பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்கள், சிஏஏவை எதிர்த்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜூன் 21) தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 22) அவை தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார். நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் கவுண்டர் ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது, மானாமதுரை திமுக எம்எல்ஏ தமிழரசி, மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பான பல்வேறு விஷயங்களை எடுத்துவைத்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எம்எல்ஏ தமிழரசி மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை இங்கே வைத்திருக்கிறார்.

இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, திமுக பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள்.

அந்த வகையில், தமிழகம் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் உணர்வுகளையும், விருப்பத்தையும் இந்த அவை முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, இந்த அவையிலே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

ஆனால், இந்த அவையினுடைய முதல் கூட்டத் தொடர் என்ற முறையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, இத்தகைய தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது என்று கருதுகிற காரணத்தினால்தான், வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, அந்த உரிய தீர்மானத்தைக் கொண்டுவந்து, நிச்சயமாக மத்திய அரசினுடைய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழக அரசினுடைய எதிர்ப்பை முழு மூச்சோடு பதிவு செய்து, அவற்றைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதைப் போலவே, இன்னொன்று, மத்திய அரசு கொண்டுவந்திருக்கக்கூடிய குடியுரிமைத் திருத்தச் சட்டமும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்திலே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அதனையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதையும் தெரிவிக்கின்றேன்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்