ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் பூத்துக் குலுங்கும் பிரம்மக் கமலம் மலர்கள்: மக்கள் பூஜை செய்து வழிபாடு

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் வட்டத்தில் மூவேந்தர் நகர், பத்தலப்பள்ளி, மத்திகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை மலரும் “இரவு ராணி” என்றழைக்கப்படும் தெய்வீக மலரான பிரம்மக் கமலம் பூத்து வருகிறது. இந்த மலரைப் பார்ப்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் நிகழும் என்று நம்பப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், மத்திகிரி உள்ளிட்ட பகுதியில் வசிப்போர், தங்கள் வீடுகளில் பிரம்மக் கமலம் செடிகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் தென்மேற்குப் பருவமழை காலகட்டமான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையில் “இரவு ராணி” என்றழைக்கப்படும் தெய்வீக மலரான பிரம்மக் கமலம் மலர்கள் மலர்கின்றன.

இந்த மலர்கள் நன்கு வளர்ந்த செடியில் இலையின் ஓரத்தில் மொட்டுவிட்டு இரவில் பூக்கும் அதிசய மலராக உள்ளன. இரவு 8 மணிக்கு மேல் மலர ஆரம்பித்து இரவு 10 மணியளவில் நன்கு மலர்கின்றன. பின்பு இரவு 12 மணிக்கு மேல் வாடத் தொடங்கி அடுத்த நாளில் முற்றிலுமாக வாடிவிடுகின்றன. இரவில் பூத்துக் காலையில் வாடிவிடும் ஒரே மலராக பிரம்மக் கமலம் உள்ளது. இதன் வாசம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் மிகவும் ரம்மியமானதாக இருக்கும்.

பிரம்மக் கமலம் மலரும் அதன் மகரந்தத் துகள்களும் ஆயுர்வேதத்தில் மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவில் பிராண வாயுவை வெளியிடும் மலராக பிரம்மக் கமலம் உள்ளதால் இதைப் பெரும்பாலும் வீடுகளின் வாசல் பகுதியை ஒட்டியே வளர்க்கின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஓசூர் பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் செடிகளில் பிரம்மக் கமலம் இரவில் மலரத் தொடங்கியுள்ளது. தெய்வீக மலரான இந்த மலரை ஆர்வத்துடன் பார்த்துச்செல்லும் பொதுமக்கள், பூஜை செய்து வழிபட்டும் வருகின்றனர்.

இதுகுறித்து ஓசூர் பாகலூர் சாலை, மூவேந்தர் நகரில் தனது வீட்டு முன்பு பிரம்மக் கமலம் செடியை வளர்த்துவரும் சுப்பாராவ் கூறும்போது, ''கடந்த 13 ஆண்டுகளாக பிரம்மக் கமலம் செடியை வளர்த்து வருகிறேன். தற்போது 25 அடி உயரத்தில் இந்தச் செடி வளர்ந்துள்ளது. பிரம்மக் கமலம் செடியை வளர்க்க அதன் இலையைக் காம்புடன் பறித்து மண்ணில் நடவு செய்தாலே போதும், செடி வளரத்தொடங்கி விடும். செடி வளர்ந்த ஒன்றரை ஆண்டுகளில் பிரம்மக் கமலம் மலரத் தொடங்கும். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு மலர்களுடனும், பின்பு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மலர்களின் எண்ணிக்கை 30,40 என அதிகரிக்கத் தொடங்கும்.

எனது இல்லத்தில் உள்ள செடியில் 2019-ம் ஆண்டு அதிகபட்சமாக 108 மலர்கள் மலர்ந்தன. நடப்பாண்டில் 42 மலர்கள் உள்ளன. பிரம்மக் கமலம் செடிகளுக்கு காய்கறிக் கழிவுகளையே உரமாகப் பயன்படுத்துகிறோம். பிரம்மக் கமலம் மலரும்போது, வானில் சந்திரன் எந்தப் பக்கம் உள்ளதோ அந்தப் பக்கமாக பார்த்தபடியே மலரும். இந்த மலரைப் பறித்தபிறகு 3 மணி நேரத்துக்குள் வாடிவிடும். ஆகவே, இரவில் பறித்த மலரைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பின்பு காலை சுவாமி பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். இந்த மலரில் உள்ள மகரந்தம் பத்து தலையுடைய நாகம் போல ஆதிசேஷன் வடிவில் அமைந்துள்ளதால் இது பிரம்மக் கமலம் என்று அழைக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்