அதிமுக ஆட்சியில் மின் துறையில் ஊழல் இல்லை, இழப்புதான்: முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கம்

By செய்திப்பிரிவு

அதிமுவின் ஆட்சிக் காலத்தில் தமிழக மின்துறையில் முறைகேடுகள் நடந்ததாகவோ, மக்கள் மின்வசதி இன்றி தவிப்பதாகவோ எந்தக் குறையும் கூறப்படவில்லை என்று மின்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். எனினும், 13 ஆயிரத்து 176 கோடியே 20 லட்சம் ரூபாய் நஷ்டம் என்று தணிக்கைத் துறை கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து மின்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

''அதிமுக ஆட்சியிலான தமிழக மின்வாரியத்தின் செயல்பாடுகள் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு விளக்கம் அளிக்க ஆசைப்படுகிறேன். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து, 2019-ஆம் ஆண்டுக்கான மத்திய தணிக்கைக் குழுவில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை மிகைப்படுத்தி, ஊடகங்கள் மூலமாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

மத்திய தணிக்கைத் துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள சட்டமுறைக் கழகம் உட்பட 75 பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியத்திற்கு 13 ஆயிரத்து 176 கோடியே 20 லட்சம் ரூபாய் இழப்பீடு என்று சொல்வது, தணிக்கைத் துறையே மின்சார இழப்புக்கு, மின்சாரக் கொள்முதல் உற்பத்தி செலவு, பணியாளர் மற்றும் நிதிச் செலவினங்களே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கேயும் தவறு நடைபெற்றதாகச் சொல்லவில்லை.

பொதுத் துறை நிறுவனங்களில் மின்சார வாரியமும், போக்குவரத்துத் துறையும் சேவைத் துறைகளாகும். பொதுமக்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் எவ்வளவு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்பதுதான் முக்கியமே தவிர, மின்சார வாரியத்திற்கு வருமானத்தைக் கூட்டுவது என்பது நோக்கமல்ல. தமிழகத்தில் மட்டும் தான் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரமும்; அதே போல், அனைத்து விவசாயிகளுக்கும் 24 நேரம் மும்முனை மின்சாரமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மின்சார வாரியத்தின் பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்காமலோ, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்யாமலோ, தமிழகத்தின் மொத்த மின் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான அளவு மின்சாரத்தைத் தனியாரிடமிருந்து வாங்காமலோ, மக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியாது.

2006-2011 காலகட்டத்தில் இருந்த திமுக ஆட்சியில், தமிழ்நாடு இருளில் மூழ்கிக் கிடந்தது. தேர்தலில் நாங்கள் தோற்றால் மின்தடையே காரணம் என்று அன்றைய திமுக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியே தெரிவித்திருந்தார். திமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின்சாரம், நிலக்கரி போன்றவற்றை வாங்கியதில் பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று 2010-ஆம் ஆண்டு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

தரம் குறைந்த நிலக்கரியை அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தியதால்தான் 2014, 2019 காலக்கட்டத்தில் 171.57 கோடி ரூபாய் அளவிற்கான மின்உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த கால திமுக ஆட்சியிலும் அதிக விலை கொடுத்து வாங்கியதாகத் தணிக்கைத் துறை தெரிவிக்கின்றது.

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு, தரம் குறைந்த நிலக்கரியை எங்கிருந்தும் வாங்கியதில்லை. நிலக்கரி எங்கிருந்து வருகிறதோ, அது ஏற்றப்படும் இடத்திலும் தரம் பரிசோதிக்கப்படுகிறது; தமிழகத்தில் இறக்கப்படும் துறைமுகங்களிலும் தரம் பரிசோதிக்கப்படுகிறது. ஆகையால், தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

வட சென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து மேட்டூர் வரை ரயில்கள் மூலம் நிலக்கரியை அனுப்பியதில், 55.37 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்றும், ரயில் சரக்குப் பெட்டிகளின் கொள்ளளவை விடக் குறைத்து நிலக்கரியை ஏற்றியதால் பயனற்ற சரக்குக் கட்டணமாக 101.35 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனல்மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரி உடனுக்குடன் அனுப்பப்பட வேண்டும். நிலக்கரி கையிருப்பிற்கு ஏற்ப சென்னையில் இருந்து நிலக்கரி அனுப்பப்படுகிறது. மத்திய ரயில்வே துறை சரக்கு வேகன்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தினால்தான் நிலக்கரியை கொண்டுசெல்ல முடியும். வேகனின் கொள்ளளவுக்கு ஏற்ப நிலக்கரி சேர்ந்த பிறகு அனுப்பலாம் என்று இருந்தால், அனல்மின் நிலைய மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் பற்றாக்குறை ஏற்படும்.

மேலும், நிலக்கரியை அனுப்புவதற்கு உண்டான தொகையைத் தனியாருக்கு மின்சார வாரியம் செலுத்தவில்லை. மத்திய ரயில்வே துறைக்குத்தான் செலுத்தியுள்ளது. இதை பயனற்ற சரக்குக் கட்டணமாக ஏற்க இயலாது.

மின்சாரம் கொள்முதல் செய்ய 8 தனியார் நிறுவனங்களிடம் நீண்ட காலம் ஒப்பந்தம் போட்டதில் 712 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில், மற்ற மாநிலங்களில் 5.50 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டது. தமிழகத்தில் அதைவிடக் குறைவாக 4.91 ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமான GMR Power Corporation என்ற நிறுவனத்திடம் மின்சாரம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் 1999-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையாகும். ஓராண்டு நீட்டித்ததற்குக் காரணம் மின்தேவை அதிகமாக தேவைப்படுகின்றபோது (peak hours)
மட்டும் (டீசல் மூலமாக) உற்பத்தி செய்யப்பட்டது. GMR தனியார் நிறுவனத்திற்குக் கொடுப்பது நிலையான செலவு மட்டும் 56 பைசா மட்டும்தான் அவர்களுக்குக் கொடுக்கப்படும். மத்திய அரசின் ஆயில் நிறுவனங்களுக்கு 11.44 பைசா அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இதில் என்ன முறைகேடு நடந்துள்ளது?

நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கியதில் வாரியத்திற்கு 424.43 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கும், அதிமுக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

2006-2011 காலகட்டத்திலான திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு மத்திய தணிக்கைக் குழு அறிக்கைகள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அந்த காலக்கட்டத்தில் மின்சாரத் துறை திமுக ஆட்சியாளர்களின் தவறான மற்றும் முறைகேடான செயல்பாடுகளால் நேரடியாக மின்சார வாரியத்திற்குப் பல்லாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியதிலும், நிலக்கரி வாங்கியதிலும் 10 ஆயிரத்து 294 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001-2006 காலகட்டத்திலான அதிமுவின் ஆட்சியில், தமிழக மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கியது மட்டுமல்ல, தமிழகத்தின் தேவை போக, உபரியாக இருந்த மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கும் வழங்கினோம்.

2006-ல் அதிமுக ஆட்சியைவிட்டுச் செல்லும்போது, மின்வாரியத்தின் கடன் தொகை 9 ஆயிரத்து 583 கோடி ரூபாயாகத்தான் இருந்தது. அதற்குப் பின்னால், ஐந்து ஆண்டுகள் கழித்து, ஆட்சிக் கட்டிலில் ஏறுகின்றபோது, 10 முதல் 18 மணி நேரம் மின்தடை இருந்தபோது, கூடுதலாக 36 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக விட்டுச் சென்றுள்ளது. இதில் மொத்தக் கடன் 45 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இன்றைக்கு, அதிமுவின் ஆட்சிக் காலத்தில் தமிழக மின்துறையில் முறைகேடுகள் நடந்ததாகவோ, மக்கள் மின்வசதி இன்றி தவிப்பதாகவோ எந்தக் குறையும் கூறப்படவில்லை. இருந்தாலும், 13 ஆயிரத்து 176 கோடியே 20 லட்சம் ரூபாய் நஷ்டம் என்று தணிக்கைத் துறை சொல்லி இருக்கிறது.

அரசிற்கு மக்கள் சேவைதான் முக்கியமே தவிர, மின்கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் பாரத்தை சுமத்த விரும்பாத அரசுகள், ஜெயலலிதாவின் அரசும், எடப்பாடி பழனிசாமியின் அரசும். ஆகையால் தணிக்கைத் துறை அறிக்கை என்பது, எந்த ஆட்சி நடந்தாலும் ஊகத்தின் அடிப்படையில் இதுபோன்ற கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

2010-ல் வெளியிடப்பட்ட தணிக்கைத் துறை அறிக்கையில், ஒவ்வொரு யூனிட்டுக்கும் கூடுதலாக 2.17 ரூபாய் செலவு செய்ததாகத் தணிக்கைத் துறை அறிக்கை கூறுகின்றது. சூரியஒளி மின்சாரம் 7.01 ரூபாய்க்கு வாங்கியதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார்கள். சில மாநிலங்களில் 15 ரூபாய்க்குக்கூட ஒப்பந்தம் போடப்பட்டது. காரணம், சூரியஒளி மின்சாரம் நிறுவ ஒரு மெகா வாட்டிற்கு 8 முதல் 10 கோடி ரூபாய் வரை செலவானது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு மெகாவாட் நிறுவ 3 கோடி ரூபாய் செலவாகிறது.

அதனால், இன்றைய தினம் சூரிய ஒளி மின்சாரம் குறைவாகக் கிடைக்கின்றது. அதுமட்டுமல்லாமல், சூரியஒளி மின்சாரம் நிறுவ தமிழகத்தில் நிலமும் கொடுப்பதில்லை; நிலையான விலையும் கொடுப்பதில்லை. மற்ற மாநிலங்களில் இடமும் நிலையான விலையும் கொடுக்கின்றார்கள். பொதுவாக, மத்திய அரசு, மாநில அரசு எதுவாக இருந்தாலும் தணிக்கைத் துறை இதுபோன்ற கருத்துகளைத்தான் தெரிவிக்கும். ஆக, இது முறைகேடு கிடையாது என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்''.

இவ்வாறு மின்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்