தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு குறிப்பிட்ட அளவு இடங்களைச் சிறப்பு ஒதுக்கீடாக ஒதுக்க வேண்டும், இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளின் மருத்துவக் கல்விக் கனவை தமிழக அரசு உடனடியாக நனவாக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமை கூட கடந்த 20 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர்களின் தந்தை நாடு என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாடு இந்த வாய்ப்பைக் கூட வழங்க மறுப்பது அநீதியாகும்.
இலங்கையில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டும், உயிருக்கு அஞ்சியும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளனர். 1980ஆம் ஆண்டுகளில் தொடங்கிய அகதிகளின் வருகை 2009ஆம் ஆண்டில் போர் முடிவடைந்த பிறகும் கூட நீடித்தது. இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள 108 அகதிகள் முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் 18,944 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் தவிர முகாம்களுக்கு வெளியில் 13,533 குடும்பங்கள் சொந்த ஏற்பாட்டில் வாழ்ந்து வருகின்றன.
» தடுப்பூசியா அல்லது சிறையா?- பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை
» தமிழக கோயில் சொத்து விவரங்கள் 70 சதவீதம் இணையத்தில் பதிவேற்றம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
ஈழப்போரில் அனைத்தையும் இழந்து, தாயகத்திற்கு மீண்டும் செல்ல முடியாமலும், சென்றாலும் நிம்மதியாக வாழமுடியாத நிலையிலும் உள்ளவர்கள்தான் இன்னும் அகதிகளாகத் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்களின் ஒற்றைக் கனவு தங்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து வேலைவாய்ப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கி விடவேண்டும் என்பதுதான்.
கலை மற்றும் அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் அவர்களுக்குச் சாத்தியமாகிவிட்டாலும், மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அதற்குக் காரணம் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கப்படாததுதான். கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தகுதியான மதிப்பெண்களைப் பெற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் ஏமாற்றமடைந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஏராளம்.
அவர்கள் செய்த ஒரே பாவம் ஈழத்தமிழ் அகதிகளுக்கு வாரிசுகளாகப் பிறந்ததுதான். ஈழத்தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தாராளமாக வழங்கப்படுகின்றன. ஆனால், ஈழத் தமிழர்களின் தந்தை நாடான தமிழ்நாட்டில் அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது அநியாயமாகும்.
ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 20 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. பிற அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தாலும் கூட இதுவரை அக்கோரிக்கை நிறைவேறவில்லை. மருத்துவப் படிப்பில் ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நிறைவேற்ற முடியாத கோரிக்கை அல்ல.
அது நிறைவேற்றப்படக்கூடாத ஒன்று அல்ல. ஆனால், அந்தக் கோரிக்கையைச் செயல்படுத்தும் அரசியல் துணிச்சல்தான் தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. 1980களின் தொடக்கத்தில்தான் ஈழத்தமிழ் அகதிகள் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கினார்கள். 1984ஆம் ஆண்டில் ஈழத்தமிழ் அகதி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தலா 10 இடங்கள், சட்டம் மற்றும் வேளாண் படிப்புகளில் தலா 5 இடங்கள், பாலிடெக்னிக்குகளில் 20 இடங்களைச் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஆணையிட்டார்.
அதன்பின் 1989ஆம் ஆண்டில் அகதி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து அப்போதைய முதல்வர் கலைஞர் விலக்கு அளித்தார். ஆனால், 1990களின் தொடக்கத்தில் அகதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஒதுக்கீடுகளை நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பின் பொறியியல் படிப்புக்கு மீண்டும் சிறப்பு ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டாலும் கூட மருத்துவக் கல்விக்கு மட்டும் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் அகதி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வழங்கப்படுவதில் பெரும்பான்மையான உதவிகள் ஈழத்தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது மருத்துவக் கல்வி வாய்ப்பு மட்டும் மறுக்கப்படுவது எந்த வகையிலும் அறமல்ல. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளில் பெரும்பான்மையானோர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் ஆவர்.
இந்தியாவில் வசிக்க விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும் என்று 2021 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது. அதைச் சாத்தியமாக்க நீண்டகாலம் ஆகலாம். ஆனால், ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வி பயில சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது சாத்தியமானதுதான். தமிழ்நாட்டில் இதை எவரும் எதிர்க்கவும் மாட்டார்கள்.
எனவே, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்குக் குறிப்பிட்ட அளவு இடங்களைச் சிறப்பு ஒதுக்கீடாக ஒதுக்க வேண்டும். எத்தனை இடங்கள் என்பதை தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.
இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளின் மருத்துவக் கல்விக் கனவைத் தமிழக அரசு உடனடியாக நனவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago