தினக்கூலி, தொகுப்பூதியத்தில் உள்ள திருக்கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

குறைந்த சம்பளத்தில் நீண்டகாலமாக தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும், ஜெயலலிதாவுக்குப் பின் அவரது அரசிலும், தெய்விகம், ஆன்மிகம், திருக்கோயில்கள் மற்றும் அதன் பணியாளர்கள் மேன்மை போற்றிப் பாதுகாக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியில், தனி நபர் பெயரில் தவறாகப் பட்டா மாற்றம் செய்யப்பட்ட 1,224 திருக்கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 8,150 ஏக்கர் நிலங்கள் மீண்டும் திருக்கோயில்களின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது.

ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 3,175 ஏக்கர் நிலம், சுமார் 612 கிரவுண்டு மனைகள் மற்றும் கட்டிடங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 3,700 கோடி ரூபாய் ஆகும்.

1. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருக்கோயில் சொத்துகளை மீட்போம்; திருக்கோயில் பணியாளர்களைப் பாதுகாப்போம் என்று வாயால் சொல்லும் ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுக்க உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இதனால், திருக்கோயில்களுக்குத் தொடர்ந்து இழப்பு ஏற்படும். எனவே, அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி திருக்கோயில்களுக்கு வாடகை பாக்கி நிலுவை வைக்காதவர்கள் தொடர்ந்து அச்சொத்துகளில் வாடகைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், இதர ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டறிந்து, அச்சொத்துகளை அறநிலையத்துறை விதிகளின்படி ஏலம் விட்டு திருக்கோயில்களுக்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

2. நான் முதல்வராக இருந்தபோது, தற்காலிகமாகப் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்கள் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றக் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 24.3.2020 அன்று 110 விதியின் கீழ் 31.7.2019 வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்துவரும் சுமார் 2000 தினக் கூலிகள் மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களின் பணியைத் தகுதியின் அடிப்படையிலும், காலிப் பணியிடங்களைக் கணக்கில் கொண்டும் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அறிவித்தேன்.

மேலும், மாநிலம் முழுவதும் தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களின் பட்டியலைத் தயாரித்து அரசுக்கு அனுப்புமாறு அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள் அதாவது, திருக்கோயில்களில் பணிபுரியும் தற்காலிக அர்ச்சகர்கள், பணியாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள், அன்னதானக் கூடங்களில் பணியாற்றும் சமையலர்கள், இதர தினக்கூலிப் பணியாளர்கள் என்று சுமார் 40,000 தற்காலிகப் பணியாளர்களின் விவரங்களைத் தயார் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், கரோனா நோய்த் தொற்று மற்றும் தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றின் காரணமாக இத்தகவல் தயாரிக்கும் பணி நிறைவடையவில்லை. இதனால், தற்காலிகப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முடிவெடுக்க முடியவில்லை.

அறநிலையத் துறை ஆணையாளர், தற்போது திருக்கோயில்களில் பணிபுரியும் சுமார் 40 ஆயிரம் தொகுப்பூதியப் பணியாளர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தற்காலிகப் பணியாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இந்த தேவையற்ற முடிவைக் கைவிட்டு, நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்தவாறு குறைந்த சம்பளத்தில் நீண்ட காலமாக தினக் கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE