கரூர் மாவட்டத்தில் காணொலி குறைதீர் கூட்டம்: பிரத்யேக செயலி மூலம் பொதுமக்கள் பங்கேற்பு

By க.ராதாகிருஷ்ணன்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி மூலம் குறைதீர்ப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (ஜூன் 21-ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்காகப் பிரத்யேக செயலி கொடுக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளைத் தெரிவித்தனர். பொதுமக்களின் பெயர், அவர்களது செல்போன் எண் ஆகியவற்றைக் குறித்துக் கொண்ட ஆட்சியர் அவர்களை பிரச்சனையைக் கேட்டுக்கொண்டு அதுதொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்தும், அதிகாரிகளுக்கு அதுகுறித்துத் தெரிவித்தும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து பதிலளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

திருநங்கைகளுக்கு கரோனா தடுப்பூசி

கரூர் கருப்பகவுண்டன்புதூரில் உள்ள ’கிராமியம்’ தொண்டு நிறுவனத்தில் திருநங்கைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (ஜூன் 21-ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்று திருநங்கைகளுக்குத் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைத்தார். இவற்றில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

முன்னதாக, கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர், சார்பு நீதிபதி மோகன்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE