எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த திமுக: ஆட்சி மாறியும் கோவை குளங்களில் தொடரும் கான்க்ரீட் கரை அமைக்கும் பணி

By க.சக்திவேல்

நொய்யல் ஆற்றை ரூ.230 கோடி மதிப்பில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், கோவையில் 18 அணைக்கட்டுகள், 22 குளங்களைத் தூர்வாரல், சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆச்சான்குளம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், வெள்ளலூர் ஆகிய இடங்களில் உள்ள குளங்களின் கரைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளின்போது கரையோரம் உள்ள நாணல் புற்கள், புதர்களை முற்றிலுமாக அகற்றுவதால் குளங்களின் உயிர்ச் சூழல் பாதிக்கப்படும் என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாது, தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி திமுக எம்.பி. கு.சண்முகசுந்தரம் நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 19-ம் தேதி பேசும்போது, “கோவையில் அவசர கதியில் குளங்கள் சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. கான்க்ரீட் கற்கள், கான்க்ரீட் கரைசல்களைக் கொண்டு நீர்நிலைகளைப் பாழாக்கும் செயலில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்திருந்தார்.

பின்னர், அக்டோபர் 27-ம் தேதி கோவை வந்த திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், பேரூர் பெரியகுளத்துக்குள் நடைபெற்று வரும் கான்க்ரீட் கலவை தயாரிக்கும் பணியால் ஏற்படும் சூழல் பாதிப்பு குறித்து நேரில் பார்வையிட்டுக் கேட்டறிந்தார்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் நொய்யலின் பிறப்பிடம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் இருக்கிறது. எனவே, அந்தத் தொகுதியில் திமுக சார்பில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட, அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தனது தேர்தல் அறிக்கையில், “நொய்யல் நதி, அதன் சூழலியல், பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்படாத வகையில் அறிவியல் பூர்வமாகச் சீரமைக்கப்படும். குளக்கரை ஓரங்களில் கான்க்ரீட் அமைப்பது தவிர்க்கப்படும்" என வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், தற்போது புதுக்குளம், கோளராம்பதி, பேரூர் அருகே உள்ள சொட்டையாண்டி குட்டை, கங்காநாராயண சமுத்திரம், செங்குளம், சூலூர் குளங்களில் கான்க்ரீட் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குளங்களைப் பாழாக்கும் செயல்

இதுகுறித்து சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறும்போது, "கோவை குளங்களுக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன. குளக்கரையில் இயற்கையான பல்லுயிர்ப் பெருக்கம் இருந்தால்தான் குளங்கள் உயிர்ப்போடு இருக்கும். இல்லையெனில் அதன் தன்மையே போய்விடும். கோவையில் உள்ள குளங்கள் ஏற்கெனவே நல்ல நிலையில்தான் உள்ளன. அதில், கை வைக்க வேண்டிய அவசியமே இல்லை. குளங்களில் கான்க்ரீட் அமைப்பது அவற்றைப் பாழாக்கும் செயல். நீர்நிலைகள் சார்ந்து கோவையில் இயங்கும் அமைப்புகள் அனைத்தும் இணைந்து, அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்ல உள்ளோம்" என்று தெரிவித்தார்.

கருங்கற்களைப் பதிக்க வேண்டும்

ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திருநாவுக்கரசு கூறும்போது, "குளங்களைச் சீரமைக்கப் போடப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், அரசு தலையிட்டு அதில் மாற்றம் செய்ய வழிவகை உள்ளது. அந்த மாற்றத்தில், கரையில் கான்க்ரீட் அமைப்பதற்கு பதில், கருங்கற்களைப் பதிக்க வேண்டும் எனத் தெரிவித்தால் போதும். கருங்கற்கள் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்" என்று தெரிவித்தார்.

அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்

ஏற்கெனவே உள்ள திட்டத்தின்படியே கோவை குளங்களின் கரையில் கான்கிரீட் சிலாப் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகப் பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாகத் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கூறும்போது, “குளக்கரையில் கான்க்ரீட் அமைப்பது சரியான வழிமுறை அல்ல. தேர்தல் நேரத்திலும் இதுதொடர்பாகப் பலமுறை பேசியுள்ளேன். ஆனால், எதிர்பாராதவிதமாகக் கோவைக்கும் அரசுக்கும், அரசியல் ரீதியாக இணைப்புப் பாலம் இல்லாமல் போனது. இருப்பினும், குளங்களில் கான்க்ரீட் கரை அமைப்பது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்