ தொடங்கலாம் என்பது தெரிய வந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, இணையத்தின் மூலம் அடுத்தடுத்த வசதிகளைத் தெரிந்துகொண்டேன். இப்போது ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் எங்கள் ரேடியோவைக் கேட்கலாம்'' என்று புன்னகைக்கிறார் ஆசிரியர் கார்த்திக்ராஜா.
முதலில் தொடங்கியபோது தன்னுடைய பள்ளியில் அவர் பாடம் எடுக்கும் 3, 4ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ரேடியோ மூலம் கற்பித்துள்ளார். இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இந்த முயற்சியை சமூக வலைதளங்களில் பதிவிட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற வகுப்பு மாணவர்கள், மற்ற பள்ளி மாணவர்களும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து பிற ஆசிரியர்களையும் ரேடியோ மூலம் அவர்கள் வகுப்புக்கான கற்பித்தல் பணியில் இணைத்துள்ளார். தற்போது 75 ஆசிரியர்கள் இந்த வகைக் கற்றலில் தன்னார்வத்துடன் இணைந்து கற்பித்தலை நிகழ்த்தி வருகின்றனர்.
தினந்தோறும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த ரேடியோ நேரலையில் இயங்குகிறது. பிற நேரங்களில் பிளே லிஸ்ட் வசதியை ஒலிக்கவைத்துக் கேட்கலாம். சனி, ஞாயிறுகளில் புத்தகத்துக்குப் பின்னால் உள்ள கேள்வி- பதில் பயிற்சி வழங்கப்படுகிறது. காலை 10 முதல் 12.30 வரை தொடக்கப் பள்ளி வகுப்புகள், உணவு இடைவேளை, 1.30 மணிக்குச் சொல்வதை எழுதுதல், விடுகதை உள்ளிட்ட பயிற்சிகள் 3 முதல் 6 மணி வரை நடுநிலைப்பள்ளி வகுப்புகள் என ஒழுங்கோடு இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ இயங்குகிறது.
கற்றலில் கேட்டலும் நன்று
இணையத்தில் கற்பதற்கும் ரேடியோ மூலம் கற்பதற்கும் என்ன வித்தியாசம் என்று ஆசிரியர் கார்த்திக்ராஜாவிடம் கேட்டதற்கு, ''இணையம் மூலம் படிக்கும்போது டேட்டா அதிகமாக செலவாகும். வீடியோ வழியே கற்கும்போது ஒரு நாளைக்கு ஒரு ஜிபி கூடத் தேவைப்படலாம். மேலும் குறுக்கே தேவையில்லாத விளம்பரங்கள், ஆபாச விளம்பரங்கள் போன்றவை வரலாம். ஆனால் ரேடியோவைக் கேட்கும்போது அவற்றுக்கான வாய்ப்புகள் இல்லை. அதேபோலத் தனியாக எந்தச் செயலியையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை.
மேலும் நீங்கள் ஏதாவது வேலை செய்துகொண்டே கூடக் கேட்கலாம். குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பது பெற்றோருக்கும் தெரிந்துவிடும். பிள்ளைகளின் கவனம் சிதறாது. பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதற்கும் இது வசதியாக இருக்கும். இதற்கு இணைய வசதி கொண்ட மொபைல்தான் வேண்டும் என்பது இல்லை. சாதாரண பட்டன் போனில் கூட இணைய வசதி இருந்தால் கேட்கலாம். 2ஜி நெட்வொர்க் போதும். 1000, 1500 ரூபாய் போன் கூடப் போதுமானது. உதகை உள்ளிட்ட மலை கிராமப் பள்ளிகளில்கூட ரேடியோ துல்லியமாக ஒலிபரப்பாகிறது. தினந்தோறும் கால அட்டவணை போட்டு, ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்களை ஒலிபரப்புகிறோம்.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஒலிபரப்பப்படும் என்பதால் மீண்டும் கேட்க முடியாது என்பதில்லை. பிளே லிஸ்ட் வசதியும் எங்கள் ரேடியோவில் உள்ளது. அதன்மூலம் ஒரே பாடத்தைப் பின்னர் நேரம் கிடைக்கும்போது திரும்பத் திரும்பக் கூடக் கேட்கலாம். இது மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்'' என்று உறுதியாகச் சொல்கிறார் ஆசிரியர் கார்த்திக்ராஜா.
பாடங்கள் தவிர்த்து
ரேடியோவில் கேட்டுப் படிப்பதால் ஒருவழி உரையாடலாக மாறிவிடக் கூடாது என்று யோசித்த ஆன்லைன் கல்வி ரேடியோ குழுவினர், பாடங்கள் நடத்தும்போதே செய்முறைப் பயிற்சிகளையும் கொடுத்து, மாணவர்கள் அதனைச் செய்கிறார்களா என்று கண்காணிக்கின்றனர். கவனித்தல், வாசித்தல், எழுதுதல், புரிந்துகொள்ளுதல், கீழ்ப்படிதல், பயிற்சி என அனைத்துமே அதில் அடங்கி விடுகிறது.
மாணவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக எந்த ஓர் ஒலிப் பாடமும் அதிகபட்சம் அரை மணி நேரத்தைத் தாண்டாமல் பாட அட்டவணையை அமைத்திருக்கின்றனர். மேலும் கதை சொல்லுதல், பாட்டு, விடுகதை போன்ற மாணவர்களின் தனித் திறமைகளுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். தினந்தோறும் மாலை 6 மணிக்கு 'மின்மினிகள் மின்னும் நேரம்' என்ற பெயரில் அதற்கெனத் தனி நிகழ்ச்சி நடத்தி, அதில் பங்களிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்குகின்றனர். இது அவர்களுக்குப் பெரிய ஊக்கமாக அமைகிறது. பாடம் மட்டுமே என்றில்லாமல் பொது அறிவு, கலை, கதை என மாணவர்களுக்குப் பயனுள்ள அனைத்தையும் ஆன்லைன் கல்வி ரேடியோ குழுவினர் வழங்குகின்றனர்.
கல்வி ரேடியோ செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசும் ஆசிரியர் கார்த்திக்ராஜா, ''இதுவரை 2.25 லட்சம் முறை கல்வி ரேடியோ இணையப் பக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 13 ஆயிரம் மணி நேரங்கள் மாணவர்கள் இதைப் பயன்படுத்தியுள்ளனர். தினந்தோறும் சராசரியாக 100 மணி நேரம் மாணவர்கள் கல்வி ரேடியோ ஒலிப்பாடங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை தனித் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு 1,700-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை அனுப்பியுள்ளோம்.
பாடத் தயாரிப்பு முழுவதிலும் சக அரசுப் பள்ளி ஆசிரியர்களே தன்னார்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். தற்போது தமிழகம், புதுச்சேரி என அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக 40 வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து, செயல்பட்டு வருகிறோம்'' என்று கூறுகிறார்.
இதற்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று ஆசிரியர் கார்த்திக்ராஜாவிடம் கேட்டபோது, ''ஒரு ரேடியோ தொடங்க சேமிப்பகத்தையும் விர்ச்சுவல் ஸ்டுடியோவையும் வாங்க வேண்டும். இரண்டையும் ஒரு தனியார் விற்பனையாளரிடம் இருந்துதான் வாங்கினேன். அதேபோல இணையதளத்தின் பெயர் (கல்வி ரேடியோ.காம்), ப்ளே லிஸ்ட் ஆகியவற்றையும் வாங்கியுள்ளேன். தொடர்ந்து இதை நிர்வகிக்க மாதாமாதம் செலவு ஆகிறது. எனது சொந்தப் பணத்திலும் சிலரது பங்களிப்பையும் சேர்த்துத்தான் ஆன்லைன் கல்வி ரேடியோவை நடத்துகிறேன்.
அரசு கைகொடுக்குமா?
தினந்தோறும் இதற்காகக் குறைந்தது 8 மணி நேரம் செலவிட்டு வருகிறேன். ஊரடங்கு காலம் என்பதால் என்னால் இதில் கவனம் செலுத்த முடிகிறது. பள்ளிகள் திறந்துவிட்டால் கல்வி ரேடியோ பயன்பாட்டைத் தொடர்வது கடினமாக இருக்கும். இதற்கென அரசு தனிக்குழு அமைத்துச் செயல்படுத்தினால் இது சாத்தியமாகும். அதன்மூலம் இன்னும் பெரிதாக அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி ரேடியோ பக்கத்தை மாற்றலாம். இன்னும் அதிகம் ஆசிரியர்களைச் சேர்த்து முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றலாம்.
ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி ரேடியோ தொடங்கினால் மிகவும் வசதியாக இருக்கும். தனிப்பட்ட வகையில் என்னாலேயே இதை உருவாக்க முடிகிறது என்பதால் அரசு நினைத்தால் 12 வகுப்புகளுக்கும் 12 தனித்தனி ரேடியோக்களை உருவாக்கி தமிழ்நாட்டுக்கே வகுப்புகள் எடுக்க வைக்கலாம். அரசுக்கு இதைக் கோரிக்கையாகவே வைக்கிறேன்'' என்று ஆசிரியர் கார்த்திக்ராஜா வேண்டுகோள் விடுக்கிறார்.
ஊர் கூடித் தேர் இழு என்பார்கள். தன்னார்வ ஆசிரியர்கள் சிலருடன் சேர்ந்து தேரை இழுத்து வருகிறார் ஆசிரியர் கார்த்திக்ராஜா. ஊரும் அரசும் சேர்ந்து முயன்றால் அரசுப் பள்ளி மட்டுமல்ல அனைத்து மாணவர்களும் பயன் பெறுவார்கள்.
கல்வி ரேடியோ பக்கத்தைக் காண: www.kalviradio.com
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago