தவறான தடுப்பூசிக் கொள்கை காரணமாக கரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய பாஜக அரசு முற்றிலும் தவறிவிட்டது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 26) வெளியிட்ட அறிக்கை:
"கடந்த ஆண்டு கரோனாவின் முதல் தொற்று கண்டறியப்பட்டது முதற்கொண்டு, முதல் அலையின்போது அதை எதிர்கொள்வதற்குத் தேவையான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டது.
அதனால், ஆக்சிஜன், மருத்துவப் படுக்கைகள், உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் தங்கள் உயிரைப் பறிகொடுத்துள்ளனர். உற்றார் உறவினர், நண்பர்கள் நாள்தோறும் பலியாகிக் கொண்டிருக்கும் செய்தி கேட்டு ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது பிரதமர் மோடியின் காதுகளில் விழாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.
» கிங் இன்ஸ்டிட்யூட்டில் கரோனாவுக்குப் பிந்தைய சிறப்பு சிகிச்சை மையம்
» சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்கும் பணி தீவிரம்: மா.சுப்பிரமணியன் தகவல்
140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில், ஜனவரி 16, 2021இல் தொடங்கி இதுவரை ஒரு நாளைக்கு சராசரி 50 லட்சம் என்றளவில், ஜூன் 23ஆம் தேதி வரை 29 கோடி மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 18 சதவீதம். இதில், இரண்டு டோஸ் போட்டவர்கள் 5 கோடி பேர். இது மக்கள்தொகையில் வெறும் 3.8 சதவீதம் மட்டுமே.
பிரிட்டனில் மொத்த மக்கள்தொகையில் 2 டோஸ் போட்டவர்கள் 45.8 சதவீதம். அமெரிக்காவில் 44.6 சதவீதம். ஜெர்மனியில் 30.2 சதவீதம். நம்மைப் போல மக்கள்தொகை கொண்ட சீனாவில் இதுவரை 100 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கு ஒரு நாளைக்கு 1 கோடியே 83 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. சீனாவில் சாத்தியமாகிறபோது, இதை இந்தியாவில் ஏன் சாதிக்க முடியவில்லை? மேலும், 111 உலக நாடுகளில் தடுப்பூசி போடுகிற எண்ணிக்கையில் இந்தியா 63-வது இடத்தில்தான் இருக்கிறது. அதே நேரத்தில், உலக நாடுகளில் 275 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட 94 கோடி இந்திய மக்களுக்கு 188 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடுவதன் மூலமே கரோனாவின் பிடியிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும். ஆனால், இரண்டு தனியார் நிறுவனங்களின் மொத்த தடுப்பூசி உற்பத்தி மாதத்திற்கு 8.5 கோடிதான்.
இந்நிலையில், ஒரு நாளைக்கு 80 லட்சம் முதல் 1 கோடி தடுப்பூசிகள் போட்டால்தான் வருகிற டிசம்பர் 2021-க்குள் அனைத்து மக்களுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட முடியும். இதை எதிர்கொள்கிற வகையில் மத்திய பாஜக அரசு தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போதைய தடுப்பூசி போடுகிற எண்ணிக்கையைப் பார்க்கிறபோது, மத்திய அரசின் இலக்கின்படி,100 சதவீத மக்களுக்கு டிசம்பர் 2021-க்குள் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பே இல்லை. இதே போக்கு நீடித்தால், தடுப்பூசி இலக்கை 2024இல்தான் எட்ட முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதனால், இந்திய மக்கள் அச்சம், பீதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தவறான தடுப்பூசிக் கொள்கை காரணமாக கரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய பாஜக அரசு முற்றிலும் தவறிவிட்டது.
அதே நேரத்தில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. 2021ஆம் ஆண்டில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். 7 கோடியே 50 லட்சம் பேர் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
இந்தியாவின் வலுவான 10 கோடி நடுத்தர வர்க்கத்தினர் தாங்கள் முந்தைய 5 ஆண்டுகளில் அடைந்த பலனை இழந்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, வேலைவாய்ப்பைப் பெருக்கவோ, பொருளாதாரப் பேரழிவைத் தடுக்கவோ முற்றிலும் தவறிவிட்டார்.
கரோனாவின் கோரப் பிடியிலும், பொருளாதாரப் பேரழிவினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடுமையான தாக்குதலை பாஜக அரசு நிகழ்த்தியுள்ளது. தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டிவிட்டது. கடந்த ஏழாண்டு கால பாஜக ஆட்சி, பெட்ரோல், டீசல் மீது கலால் வரியாக ரூபாய் 25 லட்சம் கோடி வசூலித்து, கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.
கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் மீது இத்தகைய தாக்குதலை மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்த அரசும் தொடுக்காது. இதனால், மக்கள் வாங்குகிற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணவீக்கமும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதன்மூலம், ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, அனைத்து வகையிலும் மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படுகிற மத்திய பாஜக அரசுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago