ஊரக வேலைத் திட்டம் நிதியைக் குறைப்பது நியாயமல்ல; ஏழைகளுக்கு 150 நாட்கள் பணி வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஏற்கெனவே கிராமங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி, கரோனா பாதிப்பால் வேலையிழந்து வெளியூர்களில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கும் ஊரக வேலைத் திட்டம்தான் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது. அதற்கான நிதியைக் குறைப்பது நியாயமல்ல என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா வைரஸ் பரவலால் கிராமப்புற பொருளாதாரம் நிலைகுலைந்துள்ள சூழலில், மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தால் நிறைவேற்ற முடியவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊரக மக்களை ஓரளவாவது பசியில்லாமல் பாதுகாக்க இத்திட்டத்தால்தான் முடியும் எனும் நிலையில், அதற்கான நிதி குறைக்கப்பட்டது நியாயமற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நடைமுறைக்கு வந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் கருவியாகவும், வாழ்வாதார சக்தியாவும் அத்திட்டம்தான் திகழ்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

நகர்ப்புறங்களில் வேலை செய்தவர்களும், பிழைப்புக்காக பிற மாநிலங்களுக்குச் சென்றவர்களும் வேலைகளை இழந்து பெருமளவில் கிராமங்களுக்குத் திரும்பிவிட்டனர். ஏற்கெனவே கிராமங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கும் இந்தத் திட்டம்தான் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது.

பல மாநிலங்களில் இத்திட்டத்தை நம்பித்தான் மக்கள் வாழ வேண்டியிருக்கிறது என்பதால், இந்தத் திட்டத்தின்படி வழங்கப்படக்கூடிய அதிகபட்ச வேலை நாட்களை நேற்று 27ஆம் தேதி வரை 2 லட்சத்து 34,071 குடும்பங்கள் பணிசெய்து முடித்துவிட்டன. நடப்பு நிதியாண்டில் இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு இனி வேலை கிடைக்க வாய்ப்பில்லை.

நடப்பு நிதியாண்டில் நேற்று வரை 88 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், சுமார் இரண்டரை லட்சம் குடும்பங்கள் 100 நாட்களுக்கு உண்டான வேலைவாய்ப்புகளை அனுபவித்துவிட்டன என்றால், அந்தக் குடும்பங்களுக்கு எந்த அளவுக்கு வாழ்வாதாரத் தேவை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கரோனா பாதிப்பு எப்போது தீரும் என்பது தெரியாத நிலையில், அடுத்து வரும் மாதங்களில் அந்தக் குடும்பங்கள் வேறு வாழ்வாதாரமும் இல்லாமல், ஊரக வேலையும் இல்லாமல் எப்படி வாழ முடியும்? என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.

அதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்காக அனைத்து மாநிலங்களுக்கும் வரும் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட மொத்த நிதியான ரூ.36,641 கோடியில் இதுவரை ரூ.29,569 கோடி செலவழிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள நிதியைக் கொண்டு 2 வாரங்களுக்குக் கூட வேலை வழங்க முடியாது. அதன்பின் அடுத்த 10 வாரங்களுக்கு நிதி இருக்காது என்பதால் இந்தத் திட்டத்தையே வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்கும் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்றாலும் கூட, அடுத்த சில வாரங்களில் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த பணம் இல்லாத நிலை ஏற்படும் என்பது உறுதி. தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முதல் 6 மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,580 கோடியில் இதுவரை 62%, அதாவது ரூ.1,601 கோடி செலவழிக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாகவும், தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில் 100 நாட்கள் வேலை நடக்காததாலும் மக்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பணிகள் வழங்கப்பட்டன. இப்போது அதிக குடும்பங்கள் வேலை கோரும் நிலையில், இருக்கும் நிதியைக் கொண்டு அவர்களுக்கு வேலை வழங்க வாய்ப்பில்லை.

தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் இத்தகைய நிலை ஏற்பட்டதற்குக் காரணம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி பெருமளவில் குறைக்கப்பட்டதுதான். கடந்த ஆண்டு கரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஒரு லட்சத்து 11,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் அது 35% குறைக்கப்பட்டு, ரூ.73,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இது கரோனா பாதிப்புக்கு முந்தைய 2019-20ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.71,686 கோடியை விட சற்றுதான் அதிகமாகும். அந்த ஆண்டில் தமிழ்நாட்டில் 24.85 கோடி மனித நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. 2020-21ஆம் ஆண்டில் இது 33.40 கோடி மனித நாட்களாக, அதாவது மூன்றில் ஒரு பங்கு அதிகரித்தது.

நடப்பாண்டில் சுமார் 40 கோடி மனித நாட்கள் வேலை தேவைப்படும் நிலையில், அதற்கு குறைந்தபட்சம் ரூ.11,437 கோடியாவது தேவை. ஆனால், நடப்பாண்டில் தமிழகத்திற்கு அதிகபட்சமாக அதில் பாதியளவுக்குக் கூட கிடைக்காது. இது போதுமானது அல்ல.

இந்திய அளவில் எடுத்துக் கொண்டாலும் கூட இதே நிலைதான். கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட 389 கோடி மனித நாட்களை விட சற்று கூடுதலாக 400 கோடி மனித வேலை நாட்களை உருவாக்க வேண்டுமானால் கூட, மத்திய அரசு மட்டும் ரூ.1,13,500 கோடி ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கினால் மிக மோசமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு 150 நாட்கள் வேலை வழங்கலாம்.

எனவே, 2021-22ஆம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படியான வேலை நாட்களை 150 ஆக உயர்த்துவதுடன், வேளாண் பணிகளுக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் 50% உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்