பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து, இடதுசாரி கட்சிகள், விசிக ஆகியன, நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.
இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஆகியோர் இன்று (ஜூன் 27) கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
"பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் தினந்தோறும் உயர்த்தப்படுகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் சுயேட்சையாக விலைகளை நிர்ணயம் செய்கிறது என, பாஜக அரசு பாசாங்கு காட்டி வருகிறது.
கரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கிய ஆரம்பகாலத்தில், அதனை தடுக்கும் நடவடிக்கையை தொடங்காமல், அரசியல் ஆதாயம் தேடிய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசு, அந்த கொடிய நோய்த்தொற்று பரவலைக் காரணமாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப சுயநல வெறிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
» கரோனா பரவலை பூஜ்ஜியமாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்: அமைச்சர் செந்தில்பாலாஜி
இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டியிருக்கிறது. இது மேலும் ரூ.125 வரை அதிகரிக்கும் என, வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். மக்கள் நலன் சார்ந்த கொள்கை அணுகுமுறையால் பெட்ரோல், டீசல் லிட்டர் முறையே ரூ.50 மற்றும் ரூ.40-க்கு விற்க முடியும் என, பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவல் தீவிரமாகி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் அலை உருவாகி மேலும் படுமோசமான சேதாரங்களை ஏற்படுத்தும் எனவும், குறிப்பாக, குழந்தைகளை குறிவைத்து தாக்கும் எனவும், மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கிடையில், கரும்பூஞ்சை, டெல்டா பிளஸ் என, உருமாறிய கரோனா நோய்த்தொற்று அபாயம் அச்சுறுத்தி வருகிறது.
இந்த புதிய வகை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டும்தான் ஒரே வழி என கூறப்படுகின்றது. ஆனால், நோய்த் தொற்று தாக்குதல் தொடங்கி 18 மாதங்கள் ஆகியும், பாஜக அரசு குடிமக்களுக்கு தடுப்பூசி மருத்து கொடுக்கவில்லை. கிடைக்கும் மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் விருப்பு, வெறுப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
முன் யோசனையும், போதிய முன்னேற்பாடுகளும் இல்லாமல் திடீரென நாடு முடக்கம் செய்யப்பட்டதில், நாட்டின் உற்பத்தி தடைபட்டது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கொன்றழிக்கப்பட்டன. கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும்பாடு எழுத்தில் வடிக்க இயலாத அவலமாகும்.
இந்த நெருக்கடியான காலத்தில், மக்கள் துயரம் போக்கும் கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் ஜூன் 16 முதல் இருவார கால நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து நாளை 28.06.2021 தொடங்கி 29, 30 தேதிகளில் மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
கோரிக்கைகள்:
* கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி, 2014 முதல் உயர்த்தப்பட்ட கலால் வரிகளை பெருமளவு குறைத்து, விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
* கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு மருத்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தை தடுத்து, நியாய விலையில் மக்களுக்கு மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
* செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழக அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும்.
* தமிழகத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப, போதுமான தடுப்பூசி மருந்துகளும், பேரிடர் கால நிவாரண நிதியும் வழங்க வேண்டும்.
* அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
* தொழில் முடக்கம், வேலையிழப்பு, வேலையின்மை மற்றும் வருமானத்திற்கு வழியில்லாத காரணங்களால் வாழ்வாதரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7,500 வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும்.
* மத்திய உணவுத் தொகுப்பில் இருந்து நபருக்கு தலா 10 கிலோ வீதம் உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து, மக்கள் உணர்வை பிரதிபலித்து நடத்தும் ஆர்பாட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று, ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago