தனியார் நிலங்களில் ஸ்டெர்லைட் கழிவுகளைக் கொட்டியது யார்? விற்கத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

தூத்துக்குடியில் தனியார் நிலங்களில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகளைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக ரசாயனக் கழிவுகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கழிவால் ஆற்றில் தண்ணீர்ப் போக்கு திருப்பப்பட்டு தூத்துக்குடி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதுதவிர தனியார் பட்டா நிலங்களிலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தாமிரக் கழிவுகளைக் கொட்டி வைத்துள்ளது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு அரசு அபராதம் விதித்தது. இந்நிலையில் தற்போது இந்தக் கழிவுகள் தனியார் சிமென்ட் நிறுவனத்துக்கு விற்கப்படுகின்றன.

உப்பாற்று ஓடையில் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றவில்லை. தற்போது தனியார் பட்டா நிலங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிரக் கழிவுகளை விற்க முயல்வது சட்டவிரோதம். எனவே, ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகளை விற்பனை செய்யத் தடை விதிக்க வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள் கூறும்போது, ’’உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியவையா? ஓடையில் தாமிரக் கழிவுகளைக் கொட்டியவர்கள் யார்?, உயர் நீதிமன்றம் 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவைத் தற்போது வரை ஏன் செயல்படுத்தவில்லை? என்பது குறித்துத் தமிழகப் பொதுப் பணித்துறைச் செயலர் 12 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்.

அதுவரை தனியார் பட்டா நிலங்களில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை வணிக நோக்கத்தில் விற்பனை செய்யத் தடை விதிக்கிறோம்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE