16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. முதல் நாள் ஆளுநர் உரை நிகழ்த்தினார். தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், தடுப்பூசி போதுமான எண்ணிக்கையில் வழங்கப்பட வில்லை என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில் திமுக ஆட்சியைப் பிடித்தது. 16-வது சட்டப்பேரவையின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். சபாநாயகராக அப்பாவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டனர்.
சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் ஆளுநர் உரை நிகழ்த்தினார். முன்னதாக, சபைக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து புத்தகம் ஒன்றைப் பரிசளித்து வரவேற்றார். பின்னர் சபாநாயகருடன் ஆளுநர் சட்டப்பேரவைக்கு வந்தார். அனைவரும் அவருக்கு வணக்கம் செலுத்தினர்.
பின்னர் சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் அமர்ந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபை தொடங்கியது. காலை வணக்கம், எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும், இது எனது செய்தி. தமிழ் ஒரு இனிமையான மொழி. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் பேசி ஆளுநர், உரையைத் தொடங்கினார்.
பின்னர் தமிழக அரசின் கொள்கை அறிக்கையை ஆளுநர் வாசித்தார்.
இன்றைய ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் சில:
*சமூக நீதி, சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாக இந்த அரசு அமையும்.
*மாநில அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
* தமிழை இந்திய அலுவல் மொழியாக்க அரசு பாடுபடும்.
* முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும்.
* நீட் தேர்வை ரத்து செய்ய அதற்கான சட்ட முன்வடிவைக் கொண்டுவந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவோம்.
* தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை.
போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆளுநர் உரைக்குப் பின் அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார், பின்னர் இன்றைய சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும். பின்னர் அலுவல் ஆய்வுக்குழு சபாநாயகர் அறையில் கூடும். அதில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என அக்குழு முடிவு செய்யும்.