பெட்ரோல், டீசல் விலை விவகாரம்; திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது: அன்புமணி விமர்சனம்

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் தொடர்பாக, திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள்ளாகவே திமுகவின் சாயம் வெளுத்து விட்டது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தியாகராஜன், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு மிக அதிக அளவில் கலால் வரியை விதித்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மாநில அரசுக்கு குறைந்த தொகையையே வழங்குவதாகவும், இத்தகைய சூழலில் தமிழகத்தில் எரிபொருள் விலைகளை குறைத்தால் அது மத்திய அரசுக்கு சாதகமாகி விடும் என்று கூறியிருக்கிறார். இது தவறு.

மத்திய அரசின் கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் வசூலிக்கப்படுவது உண்மை. அதில், பெருந்தொகையை சிறப்புத் தீர்வைகள் என்றும், வேளாண் கட்டமைப்புத் தீர்வை என்று அறிவித்திருப்பதால், அதில் மாநில அரசுகளுக்கு பங்கு அளிக்கப்படுவதில்லை என்பதும் உண்மை.

மத்திய அரசின் கலால் வரி குறைக்கப்பட வேண்டும்; கலால் வரியில் மாநிலங்களுக்கு உரிய பங்கை அளிக்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தி வருகிறது. இன்னும் கேட்டால், தமிழகத்தில் இதை புள்ளிவிவரங்களுடன் வலியுறுத்தி வரும் ஒரே கட்சி பாமக தான்.

ஆனால், நான் கேட்க விரும்புவது மத்திய அரசு கலால் வரியை ஒரே நாளில் உயர்த்தி விடவில்லை. 2014 ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியிட்ட போதும், பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரிகள் இதே அளவில் தான் இருந்தன.

அவற்றைக் கணக்கிட்டு தான் திமுக தேர்தல் அறிக்கைக் குழுவும், அதன் தலைவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு வாக்குறுதியை அளித்திருப்பார்கள். அப்போது, சாத்தியமான விலைக்குறைப்பு இப்போது சாத்தியமாகாதது ஏன்? சாத்தியமாகாது எனத் தெரிந்தே தவறான வாக்குறுதியை திமுக வழங்கியதா?

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது மத்திய அரசுக்கு எந்த வகையில் சாதகமாகும் என்பதும் தெரியவில்லை. மத்திய அரசு கலால் வரியை உயர்த்தினாலும், குறைத்தாலும் அதன் பாதிப்பும், பயனும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தான் கிடைக்கும்.

இத்தகைய சூழலில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால், அது தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும்; அதைத் தான் மாநில அரசு பார்க்க வேண்டும். வரிகளைக் குறைக்காமல் இருக்க சாக்குகளைக் கூறக்கூடாது.

மத்திய அரசு வரிகளை உயர்த்தி விட்டது என்று கூறும் மாநில நிதியமைச்சர் பெட்ரோல், டீசல் மீது தமிழக அரசு எவ்வளவு வரி விதிக்கிறது என்பது மூடி மறைத்து விட்டார். சென்னையின் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.14. இதில், மாநில அரசின் வரி 34%, அதாவது, சுமார் ரூ.24.90. மத்திய அரசின் வரியில் கிடைக்கும் 1.40 ரூபாய் பங்கையும் சேர்த்தால், ரூ.26.30.

ஒரு லிட்டர் டீசல் விலையான 92.32 ரூபாயில் தமிழக அரசுக்கு 25%, அதாவது, சுமார் ரூ.18.46 வரி கிடைக்கிறது. மத்திய அரசின் வரிகள் உயர்த்தப்பட்டாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகள் உயர்ந்தாலும், தமிழக அரசின் வரி வருமானம் அதிகரிக்கும். இதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் கூட மறுக்க முடியாது.

உதாரணமாக, கடந்த மே 7 ஆம் தேதி திமுக அரசு பொறுபேற்ற போது, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.15. அதிலிருந்து, தமிழக அரசுக்கு கிடைத்த வரி ரூ.23.60. அதன்பின், கடந்த ஒன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.99 உயர்ந்துள்ளது. அதன்மூலம், தமிழக அரசுக்கு கிடைக்கும் மதிப்பு கூட்டு வரியின் பங்கும் லிட்டருக்கு ரூ.1.30 அதிகரித்திருக்கிறது.

அவ்வாறு இருக்கும் போது, பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.10 குறைத்தால் கூட அரசுக்கு இழப்பு ஏற்படாது. அதுவும் கரோனா பரவலால் வாழ்வாதாரங்களை இழந்து, பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் தமிழக மக்களுக்கு இந்த அளவுக்கு வரிக் குறைப்பு மிகப்பெரிய உதவியாகவும், வரமாகவும் இருக்கும்.

பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு அதிக வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது என்றால், மாநில அரசும் கிட்டத்தட்ட அதே அளவு வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது. இதை எவரும் மறுக்க முடியாது. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.30 கூடுதல் வரி வசூலிக்கும் தமிழக அரசு, மத்திய அரசை காரணம் காட்டி பதுங்கிக் கொள்வதும், விலைகளைக் குறைக்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை.

திமுக அரசு அதன் தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தாமல் இருக்க பொய்யான காரணங்களைக் கூறக்கூடாது. எதிர்க்கட்சியாக இருந்த போது பெட்ரோல், டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய திமுக, இப்போது அதை எதிர்க்கிறது.

தேர்தலுக்கு முன் விலைகளைக் குறைப்பாதாகக் கூறிய திமுக இப்போது குறைக்க முடியாது என்கிறது. இது தான் இரட்டை வேடம்; இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்களை ஏமாற்ற அரசு முயலக்கூடாது".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்