தமிழக அரசால் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 25 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும், அதைத் தமிழக அரசு பயன்படுத்தி ஏழை மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கை:
“உணவுப் பஞ்சமும், தொற்றுநோய்களும், அந்நியர்கள் படையெடுப்பும் வராதபடி நடத்தப்படுகிற நாடு நல்ல நாடு என்கிற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க அவற்றைச் செயல்படுத்தும் கடமையும் மத்திய-மாநில அரசுகளுக்கு உண்டு என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.
இதனடிப்படையில் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா பெருந்தொற்று நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருவருக்கு இரண்டு முறை தடுப்பூசி என்பதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 16 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்றன.
ஜூன் 26 அன்று காலை நிலவரப்படி மொத்தம் 1 கோடியே 44 லட்சத்து 83 ஆயிரத்து 705 தடுப்பூசிகள் தமிழ்நாட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு இருக்கின்றன. அதாவது 10 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் விநியோகிக்கப்பட்ட 13.9 லட்சம் மருந்துகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றும், ஜூலை மாதத்திற்கு 71.50 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளைத் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது என்றும், அதில் 17.75 லட்சம் மருந்துகள் தனியார் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.
ஏற்கெனவே 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சூழ்நிலையில் ஜூலை மாதத்திற்கு என்று மேலும் 17.75 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன. பொதுவாக மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடிச் செல்வதற்குக் காரணம் அங்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்படுவது இணையதளத்திற்குச் சென்று எவ்விதமான பதிவு முன்னேற்பாடும் இல்லாமல் நேரடியாகத் தடுப்பூசி செலுத்துகின்ற வசதி உள்ளதுதான்.
இது மட்டுமல்லாமல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமுதாய நலக்கூடங்கள் போன்றவற்றில் இலவசத் தடுப்பூசி முகாம்கள் முகாம்களை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தி இருப்பதும் இதற்கு முக்கியக் காரணம். அதே சமயத்தில் தனியார் மருத்துவமனைகளில் ஒரு தடுப்பூசிக்கு 850 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை பணம் செலுத்தக் கூடிய நிலை இருக்கின்றது. இது தவிர முன்பதிவு அவசியம் என்கிற நிலைமையும் உள்ளது. பெரும்பாலான இடங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.
இந்தக் காரணங்களால் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படாத தடுப்பூசி மருந்துகள் லட்சக்கணக்கில் தேங்கி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள பயன்படுத்தப்படாத மருந்துகளைப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்.
எனவே தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளைத் தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் தமிழ்நாட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago