மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக ஜல் சக்தி துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக மோர்தானா அணை உள்ளது. தமிழக - ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே, 11.50 மீட்டர் உயரத்துடன் கட்டப்பட்டுள்ள அணையில் 261.36 மில்லியன் கன அடிக்குத் தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும்.
தற்போது அணையில் 11.40 மீட்டர் உயரத்துக்கு 258.369 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதில், பயன்படுத்த இயலாத தண்ணீர் இருப்பு 31.225 மில்லியன் கன அடி போக, மீதம் உள்ள 227.144 மில்லியன் கன அடி நீரைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் நிலத்தடி நீராதாரத்தை உயர்த்தும் வகையில் அணையில் இருந்து இன்று (ஜூன் 19) தண்ணீர் திறக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), வில்வநாதன் (ஆம்பூர்), அமலு விஜயன் (குடியாத்தம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
10 நாட்கள் தண்ணீர் திறப்பு:
மோர்தானா அணையில் இருந்து அடுத்த 10 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜிட்டப்பள்ளி அருகே உள்ள பிக் அணை பகுதியில் உள்ள வலதுபுறக் கால்வாய் வழியாக விநாடிக்கு 75 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால், 12 ஏரிகளுடன் 25 கிராமங்களில் உள்ள சுமார் 3,935 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இடதுபுறக் கால்வாய் வழியாக விநாடிக்கு 75 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, 7 ஏரிகளுக்கும் 19 கிராமங்களில் சுமார் 4,227 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். பொதுக் கால்வாயில் ஆற்றில் நேரடியாக 100 கன அடிக்குத் தண்ணீர் திறக்கப்படுவதால், நேரடி பாசனம் மூலம் 110.580 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அணையின் மூலம் மொத்தம் 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, 19 ஏரிகள் மூலம், நேரடிப் பாசனமாகவும் 8,367 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னர், செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, "மேகதாது அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
மேகதாது அணையைக் கட்டக் கூடாது என்று பிரதமரை நேரில் சந்தித்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாகத் தெரிவித்தார். இந்த அணை பிரச்சினை தொடர்பாக விரைவில் தொடங்க உள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும் டெல்லிக்குச் சென்று ஜல் சக்தி துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச உள்ளேன்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago