பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் உண்ணும் மாட்டுக்கறி விற்பனையைத் தடுக்கும் நோக்கத்தில் செயல்பட்ட வட்டாட்சியர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருப்பூர் ஆட்சியரிடம் 20 அமைப்புகள் சார்பில் மனு அளித்து வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த 26-ம் தேதி அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட கானாங்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். வேலுச்சாமி என்பவரது, மாட்டிறைச்சி விற்பனை செய்யும் கடையில் ஆய்வு செய்தார். அப்போது, புகாரின் பேரில் வந்துள்ளதாகவும், இங்கு மாடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்றும் வாய்மொழியாக உத்தரவிட்டார்.
இது தொடர்பாக, அவர் உத்தரவிடும் வீடியோ, வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது. பல்வேறு அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அவிநாசி வட்டாட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், காட்டாறு உட்பட சுமார் 20 அமைப்புகள் ஒருங்கிணைந்து, உணவுப் பாதுகாப்புக்கான மக்கள் கூட்டியக்கம் சார்பில் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, நேற்று (ஜூன் 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார்.
"மக்களின் உணவு உரிமையில், யாரொருவரின் தலையீட்டையும் அரசு அனுமதிக்கக் கூடாது. எவ்வித புகாரும் இல்லாத நிலையில், மாட்டிறைச்சி வெட்டக்கூடாது என்று கடை உரிமையாளரை அச்சுறுத்திய வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் அரசுத்துறை விதிகளை மீறி, மாட்டிறைச்சி விற்பனையாளரை மிரட்டும் வகையிலான அழுத்தம் கொடுத்தவர்கள் மீதும், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளில் அரசு அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து, மாவட்ட நிர்வாகம் தெளிவான வரையறைகளை மேற்கொள்ள வேண்டும்" என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆட்சியரிடம் புகார் மனு
இதனைத் தொடர்ந்து, மாட்டுக்கறி உணவுப் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் விடுதலைச்செல்வன் தலைமையில் பல்வேறு அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம் நேற்று அளித்த மனுவில், "கானாங்குளத்தில் வேலுச்சாமி கடந்த 20 ஆண்டுகளாக, மாட்டிறைச்சி விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், அங்கு சென்ற வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், மாட்டிறைச்சி விற்பனை செய்தால் வழக்குப் போடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலுச்சாமி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் உண்ணும் மாட்டுக்கறியைத் தடுக்கும் நோக்கத்தில் செயல்பட்ட வட்டாட்சியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 மற்றும் 2018-ன் படி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும், பல வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரையும் இடமாற்றம் செய்துள்ளது வழக்கமான நடைமுறை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago